[X] Close

வாழ்ந்து காட்டுவோம் 07: கருவுற்றபெண்ணுக்குக் கைகொடுக்கும் திட்டம்


07

  • kamadenu
  • Posted: 26 May, 2019 09:59 am
  • அ+ அ-

-ருக்மணி

பெண்களின் படிப்புச் செலவைவிட அவர்களது திருமணச் செலவும் அதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு அடுத்தடுத்து வரும் சீர் செனத்தி செலவுகளும் முதல் பேறுகாலச் செலவும் பெண்களின் பெற்றோருக்குத் தொடர்ச்சியாகப் பொருளாதாரரீதியில் சோர்வைத் தரும்.

பெரும்பாலும் கிராமப்புறப் பெண்கள் வயற்காட்டில் கூலி வேலை செய்தே வருமானம் ஈட்டுவார்கள். கர்ப்பம் தரித்தால்கூட ஓய்வு எடுக்காமல் வேலைக்குப்போக வேண்டிய நிலையில் பல பெண்கள் உள்ளனர்.

சிறு வயது முதலே பெண்களை வளர்க்கும்போது ஒரு பக்கம் இரண்டாம்தரக் குடிமகளாக நடத்தும் சமூகம் அவர்களை எப்போதும் தியாகிகளாகவே வாழ நிர்ப்பந்திக்கிறது. இதனால்தான் பெண்களும் அன்றாடச் சாப்பாட்டில் தொடங்கி, பல்வேறு விஷயங்களில் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளின் அவசியத்தை உணராமலேயே வாழ்கிறார்கள்.

கருவுற்ற பெண்களும் இதற்கு விதிவிலக் கல்ல. அவர்களும் வீட்டில் அனைவரும் சாப்பிட்டது போக எஞ்சியிருக்கும் உணவையோ  ஊட்டச்சத்து இல்லாத எளிய உணவையோ சாப்பிடுகிறார்கள். இது கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிக்கிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகள் சராசரி எடையான மூன்று கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாகவே பிறக்கின்றன.

குழந்தையின்  வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து தாய்ப்பாலிலிருந்தோ போதுமான இணை உணவிலிருந்தோ கிடைப்ப தில்லை. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடும். இன்னும் சில குழந்தைகளோ முதல் பிறந்தநாளைக்கூடக் காணாமல் இறந்துவிடுகின்றன.

நல்ல ஊட்டச்சத்தும் போதுமான ஓய்வும் கிடைக்கும் கர்ப்பிணிக்குத்தான் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அதற்காக வேலைக்குப் போகாமலும் இருக்க முடியாது; வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும். 

வருமானம் இல்லையென்றால் ஊட்டச்சத்து மிக்க உணவு கர்ப்பிணிக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலையும் ஏற்படும். இதனால், கருவிலுள்ள சிசுவும் போதிய வளர்ச்சி இல்லாமல் குறைப்பிரசவமாகவோ குறைவான எடையுடனோ பிறக்க நேரிடும்.

ஒரு நாட்டை வளர்ச்சியடைந்த நாடு என முன்னிறுத்தும் காரணி களில் குறைவான சிசு மரண விகிதம், பேறுகால மரண விகிதம் ஆகியவை முதன்மையாக எடுத்துக்கொள்ளப்படும். எனவேதான், அரசு இவற்றில் அதிகக் கவனம் செலுத்தி  அவற்றின் மேம்பாட்டுக்கெனப் பலவிதத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அவற்றில் ‘டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்ட’மும் ஒன்று.

முதல் இரண்டு குழந்தைகளின் கர்ப்ப காலச் செலவுக்காக ஏழைக் கர்ப்பிணிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.18,000 ஐந்து தவணைகளாக வழங்கப்படுகிறது.

கருவுற்றிருக்கும் பெண்கள், அவர்கள் குடியிருக்கும் அந்தந்தக் கிராமத்தின் கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர்ப்பகுதி சுகாதார நிலையத்தில் பணிபுரியும் நகர சுகாதார செவிலியரைத்தான் ஆரம்ப நிலையிலிருந்தே அணுக வேண்டும்.

கர்ப்பத்தை உறுதிசெய்து ‘பிக்மி எண்’ணைக் குறித்து, தாய் சேய் நல அட்டை கொடுப்பதிலிருந்து அனைத்து கர்ப்ப காலப் பரிசோதனைகள், தடுப்பூசிகள், பிரசவம், குழந்தைக்குரிய தடுப்பூசிகள் ஆகிய அனைத்து சேவைகளையும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை அல்லது நகர் நல மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனையில்  செய்திருந்தால் மட்டுமே  சுகாதார செவிலியர் மருத்துவ அலுவலருக்குப் பரிந்துரை செய்வார்.

மருத்துவ அலுவலர் அந்த உதவித்தொகையை  ஒப்பளிப்பு செய்த பின்னர், கர்ப்பிணியின்  வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப்பட்டுவிடும். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், எந்த மருத்துவமனை சுகாதார செவிலியரிடம் பதிவு செய் தோமோ அவரிடமோ உரிய மருத்துவ அலுவலரிடமோ புகார் அளிக்கலாம்.

தாய் - சேய் இருவரின் உடல் நலத்துக் கான தொடர் கண்காணிப்பு என்பதை மனத்தில் இருத்திக்கொண்டு அரசு மூலம் பெறும் இந்த இலவச மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மறக்கக் கூடாதவை

அரசு மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட உதவித்தொகை இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

கருக்கலைப்புக்கோ தானாகவே உண்டாகும் கருச்சிதைவுக்கோ மேற்கண்ட உதவித்தொகை பெற இயலாது.

விதிமுறைகள்

கர்ப்பிணிக்கு 19 வயது நிறை வடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.72,000-க்குக் கீழ் இருக்க வேண்டும். கர்ப்பிணியின் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.

 

முதல் தவணையில் உதவி பெற:

# கருவுற்ற 12 வாரத்துக் குள் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவுசெய்து ‘பிக்மி எண்’ பெற்றிருந்தால், ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

# மூன்றாம் மாத நிறைவில் ரூ.2,000 மதிப்புடைய ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் வழங்கப்படும்.

இரண்டாவது தவணையில் உதவி:

# ஏழாவது மாதத்துக்குள் ரத்தப் பரிசோதனைகள், எச்.ஐ.வி. பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, டி.டி. தடுப்பூசி, உடல் எடை எடுத்தல் போன்றவற்றைச் செய்திருக்க வேண்டும்.

# குறைந்தது மூன்று முறை கர்ப்ப காலப் பரிசோதனைகளைச் செய்திருக்க வேண்டும்.

# குறைந்தது ஒரு முறையாவது ஸ்கேன் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

# மேற்கண்ட  பரிசோதனைகளை அரசு மருத்துவ மனைகளில் செய்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்படும். ரூ.2,000 மதிப்பு டைய ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகம் வழங்கப்படும்.

மூன்றாவது தவணையில் ரூ.4,000 பெறுவதற்கு:

# அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்.

# விண்ணப்பப் படிவ நகலை ‘பிக்மி எண்’ணோடு அரசு மருத்துவ மனையில் காண்பிக்க வேண்டும்.

நான்காவது தவணையில்

ரூ.4,000 பெறுவதற்கு:

# குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் நகலைக் கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர சுகாதார செவிலியரிடம் கொடுத்திருக்க வேண்டும்.

# குழந்தைக்கு மூன்றாவது தவணை டிபிடி தடுப்பூசி, மஞ்சள்காமாலை தடுப்பூசி அல்லது மூன்றாவது தவணை பெண்டாவேலண்ட் தடுப்பூசி போட்ட விபர அட்டையின் பதிவைக் காண்பிக்க வேண்டும். 

ஐந்தாவது தவணையில் ரூ.2,000 பெறுவதற்கு:

# குழந்தைக்கு ஒன்பதிலிருந்து 12 மாதத்துக்குள் எம்.ஆர். தடுப்பூசி போட்ட பிறகு ரூ.2,000 வங்கிக்

கணக்கில் செலுத்தப்படும்.

# இவ்வாறு ஐந்து தவணைகளில் ஒரு கர்ப்பிணிக்குக் கர்ப்பகால நிதி உதவியாக ரூ.18,000 வழங்கப்படுகிறது.

ரூ.2,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசுப் பெட்டகப் பொருட்களின் பட்டியல்:

# கர்ப்பிணிக்கான ஊட்டச்சத்து மாவு – 1 கிலோ

# இரும்புச்சத்து திரவம் (200 மி.லி.) - 3 பாட்டில்

# உலர் பேரீச்சம்பழம்  - 1 கிலோ

# புரதச்சத்து பிஸ்கட் - 500 கிராம்

# ஆவின் நெய் - 500 கிராம்

# ஆல்பெண்ட்சோல்

(குடற்புழு நீக்க மாத்திரை) - 1

# துண்டு - 1

# பொருட்கள் வைப்பதற்கான பிளாஸ்டிக் கூடை - 1

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: somurukmani@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close