[X] Close

அஞ்சலி: பசுமைச் சிந்தனைக்கு அடித்தளமிட்ட தமிழர்


  • kamadenu
  • Posted: 25 May, 2019 11:51 am
  • அ+ அ-

-பாமயன்

தூய வெள்ளாடை, புன்னகையை மெல்ல வெளியிடும் கூரிய கண்கள், பளிச்சிடும் கண்ணாடி, நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரம் என்று ஒரு கம்பீரமான ஆளுமை முகம்மது இத்ரீஸ்.

நெடுஞ்செழியனின் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பில் இயங்கிபோது, 90-களின் பிற்பகுதியில் முதன்முதலில் அவரை நான் சந்தித்தேன். பார்த்தவுடன் இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் வசீகரம்மிக்க ஒரு முகம்.

மற்றொரு முறை அவரைச் சந்தித்தபோது, ‘நான்தான் உண்மையான தமிழன், பாருங்கள் நான் வேட்டி உடுத்தி இருக்கிறேன், நீங்கள் பேண்ட் அணிந்துள்ளீர்கள்' என்றபடியே மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினார்.

அப்போது அருகில் ‘இந்திய உயிர்ம வேளாண்மை அமைப்பின்’ நிறுவனரும் சமூகச் செயற்பாட்டாளருமான கிளாட் அல்வாரெஸும் நின்று கொண்டிந்தார். கோவாவைச் சேர்ந்த அவரும் வேட்டி அணிந்திருந்தார். அந்த இடத்தில் பெரும் சிரிப்பலை எழுந்து அடங்க சற்று நேரமாயிற்று.

ராமநாதபுரத்தின் பேராளுமை

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிற்றூரான தினைக்குளத்தில் 1926-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் பிறந்தவர் இத்ரீஸ்.

தமிழில் தனது தொடக்கக் கல்வியை முடித்து மலேசியாவுக்கு அவருடைய தந்தையுடன் வணிக நிமித்தம் குடிபெயர்ந்து, போரின் காரணமாக மேலே படிக்க இயலாதபோதும் பெரும் ஆளுமையாக வளர்ந்தவர்.

‘பினாங்கு பயனீட்டாளர் அமைப்பைத்’ தோற்றுவித்தவர் என்பதோடு நுகர்வோர் உரிமை பற்றியும், சூழலியல் அக்கறை குறித்தும் 1970-களிலேயே பேசியவர். பினாங்கில் நகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். தன்னார்வ இயக்கங்கள், செயல்பாட்டு இயக்கங்களாக உருவாவதற்கான முன்னத்தி ஏர்களில் ஒருவர்.

தமிழகத்தின் முன்னோடி இயக்கமான நெடுஞ்செழியனின் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்புக்கு எண்ணற்ற கருத்துக் கொடைகளை வழங்கியவர் இத்ரீஸ். நெடுஞ்செழியனும் இத்ரீஸும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

நுகர்வோர் என்ற சொல்லைவிடப் பயனீட்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி ‘பினாங்கு பயனீட்டாளர் குரல்’ என்ற இதழை நடத்தி வந்தார். ‘சீனி ஒரு வெள்ளை நஞ்சு’, ‘உங்கள் சிறு செயலும் சூழலைப் பாதுகாக்கும்’ முதலிய அந்த அமைப்பின் சிறு நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

மூன்றாம் உலகக் குரல்

‘மூன்றாம் உலக வலைப்பணியம்’ என்ற அமைப்பை உருவாக்கியவர். இது மலேசியா, சீனா, இந்தியா என்று பல நாடுகளில் தனது முத்திரையைப் பதித்து, மூன்றாம் உலக நாடுகளின் சிக்கல்களைப் பற்றிக் குரல் கொடுத்து வருகிறது.

தேர்டு வேர்ல்ட் ரிசர்ஜென்ஸ் (Third World Resurgence) என்ற புகழ்பெற்ற இதழைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். சூழலியல், நுகர்வோர் உரிமை, மனித உரிமை, வெள்ளை ஆதிக்க எதிர்ப்பு என்று பல தளங்களில் இது பணியாற்றுகிறது.

மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாகக் குடியேற்ற ஆதிக்க (colonialism) ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளின் கருத்தியல் முற்றிலும் மேற்கத்தியமயமாகிவிட்டது. அவர்களின் மரபார்ந்த கருத்தியல் சிதைக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கருதினார்.

அதற்கு மாற்றாக உண்மையான பல்கலைக்கழகம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு உலகளாவிய ஒத்த சிந்தனை உள்ளவர்களைத் திரட்டி பல்கலைக்கழகம் (multivarsity) ஒன்றை உருவாக்கினார். இப்போது உள்ளது ஒருங்கலைக் கழகங்கள் (universities) என்பது அவரது கருத்து.

தமிழ், ஆங்கிலம், மலாய் முதலிய மொழிகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சிறிய, நுட்பமான வெளியீடுகள். தேசங்களிடை குடிமக்கள் (Citizens International), வெள்ளை ஆய்வுகள் (white studies), உணர்வை நோக்கிய அடிப்படை அழைப்பு என்ற சிறுநூல் தென்னமெரிக்க/லத்தீன் அமெரிக்கப் பழங்குடி மக்களின் குரலைச் சிறப்பாக வெளிப்படுத்தியது. புரட்சிகரத் தேவை சிறுநூல்கள் (radical essential pamphlet series) என்ற வரிசை நூல்கள் சிந்தனையைப் புரட்டிப் போடுபவை.

வழிகாட்டி

‘ஒளியார் முன் ஒள்ளியராதல் வெளியார் முன்வான்சுதை வண்ணங்கொளல்' என்ற வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, எளிய மனிதர்களிடம் எளிமையாகவும் பெரும் அறிஞர்களிடையே சிந்தனைச் சிற்பியாகவும் விளங்கியவர் இத்ரீஸ். ‘பொருள்வயச் சிந்தனைகளுக்கு அடிமைப்படாத விடுதலைச் சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த நோய்களுக்கும் இடங்கொடுக்காமல் 93 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த சிந்தனையாளர், செயல்பாட்டாளர், ஒழுக்க சீலர் அவர். இப்படி நற்குணங்களைக் கொண்ட இந்த மாமனிதரின் பெயரை ஒரு பூங்காவுக்கு மலேசியா அரசு சூட்டவுள்ளது. அவரது வாழ்க்கை எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

கட்டுரையாளர்,

இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close