[X] Close

வாசிப்பை நேசிப்போம்: சமத்துவம் தரும் வாசிப்பு


  • kamadenu
  • Posted: 26 May, 2019 10:00 am
  • அ+ அ-

சிறு வயது முதலே எனக்குப் பாடப் புத்தகங்களைப் படிப்பதைவிடக் கதைப் புத்தகங்களைப்  படிப்பதில்  மிகுந்த ஆர்வம். வயது ஏற ஏற எல்லாப் புத்தகங்களையும் படிப்பதில்  ஆர்வம் அதிகமானது.  ஊரில் எங்கே புத்தகக் காட்சி நடந்தாலும் சென்றுவிடுவேன்.

எனக்குப் பிடித்த நூலாசிரியர்களின் புத்தகங்களை வாங்கி  வருவேன். ஜெயகாந்தன், சுஜாதா, புதுமைப்பித்தன் ஆகியோரின் நாவல்கள், கவிக்கோ அப்துல் ரகுமானின் புத்தகங்கள், ராபின் குக், சிட்னி ஷெல்டன் ஆகியோரின் ஆங்கில நாவல்கள் போன்றவை எனக்குப் பிடித்தவற்றில் சில. 

இப்படிப் புத்தகங்களை வாங்கி வீட்டில் ஒரு வாசகசாலையையே உருவாக்கிவிட்டேன். மென்பொருள் பொறியாளரான எனக்குப் பணியினால் ஏற்படும் பதற்றம், மன அழுத்தம், மனச் சோர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட வாசிப்பே வடிகாலாக இருக்கிறது.

டி.வி., ஸ்மார்ட் போன் போன்றவற்றில் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் புத்தக வாசிப்பில் இல்லை என்பது வாசிப்பால் கிடைக்கும் கூடுதல் நன்மை!

- வி. ப்ரீத்தி, ஊரப்பாக்கம், சென்னை.

வாசிக்கும் பழக்கமே பிறரைச் சமத்துவத்தோடும் தோழமையோடும் நடத்தத் தூண்டுகிறது. இன்று சமுதாயத்தில் நிலவும் வேற்றுமைகளுக்கும் இன்னல்களுக்கும் பாடப்புத்தகம் தாண்டி வாசிக்கப் பழக்காததே காரணம்.

அம்பேத்கர் எழுதிய, ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் புத்தகத்தை அண்மையில் வாசித்தேன். இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. ஆழமாகவும் நுணுக்கமாகவும் கருத்துகளை எடுத்துவைப்பதில் அம்பேத்கருக்கு நிகர் அவரே! இந்தியப் படிநிலை சமூக அமைப்பை ஒரு கோபுரத்தோடு ஒப்பிட்டுக் கீழ்நிலையில் பஞ்சமர் எனப்படும் உழைக்கும் வர்க்கமும் அதற்கு மேலே வர்ணாசிரம வரிசைப்படி உயர் சாதி எனப்படும் பிற  சமூகங்களும் உள்ளன.

அவை எண்ணிக்கையின் அடிப்படையிலும் சமூக அந்தஸ்தின் அடிப்படையிலும்  அமைத்திருக்கும் சூழ்ச்சியை அம்பேத்கர் விளக்குகிறார். வேண்டுதலின் மூலமோ மன்றாடுதலின் மூலமோ தம் அடிமை நிலையை யாரும் மாற்றிக்கொள்ள இயலாது என்ற தீர்வையும் அவர் முன்வைக்கின்றார். வாசிப்பின் மூலம் வலுப்பெறும் சமூகம், சமத்துவத்தோடு வாழும் என்பதற்காகவே முதலில் ‘கற்பி’ என்று சொன்னார் அம்பேத்கர்.

- ஆதி முதல்வன், அரூர், தருமபுரி.

இறையன்பு எழுதிய ‘நரிப்பல்’ நூலைத் சமீபத்தில் வாசித்து முடித்தேன். அதில் ‘இரங்கல்’ எனும்  தலைப்பில் இருந்த சிறுகதை என்னைக் கவர்ந்தது. நேர்மையான நகராட்சி கமிஷனர், எல்லையில் எதிரிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரருக்குக் கொண்டு சென்ற மாலையைச் சாக்கடை அடைப்பை நீக்கும்போது விஷவாயு தாக்கி இறந்த முனியாண்டிக்குப் போட்டு மரியாதை செய்கிறார்.

அதைப் படித்ததும் மனம் திருப்தி அடைந்தது. வாசிப்பு, உற்சாகம் தரும் கலை. புதுப்புது எண்ணங்களால் இதயத்தை முடுக்கிவிடுகிறது. ஜன்னல் வழியாகச் சமூகத்தை எட்டிப்பார்க்காமல் களத்தில் இறங்கவைக்கிறது.

சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொடுக்கிறது. புல்வெளி, மரங்கள், பறவைகள் என உற்சாகத்துடன் பயணம் செய்ய வைக்கிறது. கவலைகளைப் புறந்தள்ளுகிறது. வயதாகிவிட்டது என்று வருந்தாமல் இளமை உணர்வுக்கு வாசிப்பே ஊக்கம் தரும் மருந்து.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங் களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங் களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close