[X] Close

விவிபாட் இயந்திரம் வந்த கதை!


  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:06 am
  • அ+ அ-

-டி.கார்த்திக்

இந்தியாவின் 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே 23) எண்ணப்படுகின்றன. முதன்முறையாக விவிபாட் இயந்திரங்கள் மூலம் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் இந்தத் தேர்தலில் எண்ணப்பட உள்ளன.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச் சாவடிகள் வீதம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 30 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீடுகள் எண்ணப்பட உள்ளன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் இந்த விவிபாட் ஒப்புகைச் சீட்டு இந்தியாவுக்குள் எப்படி வந்தது?

இந்தியாவில் 1998-ம் ஆண்டு முதல் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. முதன்முறையாக 2004-ல்

மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் ஆனது முதலே அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகள் புகார் கூறிவந்தன.

தொடர்ந்து சொல்லப்பட்டுவந்த புகாரைக் களைவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முயற்சியை மேற்கொண்டது. இதன்படி 2010 அக்டோபர் 8-ல் ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குநர் பி.வி. இந்திரேசன் தலைமையில் வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்பக் குழுவைத் தேர்தல் ஆணையம் நியமித்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

யாருக்கு வாக்களித்தோம்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச் சீட்டை வழங்க முடியுமா என்ற சாத்தியக்கூறுகளை இக்குழு ஆராய்ந்தது. நீண்ட ஆய்வுக்குப் பிறகு ‘விவிபாட்’ (Voter-verified paper audit trail) என்றழைக்கப்படும் ‘வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை’யை அறிமுகப்படுத்த இக்குழு தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்தது.

இந்திரேசன் குழு வழங்கிய பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், களப் பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. 2011-ம்

ஆண்டில்தான் விவிபாட் இயந்திரம் முதன் முறையாகச் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் லடாக், கேரளாவில் திருவனந்தபுரம், மேகாலயாவில் சிரபுஞ்சி, டெல்லியில் கிழக்கு டெல்லி, ராஜஸ்தானில் ஜெய்சால்மர் ஆகிய தொகுதிகளில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அது திருப்திகரமாக இருக்கவே தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வசதியாக விவிபாட் இயந்திரம் முதன் முதலில் 2013-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நாகாலாந்தில் உள்ள நொக்சன் என்ற சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த தேர்தலில்தான் விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் மிசோராமில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் விவிபாட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே பரிசார்த்த முறையில் பயன்படுத்தப்பட்ட விவிபாட் இயந்திரத்தை 2014 மக்களவைத் தேர்தலிலும் ஒரு சோதனைத் திட்டமாகப் பயன்படுத்திப் பார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதன்படி 2014 மக்களவைத் தேர்தலில் லக்னோ, காந்திநகர், தெற்கு பெங்களூரு, மத்திய சென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாகிப், மிசோராம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் விவிபாட் இயந்திரம் பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது.

அந்த 7 விநாடிகள்

சோதனை முயற்சியாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுவந்த விவிபாட் இயந்திரத்தை, தேர்தலில் முழுமையாகப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. 2017-ம் ஆண்டில் கோவாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விவிபாட் இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போதும் உத்தரகாண்டில் 4, உத்தரப்பிரதேசத்தில் 20, மணிப்பூரில் 4, பஞ்சாபில் 8 தொகுதிகளிலும் இது பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 2017-ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் ஒப்புகைச் சீட்டை வழங்கும் விவிபாட் இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அழுத்தி வாக்கைச் செலுத்தும்போது அருகே இருக்கும் விவிபாட் இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 விநாடிகள் பார்க்கும்படி வசதி செய்யப்பட்டிருந்தது. அப்படிப் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் 30 வாக்குச்சாவடிகளில் எண்ணிப் பார்த்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close