[X] Close

வெற்றி பெறுவேன் என்று நம்பினேன்; மக்கள் புரிந்து கொள்வார்கள்: ’நாம் தமிழர்’ காளியம்மாள்


  • kamadenu
  • Posted: 25 May, 2019 17:43 pm
  • அ+ அ-

-இந்து குணசேகர்

தனது 10 வருட அரசியல் பயணத்தில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது கட்சி தொடங்கி  ஒரு வருடம் கூட நிறைவடையாத மக்கள் நீதி மய்யம் (3.72%), நாம் தமிழர் கட்சிக்கு (3.89%)இணையான வாக்கு சதவீதத்தை இந்த மக்களவைத் தேர்தலில் பெற்றுள்ளது.

களத்தைக் காட்டிலும், சமூக வலைதளங்களில்  நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பலமாகவே இருந்தது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்களிடமும், இளைஞர்களிடமும் அக்கட்சி ஆதரவைப் பெற்றிருந்தது.

இருந்த போதிலும் தமிழகத்தில் பரவலாக இருந்த மோடி எதிர்ப்பை பிரதானமாக கையில் எடுக்காமல் தொடர்ந்து திராவிடக் கட்சிகள் மீது அதுவும் குறிப்பாக திமுக மீது அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தீவிரமான விமர்சனத்தை வைத்தது தவறான நகர்வு என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியதற்காக  சீமான் பரவலாகப் பாராட்டப்பட்டார். (இதில் நீலகிரி வேட்பாளர் மணிமேகலை வேட்புமனு நிராகரிக்கப்பட்டது)

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 16.45 லட்சம் வாக்குகளைப் பெற்றது. 3.89 வாக்கு சதவீதம்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர வேட்பாளராக அறியப்பட்ட வடசென்னை வேட்பாளர் காளியம்மாளிடம் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசினோம்.

தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

நிச்சயம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு வியப்பை அளித்திருக்கிறது. ஏனென்றால் மிகவும் கஷ்டப்பட்டு பணி செய்து மக்களோட மக்களாக நின்று பிரச்சினைகளைக் கண்டறிந்தும் அவர்களோடு நின்றும் வாக்கு குறைவாக கிடைத்திருக்கிறது. ஆனால், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாத களத்தில் நிற்காதவர்களுக்கு வாக்கு கிடைத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு எங்கு சரிவு ஏற்பட்டுள்ளது?

சரிவு என்று ஒன்று இல்லை. என்னைப் பொறுத்தவரை வடசென்னையில் நான் எதிர்பார்த்த மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு வந்திருக்கிறது. மற்ற மூன்று தொகுதிகளில் வாக்கு எதிர்பார்த்தபடி இல்லை. அங்குதான் மக்கள் நீதி மய்யம் வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம் அவர்கள் வாக்கு உயர்ந்துவிட்டது.  எல்லா தொகுதிகளிலும் நாங்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.

சினிமா நடிகர், விளம்பரம் என்று மக்கள் வாக்களித்து விட்டார்களா? இதில் மக்கள் எந்த நிலைப்பாட்டில் வாக்க ளித்தார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே வாக்கு சதவீதம் உங்களுக்கு அதிகம் கிடைத்துள்ளது. சுமார் 6.33% பெற்றுள்ளீர்கள் அதுபற்றி?

நிச்சயம் மகிழ்ச்சிதான். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் வெல்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 3 சுற்று செல்லும்போதே திமுகதான் வெல்லும் என்று தெளிவாகிவிட்டது.

ஆனால், மக்கள் நீதி மய்யம் பெற்ற ஒரு லட்ச வாக்குகளையாவது நான் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 60,515  வாக்குகள் மட்டுமே பெற்றதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை பலமாக இருந்தும் சீமான் திராவிடக் கட்சிகளையே விமர்சித்தார். தற்போது இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது பற்றி?

திராவிடக் கட்சிகளுக்கு விழுந்த எந்த வாக்கும் அந்தக் கட்சிகளுக்காக விழவில்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற விரக்தியில் திமுகவுக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள்.

எந்தத் திட்டங்களை அவர்களது கூட்டணிக் கட்சி கொண்டு வந்ததோ அதனை நீக்குவோம் என்று கூறினார்கள். இதே தேர்தல் அறிக்கையைத்தான் அவர்கள் சென்ற வருடமும் கொடுத்திருந்தார்கள்.

திமுகவுக்கு விழுந்த வாக்குகள் அவர்களுக்கானதல்ல.

நாம் தமிழர் கட்சியில் உங்கள் எதிர்காலத் திட்டம்?

நான் அதற்கான ஆலோசனையில்தான் அமர்ந்திருக்கிறேன். நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான திட்டம் என எங்கள் திட்டமிடல் சென்று கொண்டிருக்கிறது. வாக்கு ஏன் குறைந்து விட்டது என்று நாங்கள் ஆலோசிக்கவில்லை.

யார் மக்களுக்கானவர்கள் என்பதை இன்னும் கொஞ்ச வருடத்தில் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் 'பிக் பாஸ்' நடத்தச் சென்று விடுவார். வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்று விடுவார்கள். யார் மக்களோடு நிற்பார்கள் என்று மக்கள் பார்ப்பார்கள் அல்லவா?

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close