[X] Close

மாணவர்களுக்கு எச்சரிக்கை: அரசுப் பணிக்கு உதவாத படிப்புகள்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:08 am
  • அ+ அ-

-ம.சுசித்ரா

தமிழகத்தைச் சேர்ந்த சில பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் வழங்கிவரும் 50-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதியானவை அல்ல என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.சி.ஏ. பட்டப் படிப்பானது பி.எஸ்சி. கணிதத்துக்கு நிகரல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. அப்ளைட் மைக்ரோபயாலஜி பட்டப் படிப்பானது எம்.எஸ்சி. விலங்கியலுக்கு நிகரல்ல.

அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. பயோகெமிக்கல் டெக்னாலஜி படிப்பானது எம்.எஸ்சி. பயோகெமிஸ்ட்ரிக்கு நிகரானது அல்ல. பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி. நானோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (இயற்பியல்) ஆகியவை எம்.எஸ்சி. பயோகெமிஸ்ட்ரி அல்லது எம்.எஸ்சி.இயற்பியலுக்கு நிகரானவை அல்ல.

நான்காண்டுகள் வழங்கப்படும் டூயல் டிகிரி வகை பட்டப் படிப்புகளில் சில இந்தப் பட்டியலில் சிக்கியுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கும் பிபிஏ (டபுள் டிகிரி) பிபிஏ-வுக்கு நிகராகாது. குறிப்பாக, அந்தப் பல்கலைக்கழகம் வழங்கிவரும் பலவகையான எம்.பி.ஏ. படிப்புகள் எம்.பி.ஏ. பட்டப்படிப்பாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சிக்கல் எதனால்?

அரசாணையத்தில் (GO. No. 66) 100 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இணையில்லாதவை (Non Equivalence) என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் இனி அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணிகளைப் பெற முடியாது என்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் இரண்டு விதமான சிக்கல்கள் இருப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகிறார்கள். ஒன்று, மக்களை ஈர்த்து வசூல் வேட்டை நடத்தப் பல கல்லூரிகள் இதுபோன்ற பட்டப் படிப்புகளை அறிமுகப்படுத்திவருகின்றன.

மறுபுறம் புதிய பாய்ச்சலுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் சிந்தனையோடும் சில கல்வி நிறுவனங்கள் புதுமையான படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன.

தாங்கள் குறிவைத்த படிப்பில் சேர முடியாமல் போகும் நிலையில் அவற்றுக்கு இணையானவை என்று நம்பி இதுபோன்ற படிப்புகளில் மாணவர்கள் சேரும் அவலமும் நடந்துவிடுகிறது. எதுவானாலும் அரசுப் பணிக்கு இனி அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஆகையால், மாணவர், பெற்றோர் எச்சரிக்கையுடன் தாங்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பு அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதி வாய்ந்ததா என்பதைச் சரிபார்த்துவிட்டு விண்ணப்பித்தல் நல்லது.மாணவர்களுக்கு எச்சரிக்கை

முழு பட்டியலைப் படிக்க இணையச் சுட்டி:

http://bit.ly/2LRbtDq

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close