[X] Close

குறைந்தது 10 மரங்களாவது நட்டு வையுங்கள்: பைக் பயணம் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அனாமிகா சைபி வேண்டுகோள்


10

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 17:23 pm
  • அ+ அ-

-பாரதி ஆனந்த்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 10 மரங்களையாவது நட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான அனாமிகா சைபி மேத்யூ.

இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம். இன்று சுற்றுச்சூழலை பாதுகாக்கப் பாடுபடும் பெண் குறித்து அறிந்து கொள்வது ஆகப் பொருத்தமானதாக இருக்கும்.

அனாமிகா சைபி மேத்யூ, தமிழகத்துக்கு அறிமுகமில்லாதவர் இல்லை. இருந்தாலும் இவரைப் பற்றிய சிறிய முன்னோட்டம் அளிப்பது இளம் தலைமுறையினருக்கு சிறிய உத்வேகமாவது அளிக்கும்.

அனாமிகாவுக்கு வயது 47. கணவர், 2 குழந்தைகள் என அளவான குடும்பம். தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். வசிப்பிடம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி. ஆனால் பிறப்பிடம் உதகை மாவட்டம் கூடலூர்.

திரும்பிய பக்கமெல்லாம் மலையும் வனமும் பசுமையும் பார்த்து வளர்ந்த அனாமிகாவுக்கு உதகையின் கான்க்ரீட் கட்டிடங்கள் ஒருகட்டத்தில் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இயற்கை அழிவதைக் கண்கூடாகத் தெரிந்தபோது அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது.

இயல்பாகவே அனாமிகாவுக்கு பைக் ஓட்டுவதில் அலாதிப் பிரியம். அதில் சாகசங்களும் செய்வார். அதனால், பைக் ஓட்டி இயற்கையைப் பாதுகாப்பது குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவு 2018-ல் இயற்கையுடன் இணைந்து பெண்மையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் 32 மாவட்டங்களையும் பைக்கில் உலா வந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திருக்கிறார். அதுவும் நின்றபடியே பைக் ஓட்டுவதுதான் இவரது தனித் திறமை.

தனது முன்னெடுப்பு குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் அவர் பகிர்ந்து கொண்டதாவது:

''ஆரம்பத்தில் நான் வெறும் பைக் சாகசம் மட்டுமே செய்தேன். பின்னர்தான் அத்துடன் இயற்கையைப் பேணுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.  2018-ல் இயற்கையுடன் இணைந்து பெண்மையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் 32 மாவட்டங்களையும் பைக்கில் உலாவந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன்.

2019-ல் பிப்ரவரி முதல் மார்ச் வரை ஒரு மாத காலம், ஊட்டியிலிருந்து சென்னை வரை பைக் பயணம் மேற்கொண்டேன். தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், மரம் வளர்த்து இயற்கையைப் பேண வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சாரம் செய்தேன்.

 

a2.JPG

எப்போதும் தனியாகத்தான் பிரச்சாரப் பயணம் செல்வேன். ஒருசில ஊர்களில் எனது நண்பர்கள், என்னைப் போன்ற இயற்கை ஆர்வலர்கள் என்னை வரவேற்பார்கள். அங்குள்ள அரசுப் பள்ளிகளில் மரம் வளர்ப்பது குறித்து பிரச்சாரம் செய்வேன். பொதுவாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில்தான் பிரச்சாரம் செய்வேன். ஏனெனில் அவர்களால்தான் உடனே ஒரு மரத்தை நட்டு கோரிக்கையை செயல்படுத்த இயலும். சில இடங்களில் தனியார் பள்ளிகளும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கும். எனது விழிப்புணர்வு பயணங்களுக்கு கொடையாளர்கள் யாரும் கிடையாது. பெட்ரோல் தேவை, வழிச்செலவு தேவையை நானேதான் ஏற்றுக் கொள்வேன். எனது இலக்கு எல்லாம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே.

a3.JPG 

சிலர் என்னிடம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செய்யும் நீங்கள் ஏன் சைக்கிளில் செல்லக்கூடாது என்று கேட்டனர். சைக்கிளில் வேகமாகச் செல்ல இயலாது பெரிய தூரத்தைக் கடக்க இயலாது. அதனாலேயே பைக்கில் செல்கிறேன் என எடுத்துரைத்தேன். மேலும், வளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அது ஏற்படுத்தும் பக்க விளைவுகளைக் குறைக்க முடியும். வாகனப் புகையால் காற்று மாசு ஏற்படும் என்றால் மரங்களை வளர்த்தால் அந்த மாசு கட்டுப்படும் அல்லவா? ஆனால், அதற்காக ஒரே வீட்டில் 4 பேர் 4 வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் துரோகம்.

ஒவ்வொரு நபரும் குறைந்தது 10 மரங்களையாவது நட வேண்டும். வீட்டில் வாய்ப்பில்லை என்றால். சாலையோரங்களில் இடம் தேடி மரங்களை நடலாம். மரங்களை நடுவதோடு நிறுத்திவிடாமல் அவற்றைப் பராமரிக்கவும் செய்ய வேண்டும். இதுவே இந்த நாளில் நான் மக்களுக்கு முன்வைக்கும் கோரிக்கை.

எனது குடும்பத்தினர் எனது கொள்கைக்கு எப்போதும் குறுக்கே நின்றதில்லை. ஆனால், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நகர்த்தும்போது சொந்த செலவில் மாதக்கணக்கில் இப்படி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தால் குடும்ப வருமானம் பாதிக்குமே என்று மட்டும் கேட்பார்கள்.

ஆனால், எல்லோருமே சுயநலத்துடன் இருந்துவிட்டால் யார்தான் பொதுநலம் காப்பது? என்று கேட்டுவிட்டு கடந்து செல்கிறேன்''.

இவ்வாறு சைபி மேத்யூ கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close