[X] Close

திறந்திடு சீஸேம் 34: சீனாவின் ராஜமுத்திரை!


34

  • kamadenu
  • Posted: 22 May, 2019 11:39 am
  • அ+ அ-

-முகில்

கி.மு. 722. சீனாவின் சு மாகாணம். அங்கே மலைப்பகுதியில் பயான் ஹி என்பவர் உலவிக்கொண்டிருந்தார். அப்போது தங்க நிற ஃபீனிக்ஸ் பறவை ஒன்று பறந்துவந்தது. ஹியும் அது பறந்த திசையிலேயே ஓடினார். அது மலையில் உள்ல கல் ஒன்றின் மேல் அமர்ந்தது. சில நிமிடங்களில் மீண்டும் பறந்து சென்றது.

பீனிக்ஸ் பறவை எப்போதும் பச்சை மாணிக்கக்கல் (Jade) மீது மட்டும்தான் அமரும் என்று ஹி கேள்விப்பட்டிருந்தார். ஓடிச் சென்று அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தார். சாதாரணக் கல்போலத்தான் தெரிந்தது. ‘இல்லை, இதனுள் பச்சை மாணிக்கக்கல் இருக்கும்!’ என்று ஹி ஆழமாக நம்பினார்.

சு மாகாணத்தின் அரசராக லி என்பவர் இருந்தார். ஹி அந்தக் கல்லுடன் அரசரிடம் சென்றார். ‘‘அரசே! இது பச்சை மாணிக்கக்கல்! உங்களுக்காகத்தான் எடுத்து வந்தேன்’’ என்றார். அரசர் அங்கிருந்த கொல்லரிடம் கல்லைக் கொடுத்துப் பரிசோதிக்கச் சொன்னார்.

அதைச் சரியாகச் சோதனை செய்யாத கொல்லர், ‘இவன் ஏமாற்றுகிறான். இது வெறும் கல்தான்’ என்றார். அரசர் லிக்குக் கோபம் வந்தது. ‘இவனது கால் ஒன்றை வெட்டுங்கள்’ என்று கட்டளை இட்டார். ஹியின் இடது கால் வெட்டப்பட்டது.

கொஞ்ச காலத்தில் அரசர் லி இறந்து போக, அவரது மகன் வு பதவிக்கு வந்தார். ஹி, ஒரு காலால் வுவைப் பார்க்கச் சென்றார். கல்லை நீட்டினார். பச்சை மாணிக்கக்கல் என்றார். வுவும் அதைச் சரியாகப் பரிசோதிக்கவில்லை. ‘‘என்னை ஏமாற்ற நினைக்கும் இவனின் இன்னொரு காலையும் வெட்டுங்கள்’’ என்று கட்டளை இட்டார். ஹியின் வலது காலும் வெட்டப்பட்டது.

அரசர் வு இறந்துபோன பின், அவரது மகன் வென் ஆட்சிக்கு வந்தார். இந்த முறை ஹி, புதிய அரசரிடம் செல்லவில்லை. தான் கல்லைக் கண்டெடுத்த அந்த மலைப்பகுதிக்குச் சிரமப்பட்டுத் தவழ்ந்தே சென்றார். பாதை எங்கும் ரத்தம். அங்கே இருந்தபடி கதறி அழுதார்.

‘ஹி என்ற மனிதன், மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அழுதுகொண்டே இருக்கிறார்’ என்று அரசர் வென்னுக்குத் தகவல் சென்றது. அரசர், தன் அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பினார்.

ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் ஹி சோர்ந்து கிடக்க, அரசர் அனுப்பிய ஆள் அங்கே வந்தார். ‘‘நீ உன் கால்களை இழந்ததற்காகக் கதறி அழுகிறாயா?’’ என்று கேட்டார். ‘‘இழந்த என் கால்களுக்காக அழவில்லை’’ என்று சொன்ன ஹி, அந்தக் கல்லை நீட்டினார்.

‘‘விலைமதிப்புமிக்க இந்தப் பச்சை மாணிக்கக்கல்லை சாதாரணக் கல் என்கிறார்கள். உண்மையைச் சொல்லும் என்னை பொய்யன் என்று குற்றம் சாட்டுகிறார்கள்’’ என்று கதறினார்.

அரசர் வென்னுக்குத் தகவல் சென்றது. ஹி, அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார். வென், அந்தக் கல்லை நிதானமாக ஆராயச் சொன்னார். அந்தக் கல் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கப்பட்டது. உள்ளிருந்து பச்சை மாணிக்கக்கல் ஒளிர்ந்தது.

10.jpg 

‘தான் பொய்யன் இல்லை’ என்று நிரூபணமான மகிழ்ச்சியில் ஹியின் முகமும் பிரகாசமானது. வென், ஹியிடம் மன்னிப்புக் கேட்டார். ‘இது ஹி கண்டெடுத்த பச்சை மாணிக்கக்கல்’, அதாவது ஹிஷிபி (Heshibi) என்று அதற்குப் பெயர் சூட்டி கௌரவப்படுத்தினார்.

சீன நாடோடிக் கதையில் சொல்லப்படும் இந்த ஹிஷிபி பச்சை மாணிக்கக்கல்தான், பின்பு சீனப் பேரரசுகளின் ராஜமுத்திரையாக மாறியது. இந்தக் கல் கண்டெடுக்கப்பட்ட கதை கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கினாலும், ராஜமுத்திரையாக மாறிய வரலாறு என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

கி.மு. 221-ல் குன் ராஜ்யத்தின் முதல் பேரரசராக ஷி ஹுவாங் பதவிக்கு வந்தார். பகையுடன் மோதிக்கொண்டிருந்த பல்வேறு சிறு ராஜ்யங்களை ஒன்றிணைத்து குன் பேரரசை அவர் உருவாக்கியிருந்தார். அதில் ஸாவோ என்ற சிறு ராஜ்யமும் உண்டு.

ஸாவோ ராஜ்யத்தில்தான் அந்த ஹிஷிபி பச்சை மாணிக்கக்கல்லும் இருந்தது. சீனர்கள் பச்சை மாணிக்கக்கல்லை மிகவும் உயர்வானதாகக் கருதினார்கள். ‘இது மிகவும் அருமையான, உயர்வான கல். இதை நம் பேரரசின் ராஜமுத்திரையாகச் செதுக்குங்கள்’ என்று பேரரசர் ஷி ஹுவாங் கட்டளையிட்டார்.

‘சொர்க்கத்திலிருந்து பெறப்பட்ட கட்டளை! பேரரசரானவர் நீண்ட ஆயுளோடும் வளமோடும் வாழ வேண்டும்’ என்ற அர்த்தம் கொண்ட சீன எழுத்துகள் அந்த முத்திரையில் செதுக்கப்பட்டன. செதுக்கியவர் ஸன் ஸோ என்ற கலைஞர்.

குன் பேரரசர்களிடம் இருந்த அந்த ராஜமுத்திரை பத்திரமாக இருந்தது. மூன்றாவது பேரரசர் ஸியிங் காலத்தின் குன் பேரரசு முடிவுக்குவந்தது. அடுத்து அந்த முத்திரை  ஹன் ராஜ்யத்தின் வசமானது. ஹன் ராஜமுத்திரையாகப் பயன்படுத்தப் பட்டது.

கி.பி. 9-ல் ஹிஷிபி முத்திரை மேற்கு ஹன் ராஜ்ய அரசரான வாங் மேங் வசம் சென்றது. ஒருமுறை வாங் மேங்குக்கும், அவரது அரசிகளில் ஒருவருக்கும் சண்டை. கோபத்தில் அந்த அரசி ஹிஷிபி ராஜமுத்திரையைத் தரையில் தூக்கி எறிய, அதன் ஒரு முனை சேதாரமானது. பதறிய வாங் மேங், உடைந்த அந்த முனையைத் தங்கத்தைக் கொண்டு நிரப்பிச் சரி செய்தார்.

சீனாவில் புதிய ராஜ்யங்கள் எழுந்தன. விழுந்தன. புதிய அரசர்களும் பேரரசர்களும் பதவிக்கு வந்தார்கள். காணாமல் போனார்கள். வெய் ராஜ்யம், ஜின் ராஜ்யம், பதினாறு ராஜ்யங்களின் காலம், தெற்கு – வடக்கு ராஜ்யங்களின் காலம், ஷுய் ராஜ்யம், டாங் ராஜ்யம் என்று ஹிஷிபி ராஜமுத்திரை கைமாறிக்கொண்டே வந்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

11.jpg 

 கி.பி. 907 முதல் 979 வரையிலான காலம் சீன வரலாற்றில் ‘ஐந்து சமஸ்தானங்கள் மற்றும் பத்து ராஜ்யங்களின் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில்தான், ஹிஷிபி ராஜமுத்திரை குறித்த வரலாற்றுக் குறிப்புகள் கடைசியாகக் கிடைத்திருக்கின்றன. அந்த அரசர்கள் தங்கள் ராஜ்யங்களை இழந்தபோது, ஹிஷிபி ராஜமுத்திரையையும் தொலைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

டாங் பேரரசின் கடைசி அரசர், தன்னைத் தானே எரித்துக்கொண்டு இறந்து போனார். அப்போதே ஹிஷிபி ராஜமுத்திரையும் எரிந்து போயிருக்கலாம் என்று சில வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கி.பி. 1368-ல் மிங் பேரரசு சீனாவில் வலிமையாகக் காலூன்றியது. அந்தப் பேரரசின் பல ராஜமுத்திரைகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அதிலும் ஹிஷிபி ராஜமுத்திரை இல்லை.

சென்ற நூற்றாண்டில் சீனாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் பல்வேறு ராஜமுத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. 1955-ல்  ஷான்ங்ஷி நகரில் 13 வயது சிறுவன் ஒருவன் மிங், குவிங் பேரரசுகளைச் சேர்ந்த பல ராஜமுத்திரைகளைக் கண்டெடுத்தான். ஆனால், அதிலும் ஹிஷிபி ராஜமுத்திரை இருந்ததாகத் தெரியவில்லை.

சர்ச்சை ஒன்றும் உண்டு. 1948. சீனப் புரட்சிக்கு முந்தைய வருடம். அரசியல் நெருக்கடி மிகுந்த காலகட்டம். சீனாவின் தேசியவாதிகள், தேசத்தின் பழமையான பொக்கிஷங்களைப் பாதுகாக்க நினைத்தனர்.

கப்பல் ஒன்றில் பொக்கிஷங்கள் பலவற்றையும் ஏற்றி அனுப்பினர். அந்தக் கப்பல் பொஹாய் கடலில் மூழ்கிப் போனது. இன்றுவரை அந்தக் கடல் பகுதியில் தேடல் நடத்தப்படவில்லை. அந்தப் பொக்கிஷங்களுடன் ஹிஷிபி ராஜமுத்திரையும் கடலில் புதைந்து கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close