[X] Close

என் பாதையில்: பெண் என்றால் இவ்வளவுதானா?


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 09:33 am
  • அ+ அ-

நான் சீரியல்களைப் பார்ப்பதில்லை. ஆனால், சாப்பிடும் நேரத்தில் வேறு வழியில்லாமல் ஏதோவொரு சேனலில் ஏதாவது ஒரு சீரியலைப் பார்ப்பது வழக்கம். அப்படித் தொடர்ந்து சில சீரியல்களைப் பார்த்ததில் ஒரு விஷயம் ஆச்சரியப்பட வைத்தது. ஏறக்குறைய எல்லா சீரியல்களிலுமே வில்லியாகச் சித்தரிக்கப்படும் பெண், கதாநாயகியை வீட்டைவிட்டுத் துரத்தப்போவதாகச் சபதம் போடுகிறாள். ஒரு பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது அவளுக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக வலியுறுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றினால் அவள் அதிக வேதனை அடைவாள்; பல்வேறு பிரச்சினைகள் அழையா விருந்தாளிகளாக அவளிடம் ஓடிவரும். உண்மைதான். ஆனால், அவள் அப்படியே அதிலேயே துவண்டு நின்று விடுவாளா என்ன? தன் வாழ்வு அதோடு முடிந்துவிடவில்லை எனப் பதிலுக்கு நெஞ்சை நிமிர்த்தி போராடுவதுதானே பெண்ணின் இயல்பு? உண்மை இப்படி இருக்க, பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றினாலே அவள் காலியாகிவிடுவாள் என்ற கற்பனை எதற்கு?

இந்தக் காலத்தில் எத்தனையோ பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ்கிறார்கள். ‘சிங்கிள் மதர்’ என்ற லேபிள் ஒட்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்கள். ஒரு குடும்பத்துக்குத் தேவையான வெளி வேலைகள், வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு, அவர்களின் படிப்பு எனக் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமூகம் அவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அதையும் மென்று விழுங்கிவிட்டுத் தங்கள் பாதையில் கவனத்தைச் சிதறவிடாமல் செல்கிறார்கள். எல்லாக் காலத்திலும் எல்லா நேரத்திலும் பெண்ணுக்குத் துணிவு மட்டுமே துணை என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். அந்தப் புரிதல் அவர்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கிறது. அந்தத் தெளிவு அவர்களை வாழவைக்கிறது.

படித்த பெண்களுக்குச் சில குறிப்பிட்ட வேலைகள் என்றால், படிக்காத பெண்களுக்குப் பல வேலைகள் அவர்கள் முன் கைகட்டி நிற்கின்றன. செய்நேர்த்தியில் பெண்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. இன்னும் சொல்லப் போனால் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் புது உத்வேகம் பெற்று வைராக்கியத்துடனும் விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்து வாழ்வில் மேம்பட்ட நிலையை அடைகிறார்கள். அவர்களின் கணவன்களோ அநேகமாகப் பழைய நிலையில்தான் கிடப்பார்கள். ஒரு பெண்ணை வீட்டைவிட்டு அனுப்பினால் பலவிதங்களிலும் நஷ்டப்படப்போவது கணவன் வீட்டாரே. நிலைமை இப்படி இருக்க ஒரு பெண்ணை வெளியே அனுப்புவதை இன்னும் ஒரு கொடுமையாக சீரியல்களில் காட்டத்தான் வேண்டுமா? இது ஒரு பக்கம் என்றால் சீரியலில் பெரும்பாலான ஆண்கள் நல்லவர்களாகவும் பெண்களை வில்லியாகவும் சித்தரிப்பது எரிச்சல் தருகிறது. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற கற்பிதத்தைப் பல பிற்போக்கு சீரியல்கள் உண்மை என நம்பவைக்க முயல்கின்றன. அவற்றில் சில வெற்றியும் பெறுகின்றன. வீட்டுக்கு வீடு மாமியார் – மருமகள் சண்டைக்கு இதுபோன்ற சீரியல்கள் வித்திடுகின்றன. இனிமேலாவது கிணற்றுத் தவளைபோல் சுற்றிக்கொண்டு இருக்காமல் சின்னத்திரை படைப்பாளிகள் பெண்ணின் வலிமையை உணர்ந்து அவர்களின் கதாபாத்திரங்களைப் படைக்கட்டும். கதாசிரியர்களே, அந்தப் பாழுங்கிணற்றை விட்டு வெளியே வாருங்கள். உலகம் எவ்வளவோ மாறிவிட்டது; பெண்களும்தாம்!

- ஜே.லூர்து, மதுரை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close