[X] Close

யு டர்ன் 21: லெகோ – கற்பனையாளர்களின் சொர்க்கபுரி!


21

  • kamadenu
  • Posted: 27 May, 2019 11:46 am
  • அ+ அ-

-எஸ்.எல்.வி.மூர்த்தி

உலகில் மாபெரும் யூ டர்ன் அடித்திருக்கும் கம்பெனி எதுவென்று கேட்டால், மேனேஜ்மென்ட் மேதைகள் தரும் பதில் லெகோ! இதோ அந்த வரலாறு.

லெகோ என்றால் என்னவென்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள். இதை ஆங்கிலத்தில் Brick என்று சொல்வார்கள்.

செங்கற்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டடங்கள் கட்டுவதுபோல், இந்தத் துண்டுகளைச் சேர்த்துப் பாலங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் மாடல்கள் செய்யலாம்.

லெகோவால் வரும் பல பலன்களைக் குழந்தை வளர்ப்பு மனோதத்துவ ஆலோசகர்கள் விவரிக்கிறார்கள் - தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய குழந்தைகளின் கற்பனாசக்தியைத் தட்டியெழுப்புகிறது; வயது வந்தோரையும் பாலகர்களாக்கி, மன அழுத்தம் குறைக்கிறது; பெற்றோரும், குழந்தைகளும் சேர்ந்து ஆட முடிவதால், குடும்பத்தில் நெருக்கத்தை அதிகமாக்குகிறது.

லெகோ இன்று உலகம் முழுக்கப் பிரபலம்.தமிழ்நாட்டிலும் வேரூன்றத் தொடங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டுத் தயாரிப்பு 19,000 கோடி லெகோ Bricks.

உலகெங்கும் நிழல் பரப்பியிருக்கும் இந்த பிரம்மாண்ட ஆலமரம், 1932 –ல், ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் (Ole Kirk Christiansen) என்னும் டென்மார்க் நாட்டு ஏழைத் தச்சனார் ஊன்றிய விதை.

டென்மார்க்கில், பில்லுண்ட் (Billund) என்னும் குட்டிக் கிராமம், வயல்கள். அவற்றை நம்பி வாழும் ஏழை விவசாயிகளின் குடிசைகள். இவர்களிலும் பரம ஏழை, நிலமே இல்லாத ஓலே கிர்க். கிராமத்து மக்கள் வீடுகளுக்குத் தேவையான மேசை, நாற்காலி போன்ற சாமான்கள் செய்துகொடுத்து வந்தார்.

பில்லுண்ட் வானம் பார்த்த பூமி. 1930. வானம் பொய்த்தது. வயல்கள் வறண்டன. குடிசைகளில் வயிறுகள் நிறைக்கவே பிரச்சினை. யார் மேசை, நாற்காலிகள் வாங்குவார்கள்? ஆடிய கால்களும், பாடிய வாயும், செதுக்கிய கைகளும் சும்மா இருக்கமுடியாது. மர பொம்மைகள் தயாரித்தார். ஓலே கிர்க்ச் செய்யும் தொழிலே தெய்வம். ஒவ்வொரு பொம்மையையும் கலைநயத்தோடு படைத்தார்.

வயலுக்குப் போகாமல் வீட்டில் இருந்த விவசாயிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் அற்புதமான பொழுதுபோக்கு. வயது வந்தோரும், சிறுவர், சிறுமிகளும் ரசித்து விளையாடினார்கள்.

சில சமயங்களில், சாப்பாட்டுக்காக வைத்திருந்த பணத்தில் பொம்மைகளை வாங்கினார்கள். டேனிஷ் மொழியில், leg godt என்றால், “நன்றாக விளையாடு” என்று அர்த்தம். மக்கள் இந்த பொம்மைகளுக்கு leg godt –ன் சுருக்கமாக, Lego என்று செல்லப்பெயர் வைத்தார்கள். இந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

அடுத்த சில ஆண்டுகள். டென்மார்க்கில் நல்ல மழை. வயல்களில் பொன்மணிக் கதிர்கள். விவசாயிகள் வீடுகளில் வசதிகள், சந்தோஷம். ஓலே கிர்க் தொழிலிலும் வசந்தம். பில்லுண்ட் கிராமத்தைத் தாண்டி வெளியூர்களிலிருந்தும் ஆர்டர் மழை. சமாளிப்பதற்காகச் சின்னப் பட்டறை தொடங்கினார். பல தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தினார். கம்பெனிக்கு ‘லெகோ’ என்று பெயர் வைத்தார். மகன் காட்ஃப்ரெட் (Godtfred) தொழிலில் அப்பாவுடன் சேர்ந்தார்.

ஓலே கிர்க்கின் வெறித்தனமான கொள்கை, தரத்தில் எந்தச் சமரசமும் செய்யக்கூடாது. நடந்தது ஒரு சம்பவம். தொழிற்சாலையில் வாத்து பொம்மை தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அவற்றுக்கு மூன்று முறை வார்னிஷ் அடிக்கவேண்டும் என்பது ஓலே கிர்க் வகுத்த நடைமுறை. மகன் செலவைக் குறைக்க நினைத்தார். இரண்டு முறை மட்டுமே வார்னிஷ் அடித்தார்.

வாடிக்கையாளருக்கு அனுப்பிவிட்டார். வெளியே போய்விட்டு வந்த அப்பாவுக்கு விஷயம் தெரிந்தது. எரிமலையாக வெடித்தார். மகனை உடனேயே ரெயில்வே ஸ்டேஷனுக்குத் துரத்தினார். பார்சலைத் திருப்பி வாங்கிவரச் சொன்னார். அந்த வாத்து பொம்மையைத் தொழிற்சாலையின் முன்னறையில் எல்லோரும் பார்க்கும்படியாக வைத்தார். தரமே தாரக மந்திரம் என்னும் முழக்கத்தை அனைவர்க்கும் நினைவுபடுத்தும் அடையாளம்.

யார் கண் பட்டதோ? அடுத்த பல வருடங்கள் சோதனை மேல் சோதனை. மனைவி திடீர் மரணம். நான்கு குழந்தைகளையும், அதிவேகமாக வளரும் பிசினஸையும் கவனிக்கும் நெருக்கடி. 1942. மின்சாரப் பழுது. ஃபேக்டரியில் தீப்பிடித்தது.

தொழிற்சாலை இயந்திரங்கள், தயாரான பொம்மைகள், மூலப்பொருட்கள், புதிய பொம்மைகளுக்கான வரைபடங்கள், அத்தனையும் அக்னி தேவனுக்கு விருந்தாயின. ஓலே கிர்க் மனம் உடைந்தது. ஆனால், விழுந்தவர் எழுந்தார். சில மாதங்களில் புதிய தொழிற்சாலையை எழுப்பினார்.

1946. பொம்மைகள் விற்பனை வேக வேகமாய் உயர்ந்தது. அதற்கு ஈடு கொடுக்கும்படியாக மரங்கள் கிடைக்கவில்லை. பொம்மைகளைப் பிளாஸ்டிக்கில் தயாரிக்கலாமா என்று ஓலே கிர்க் மனதில் எண்ண ஓட்டம். முக்கிய பிரச்சினை- அவர் கையிருப்புப் பணத்தைவிட இரண்டு மடங்கு முதலீடு தேவைப்பட்டது. ஏகப்பட்ட கடன் வாங்குவதற்கு உறவினர்களும், நண்பர்களும் தடைக்கல் போட்டார்கள்.

அவர்கள் சொன்ன இன்னொரு காரணம், அவர் தச்சுத் தொழிலில் கில்லாடி. ஆனால், பிளாஸ்டிக் பற்றி எதுவும் தெரியாதவர். ஓலே கிர்க் சிந்தித்துப் பார்த்தார். மர பொம்மைகள் மட்டுமே தயாரிப்பது, குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது.

பிசினஸில் வளர்ச்சி காண வேண்டுமானால், ரிஸ்க் எடுக்க வேண்டும், புதிய மூலப்பொருட்களை, புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றவேண்டும். எடுத்தார் முடிவு. வந்தன வண்ண வண்ண பிளாஸ்டிக் பொம்மைகள். சிறுவர், சிறுமிகள் மனங்களைக் கொள்ளையடித்தன. அமோக விற்பனை.

1954. ஓல் கிர்க் உடல்நிலை கெட்டது. கம்பெனியை மகன் கார்ட்ஃப்ரெட் (Godtfred) கைகளில் ஒப்படைத்தார். மகன் தந்தைக்காற்றும் கடமையாக, கம்பெனியைப் பதினாறடி பாயவைக்க விரும்பினார்.

என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று பற்பல சிந்தனைகள். திடீரென அவர் மனதில் ஒரு மின்வெட்டல். ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய பிளாஸ்டிக் Brick தயாரித்தால், சிறுவர் சிறுமிகள் பலவித வடிவங்களை உருவாக்கலாம், வெறும் பொழுதுபோக்கு பொம்மை என்பதைத் தாண்டி, கற்பனையை வளர்க்கும் சாதனமாகவும் இருக்கும் கனவு சரி. ஆனால், அதை நனவாக்கும் பாதை எத்தனை கரடுமுரடானது, கல்லும் முள்ளும் நிறைந்தது என்பதை கார்ட்ஃப்ரெட் உணரவில்லை. அடுத்த நாட்களில், கம்பெனி எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன தெரியுமா?

# பிளாஸ்டிக் Bricks, தங்கள் மேல் வரிசையாக வைக்கப்படும் Bricks களைத் தாங்கும் பலம் கொண்டவையாக இருக்கவேண்டும். அதே சமயம், குழந்தைகள் கையாள்வதால், எடை குறைவாக இருக்கவேண்டும்,

# ஒன்றோடொன்று கன கச்சிதமாகப் பொருந்தவேண்டும். இல்லாவிட்டால், உயரமான மாடல்கள் கட்டும்போது, அவை சரிந்துவிடும். அதே சமயம், பொருத்தம் மிக இறுக்கமாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் கைப்பிடி அழுத்தத்தில் பிரிக்கும்படியாக இருக்கவேண்டும்.

# Brick–களில் கூரான முனைகளும், மூலைகளும் இருக்கவே கூடாது. இவை குழந்தைகளுக்குக் காயங்களை ஏற்படுத்தும்.

# பிளாஸ்டிக்கில் உடல்நலம் பாதிக்கும் கெமிக்கல்கள் இருக்கவே கூடாது. ஆயிரக்கணக்கான வரைபடங்கள், தொழிற்சாலையில் பலவகைப் பிளாஸ்டிக் மூலப்பொருட்களோடு பரிசோதனைச் சாலை ஆராய்ச்சிகள், சோதனை உற்பத்திகள், தண்ணீராய் ஓடிய பணம். அப்பா கட்டிய மாளிகையை மகன் பொறுப்பே இல்லாமல் தரை மட்டமாக்குகிறான் என்று நான்கு பேரின் விமர்சனங்கள், கேலிகள்.

தன் இலக்கு எதுவென்று கார்ட்ஃப்ரெடுக்குத் தெளிவு. விடாக்கண்டராகத் தொடர்ந்தார். அத்தனை கடின நிபந்தனைகளுக்கும் ஏற்றதாய், ஏபிஎஸ் (ABS) என்னும் பிளாஸ்டிக்கில் 1955 –ல்

முதல் லெகோ உருவானது. எவ்வளவு பலம் தெரியுமா? 2.7 மைல்கள் உயரத்துக்கு அதன்மேல் லெகோக்களை அடுக்கினாலும், கீழே இருக்கும் லெகோ உருவம் மாறாது, உடையவே உடையாது. கார்ட்ஃப்ரெட் இன்னொரு புதுமை செய்தார். ரெயில்கள், தீயணைப்பு வண்டிகள், டிராக்டர் போன்ற பல்வேறு வடிவங்களை உருவாக்கும் செட்களாக விற்பனை செய்தார்.

அமெரிக்கா  லெகோவை, பொம்மை உலகின் புரட்சிப் படைப்பு என்று தலைமேல் வைத்துக் கொண்டாடியது, சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. அடுத்த சில வருடங்கள். விற்பனை ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பானது.

தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் மேலும் மேலும் வளர்வதைக் கண்ட பெருமிதத்தோடு ஓலே கிர்க் 1958–ல் மரணம். மகன் கார்ட்ஃப்ரெட் தொடர்ந்து வகை வகையான வடிவங்களை வடிவமைத்தார். டென்மார்க், பிற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆசியா என உலகின் பல்வேறு பாகங்களில் லெகோ கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. 21 வருடங்கள் ஆட்சி நடத்திய அவர், 1979–ல், தன் 84 –ம் வயதில் மகன் ஜெல்ட் (Kjeld) கைகளில் பொறுப்பைத் தந்தார்.

தாத்தா, அப்பா போல் பேரனும் மகா திறமைசாலி. கற்பனையின் உச்ச மாடல்கள் களத்துக்கு வந்தன. விற்பனையும் சிகரங்களைத் தொட்டது.

1988. லெகோவின் 58 வருட வரலாற்றுப் பாரம்பரிய அடித்தளத்தை ஆட்டம் காணவைக்கும் பிரச்சினைகள்…..

(புதிய பாதை போடுவோம்!)

slvmoorthy@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close