[X] Close

ஞெகிழி பூதம் 17: மண்ணும் செரிக்காத பொருள் ஞெகிழி


17

  • kamadenu
  • Posted: 25 May, 2019 11:49 am
  • அ+ அ-

-கிருஷ்ணன் சுப்ரமணியன்

மண்ணுக்கு உயிர் உண்டு. ஒரு பழத்தை வீசி எறிந்தால், அதில் உள்ள சதையை மண் தின்று செரித்துவிடும், ஆனால் விதையைச்  செரிப்பதில்லை. செடியாக வளர்த்து எடுத்துவிடும்.

இப்படி எதையெதை எப்படிக் கையாள வேண்டும் என்ற தெளிவு கொண்ட மண்ணைத்தான் நாம் 'ஒண்ணுமில்லாத மண்ணு' என்று சொல்லி கேலி செய்கிறோம். சிமெண்டும் செங்கல்லும் கொண்டு மண்ணை மூடி கட்டிடத்தைக் கட்டுவதே வளர்ச்சி என்ற கருத்து நம் தலையில் திணிக்கப்பட்டுள்ளதே இதற்கு அடிப்படைக் காரணம்.

ஆனால், மண்ணில் தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பொருட்களை மண் சீண்டுவதில்லை. அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு விட்டுவிடுகிறது. அந்த ஞெகிழிக் கழிவை மண்ணுக்குப் பிரச்சினை அற்றதாக மாற்றுவது நமது கடமையாகி விடுகிறது. அந்த கடமையை நாம் எப்படி சரியாக நிறைவேற்றுவது?

மறு சுழற்சி

உலகில் மண் சீண்டாத ஒரு பொருளை வேறு எதுவும் கரைத்துவிடுவது இல்லை. அமிலத்தைக் கொண்டு கரைத்தாலோ தீயைக் கொண்டு எரித்தாலோ அது மண்ணிலும் காற்றிலும் நஞ்சைச் சேர்க்கும்.

 ‘எல்லாவற்றுக்கும் நான் இருக்கிறேன், நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என்று சொல்லும் அறிவியலோ புதிதாக ஞெகிழியைச் சாப்பிடும் நுண்ணுயிரியை உருவாக்குகிறேன் என்று ‘வாலு போய் கத்தி வந்த குரங்கு கதையை’ ஞாபகப்படுத்துகிறது. அப்படியானால் என்னதான் செய்வது?

ஞெகிழிப் பொருட்களை உருவாக்காமல் இருப்போம். முடியாதா? வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கெனவே, உற்பத்தி செய்யப்பட்ட நச்சுப் பொருளான ஞெகிழியை அழித்துவிடாமல் மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்வதே ஒரே வழி.

அந்த நஞ்சைத் தப்பித் தவறிக்கூட மண்ணுக்கு அருகில் நெருங்கவிட்டுவிடக் கூடாது. ஆலைகளில் வைத்து மீண்டும் மீண்டும் உருக்கி, ஏதாவது ஒன்றாக உருமாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

குப்பையைப் பிரிப்போம்

அதற்கு நாம் செய்ய வேண்டிய அவசியச் செயல்பாடு வீட்டில் குப்பையைப் பிரிப்பது. மொத்தமாக ஒரு வாளியில் குப்பையைப் போட்டு அதைத் தெருமுனை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ‘ஸ்வச் பாரத்’ என்று முழக்கமிட்டுவிட்டு வீடு திரும்பி விடாதீர்கள்.

நாள்தோறும் இப்படி ஒவ்வொருவரும் சராசரியாக உருவாக்கும் 200 கிராம் ஞெகிழி குப்பையின் அளவு எவ்வளவு இருக்கும்? ‘நான்தான் ஞெகிழிப் பையைப் பயன்படுத்துவது இல்லையே, பின்னர் எப்படி ஞெகிழிக் குப்பை சேரும்’ என்று கேட்கிறீர்களா? பிஸ்கட் கவர், மசாலாத் தூள் பாக்கெட், தண்ணி கேன் மூடி, உடைந்து போன பொம்மை, ரயில் பயணத்தில் வாங்கிய தண்ணீர் பாட்டில் என்று எத்தனையோ வகையில தினமும் ஞெகிழிக் குப்பையைச் சேர்த்துக்கொண்டே தானே இருக்கிறோம்!

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close