[X] Close

அறிவியல் மேஜிக்: அணையும் மெழுகுவர்த்திகள்!


  • kamadenu
  • Posted: 29 May, 2019 09:44 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

நெருப்பு எரிய வேண்டும் என்றால் ஆக்சிஜன் தேவை அல்லவா? அது இல்லாவிட்டால் நெருப்பு என்ன ஆகும் என்று ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை?

# 3 மெழுகுவர்த்திகள்

# 2 கண்ணாடி டம்ளர்கள்

# தீப்பெட்டி

எப்படிச் செய்வது?

1. இரண்டு மெழுகுவர்த்திகளை அருகருகே தரையில் எடுத்து வையுங்கள். மூன்றாவது மெழுகுவர்த்தியைச் சற்றுத் தள்ளி வையுங்கள்.

2. தீப்பெட்டியை எடுத்து மூன்று மெழுகுவர்த்திகளிலும் ஒரே நேரத்தில் தீபத்தை ஏற்றுங்கள்.

3. தீபம் அழகாக எரிகிறதா? இப்போது 2 கண்ணாடி டம்ளர்களையும் எடுத்து, எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தி மீது ஒரே நேரத்தில் கவிழ்த்து வையுங்கள்.

4. எரிந்துகொண்டிருக்கும் 3 மெழுகுவர்த்திகளில் எது முதலில் அணைகிறது என்று பாருங்கள்.

5. இரட்டை மெழுகுவர்த்திகள் முதலில் அணைந்துவிட்டனவா? ஒற்றை மெழுகுவர்த்தி அணைய சற்று நேரம் பிடித்ததா?

இப்போது கேள்வி இதுதான். ஒரே நேரத்தில் கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்த பிறகு, இரட்டை மெழுகுவர்த்திகள் ஏன் முதலில் அணைந்தன? ஒற்றை மெழுகுவர்த்தி ஏன் அதன் பிறகே அணைந்தது?

காரணம்

நெருப்பு எரிய வேண்டும் என்றால் ஆக்சிஜன் தேவை. மெழுகுவர்த்திகளின் மீது கண்ணாடி டம்ளரை மூடியவுடன் அந்த இடத்தில் ஆக்சிஜன் குறைந்துவிடுகிறது. இதனால், மெழுகுவர்த்தி அணைந்துவிடுகிறது. இதில், இரட்டை மெழுகுவர்த்தி முதலில் அணைய, காரணம் என்ன தெரியுமா?

கண்ணாடி டம்ளரை மூடியவுடன், அந்த இடத்தில் இருக்கும் ஆக்சிஜனை இரண்டு மெழுகுவர்த்திகளும் வேகமாக எடுத்துக்கொள்வதால், விரைவாக ஆக்சிஜன் தீர்ந்து இரட்டை மெழுகுவர்த்திகள் முதலில் அணைந்துவிடுகின்றன. ஒற்றை மெழுகுவர்த்திக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைத்ததால், அது அடுத்ததாக அணைந்தது. இதன் மூலம் நெருப்பு எரிய ஆக்சிஜன் தேவை என்பதை அறியலாம்.

பயன்பாடு

தீ விபத்து ஏற்படும்போது, அதன் மீது மண்ணைக் கொட்டி அணைப்பதற்குக் காரணம், ஆக்சிஜனைக் குறைப்பதற்காகத்தான்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close