[X] Close

ஐஸ்க்ரீம்... நல்லதா கெட்டதா?


  • kamadenu
  • Posted: 24 May, 2019 11:39 am
  • அ+ அ-

ஜெமினி தனா

பிரணவ் அனிதா தம்பதியின்  ஐந்து வயது மகள் மோனிஷாவுக்கு ஐஸ்க்ரீம் என்றால் உயிர்.  குளிக்க அடம்பிடித்தால் ஐஸ்க்ரீம், செல்ஃபோன் கேட்டு அடம்பிடித்தால் ஐஸ்க்ரீம். அழும்போது சிரிக்க வைக்க ஐஸ்க்ரீம், சாப்பிட வைக்கவும் ஐஸ்க்ரீம் என்று  அன்றாடம் நாளொரு ஐஸ்க்ரீமும் பொழுதொரு ஃப்ளேவருமாகக் கொண்டு வளர்க்கப்பட்டாள்.

சர்க்கரை, கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்திருக்கும் ஐஸ்க்ரீம்  நாளடைவில் அவளது உடல் எடையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது. பால் பற்களையும் பாதிப்புக்குள்ளாக்கின.  மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். ஐஸ்க்ரீமை மறந்தும் மோனிஷாவின் கண்களில் காண்பிக்க கூடாது என்ற கண்டிப்போடுதான் சிகிச்சையைத் தொடர்ந்தார். நாள் ஒன்றுக்கு  ஐந்து  என்பதிலிருந்து நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று குறைந்து வாரம் ஒரு முறையாகி இன்று மாதம் ஒருமுறை என்று  மோனிஷாவை மாற்றிவிட்டார்கள்.   அழகே  உருவான   புன்னகைப் பூவாய்  வளைய வருகிறாள் மோனிஷா.

இப்படித்தான் வினய் - தருணிகாவின் மகள் யாழினியும். அவளுக்கு எட்டுவயது. அன்றாடம்  விதவிதமான ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று குளிப்பாட்டுகிறார்கள். ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போல் சருமம் பட்டு போல் மின்ன ஆரோக்யமாய் வளைய வருகிறாள். சமச்சீரான சத்துக்கள் நிறைந்த வளர்ச்சி என்று  மருத்துவர்கள் பாராட்டியதில் பெற்றோர்கள் பூரித்துத்தான் போனார்கள்.    இரண்டு குழந்தைகளும் ஐஸ்க்ரீம் பிரியர்கள் தான். ஆனால்   ஆரோக்கியத்தில் ஏன் இந்த ஏற்ற இறக்கங்கள்.

அதைப் பார்ப்பதற்கு முன்பு  ஐஸ்க்ரீம்  வரலாறைப்  பார்த்துவிடுவோம்.

இங்குதான் இவர்தான் இதைக் கண்டறிந்தார் என்று தெளிவாக அறியப்படாத  விஷயங்களில் ஐஸ்க்ரீமும் ஒன்று.  இரண்டாம் நூற்றாண்டு, 16ஆம் நூற்றாண்டு என்று வரலாற்று அறிஞர்களே முடிவுக்கு வராமல் இருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.  அதனால் ஐஸ்க்ரீம் குறித்து நாமாக ஒரு முடிவுக்கு வரமுடியாது. மன்னர்களின் உயர்ந்த உணவு வகையில்  ஐஸ்கட்டிகள் நிறைந்த பழச்சாறுகள் இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் சரித்திர ஆர்வலர்கள். 

ice2.jpg 

குச்சி ஐஸ் காலம்:

கோடைக்காலங்களில் சைக்கிளில்  கட்டையால் செய்த சதுர டப்பாவில்   ஐஸ் குச்சிகளை அடைத்து வருவார்கள் ஐஸ்கார அண்ணனோ தாத்தாவோ!  பால் ஐஸ், கோன் ஐஸ், கப் ஐஸ்,  க்ரேப் ஐஸ், சேமியா ஐஸ், ஆரஞ்சு ஐஸ் என்ற குரல்  வீதியில் கேட்கும் போதே பிள்ளைகள் அம்மாக்களை நச்சரிக்கத்  தொடங்கி விடுவார்கள். அம்மாக்கள் கனிந்து காலணாவை நீட்டும்போது காது கேளாத தூரம் போயிருப்பார் ஐஸ்மாமா. ஆனாலும் விட்டேனா பார் என்று பக்கத்துத் தெரு வரை ஓடி,  பிடித்து, கலர் ஐஸை வாங்கி சப்புக்கொட்டியபடி வீட்டுக்குத் திரும்புவார்கள்.  பிள்ளைகள் மட்டு மல்ல குடும்பத்தில் பெரியவர்களும் கலர்கலராய் ஐஸ் வாங்கி  சுவைத்த காலங்கள் உண்டு.

 பால் ஐஸ், சேமியா போட்ட  ரோஸ் ஐஸ்தான் பெரும்பாலோரது ஃபேவரிட். பகல் நேரங்களில் குச்சி ஐஸ், இரவு நேரங்களில் குல்ஃபி ஐஸ் இது வட நாட்டுக்காரர்களின் ஸ்பெஷல். குச்சி ஐஸை விட கூட கொஞ்சம் காசு போட்டால் பானைக்குள்  உருண்டை வடிவில்  இருக்கும் குல்ஃபியின் மேல்  போர்த்தப்பட்டுள்ள மெட்டல் தொப்பியை கத்தியால் லாகவமாக கழற்றிக் கொடுப்பார்கள். இப்போது வீதிகளில் குச்சி ஐஸ் சத்தத்தை க்காணோமே. அப்படியே கிடைத்தாலும் அந்த ருசியை சுவைக்கமுடியவில்லை. குல்ஃபிக்கள் சென்னை வீதிகளில் இன்றும் நடமாடுகிறது.

எங்கும் ஐஸ்க்ரீம் மயம்:

 உலகளவில்  குழந்தைகள், பதின்ம வயதினர், இளைஞர்கள் அனைவருக்கும் பிடித்த உணவுப் பட்டியலில் முதலாவது சாக்லெட் வகையும், இரண்டாவது  ஐஸ்க்ரீமும் இடம்பெற்றிருக்கின்றன.   ஐஸ்க்ரீமின்றி சுப விசேஷங்கள்  நிறைவு பெறுவதில்லை என்று  வைபவங்களாகிவிட்டன.  விதவிதமான உணவுகள் விருந்தில் அமர்க்களப்பட்டாலும்  குழந்தைகளின் கவனம் ஐஸ்க்ரீமில்தான் இருக்கும். பெரியவர்களும்  விருந்துக்குப் பிறகு ஐஸ்க்ரீம்  சாப்பிடுவதை விரும்புகிறார்கள். ஐஸ்க்ரீமின் சுவை அனைவரது நாவையும் கட்டிப்போட்டிருக்கிறது. ஆனால் எப்போதாவது விருந்தில் சாப்பிடுவது தவிர அன்றாடம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது ஆரோக்யத்துக்கு நல்லதா?

உற்சாக ஐஸ்க்ரீம் கலவை:

   அதிக கொழுப்புள்ள பால், க்ரீம், இனிப்புக்காக சேர்க்கப்படும் சர்க்கரைச் சத்து, வாசனைக்கு வெனிலா, ஸ்ட்ராபெர்ரி,  சாக்லெட் ஃப்ளேவர்கள் எல்லாம் சேர்ந்து நன்றாகக் குழைந்து குளிரூட்டப்படும் போது ஐஸ்க்ரீம் உருவாகிறது. இப்படி தொடங்கப்படும் ஐஸ்க்ரீம் வகைகள் நாளடைவில் பழக் கலவைகள், சாக்லெட்டுகள், உலர் பழங்கள் சேர்த்து பல்வேறு சுவைகளில்  ஐஸ்க்ரீம் பிரியர்களைக் கவர்ந்தது. வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லெட், பிஸ்தா,  அவகேடோ, லெமன், பட்டர் புட்டிங்,  காரமல் பனானா, காஃபி ஐஸ்க்ரீம், கேக் ஐஸ்க்ரீம்,  மேங்கோ ஐஸ்க்ரீம்,  டிரை ஃப்ரூட்ஸ் ஐஸ்க்ரீம் என்று ஒவ்வொரு பழக்கலவையும் உரிய முறையில் சேர்க்கப்பட்டு புதிய பெயர்களோடு ஐஸ்க்ரீம் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. உருகி உருகி பேசுவதைப் போன்று மெல்லாமல் விழுங்காமல் தானாக கரைந்து  நாவின் சுவையை நடனமாடச் செய்யும் ஐஸ்க்ரீம் வகைகள் இன்று மில்க் ஷேக் என்னும்   புதிய பரிணாமத்துடன் வளர்ச்சி பெற்று  வருகிறது.

ஐஸ்க்ரீம்  நல்லதா? கெட்டதா?

ஐஸ்க்ரீம் சாப்பிடும்  அனைவருமே வயது பேதமின்றி அளவற்ற சந்தோஷம் பெறுவார்கள். அதிக கொழுப்புள்ள உணவு இது. பால் கொழுப்பு அதிகம் இருக்கும் ஐஸ்க்ரீம் 10 கிராம் அளவில் அதிக கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்றவை நிறைந்திருக்கின்றன. இதில் உள்ள அதிகப்படியான கலோரிகள்  இரண்டு மடங்கு பாலுக்கான சக்தியைக் கொடுக்கிறது.  ஐஸ்க்ரீமில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ. வைட்டமின் டி, டரிபோஃப்ளேவின், நியாசின்  போன்றவை அடங்கியிருக்கின்றன. இவையெல்லாம் இருப்பதாலேயே இவை எந்நேரமும் சாப்பிட உகந்ததல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

உடல் மெலிந்து இருப்பவர்கள் பருமனாக வேண்டும் என்று ஆசைப்படும் போது எந்த டயட்டீஷியனும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு உடலை ஏற்றுங்கள் என்று  பரிந்துரைப்பதில்லை.  இவற்றால் ஏற்படும் உடல் பருமன் உடலுக்கு தீங்கையே உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருக்கின்றன. அதிக கொழுப்புகளை உள்ளடக்கியிருப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். ஐஸ்க்ரீம்களை  நொடிப்பொழுதில் காலி செய்து விடும் குழந்தைகள்தான் பற்சிதைவு பிரச்சினையால் விரைவிலேயே  பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தொடர் சளி, இருமல்  போன்ற உபாதைகளால்   பாதிக்கப்படும் குழந்தைகள் அடிக்கடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேலும் குறையும் என்று எச்சரிக்கிறார்கள் குழந்தை மருத்துவ நிபுணர்கள்.  ஐஸ்க்ரீமை அதிக அளவு சாப்பிடும்போது அதன் செரிமானத்துக்காக இன்சு லின் அளவும் அதிகரிக்கிறது. அப்போது உடலில் குளுக்கோஸின் அளவு குறையத்தொடங்குகிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் ஐஸ்க்ரீம் விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருப்பது அவசியம். 

     கட்டுரையின் ஆரம்பத்தில்  சம்பவம்  இரண்டில் குறிப்பிட்ட யாழினியின் பெற்றோர் திறமைசாலிகள். குழந்தைக்கு ஐஸ்க்ரீம் மட்டும் கொடுக்காமல் குறைந்த அளவு ஐஸ்க்ரீம் உடன் மூன்று பங்கு அளவில் பழக் கலவைகள் அல்லது உலர் பழங்களைச்  சேர்த்து  கொடுத்து பழக்கினார்கள். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்ததும் வெதுவெதுப்பான நீரை கொடுத்து பருக செய்தார்கள். ஆரோக்கியம் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

   ஐஸ்க்ரீம் நல்லதா என்றால் ஐஸ்க்ரீமில் தூவப்படும் டூட்டி ஃப்ரூட்டி அளவுக்கு நல்லது என்றும் எஞ்சிய அளவு தீமையே பயக்கும் என்றும் உறுதியாகச் சொல்லலாம்.

எது எப்படியோ... ஐ... ஐஸ்க்ரீம் என்று துள்ளும் மனதை கொஞ்சம் அடக்கித்தான் பாருங்களேன்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close