[X] Close

பயனுள்ள விடுமுறை: உற்சாகமளிக்கும் பறவை நோக்கல்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:01 am
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

வீட்டுக்கு வெளியே கோடைச் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வது, வீட்டுக்குள் நுழைந்தால் டிவி, செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் ஐக்கியமாகி விடுவது. பெரும்பாலான வீடுகளில் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை இப்படித்தான் செல்கிறது. இவற்றுக்கு அப்பால் நம்மைச் சுற்றி அமைந்துள்ள சூழலைக் கவனிப்பதும் அவற்றை ஆராய்வதும் விடுமுறையைப் பயனுள்ளதாக்க உதவும்.

பறவை நோக்கல் என்பது ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் சேரும். இதற்காகத் தனியாக மெனக்கெடல் எதுவும் தேவையில்லை. நமது வீடு, தெரு, பள்ளி, கடந்து செல்லும் பாதைகள், அருகிலிருக்கும் மரங்கள் இங்கெல்லாம் தொடர்ந்தாற்போல் கவனித்தாலே பறவைகள் தட்டுப்படும். அதன் அலகு அமைப்பு, சிறகின் நிறம் ஆகியவற்றைக் கவனித்தாலே பறவைகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடு புரியும்.

இடையூறின்றி நோக்கலாம்

பறவை நோக்கலின்போது பின்பற்ற வேண்டிய நெறிகளைப் பகிர்ந்துகொள்கிறார் சென்னையைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ஜா.செழியன்:

பறவைகளை நோக்குவது அவற்றுக்கு எந்த வகையிலும் இடையூறாக அமைந்துவிடக் கூடாது. பறவைகளின் அருகே நெருங்குவது, ஒலியெழுப்புவது, படம் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது போன்றவை பறவைகளைத் தொந்தரவு செய்யும்.

நாம் பறவைகளை நோக்குவது போலவே அவையும் நம்மைக் கவனிக்கும். தனக்கு ஆபத்துள்ளதாகக் கருதும் இடங்களுக்கு மீண்டும் பறவை வராது. பறவைகளுக்கு உணவு அளிப்பதையும் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாகத் தானியங்கள் தருவது,

பறவைகளின் இரை தேடும் இயல்பைக் குலைத்துவிடும். எப்போதேனும் நெல்மணிகள், அரிசி, தானியங்களைத் தரலாம். தண்ணீர் வைக்கலாம். இந்தக் கோடையில் தண்ணீர் வைப்பது அவசியமானதும் கூட. மற்றபடி சமைத்த உணவு, பாக்கெட்டில் அடைத்த உணவுகள் அறவே கூடாது.

இரைதேடக் கிளம்புவதால் அதிகாலை முதல் எட்டரை மணிவரை அவை கண்களுக்கு அதிகம் தென்படும். அதேபோல் இரைதேடல் முடிந்து இருப்பிடம் திரும்பும் பறவைகளை மாலை 4 மணிக்குப் பிறகு கூட்டம் கூட்டமாகப் பார்க்கலாம். தொடக்க காலத்தில் எங்கேயும் தேடியலையாமல் நம் இருப்பிடத்துக்கு வரும், நம்மைக் கடந்து செல்லும் பறவைகளைக் கவனித்தாலே போதும்.

அதன் பின்னர் அருகிலிருக்கும் நீர் நிலைகள், சரணாலயங்களுக்குப் பெரியவர்கள் அல்லது வழிகாட்டிகளுடன் சென்று வரலாம். அதேபோன்று பைனாகுலர் (இருநோக்கி) போன்ற கருவிகளின் உதவியின்றிக் கண்களால் பறவை நோக்குதலைப் பழகுவதே நல்லது.

 பார்த்த பறவைகள் குறித்து, அவை தொடர்பான தங்களது குறிப்புகளின் அடிப்படையில் பறவை ஆர்வலர்கள், ஆசிரியர்களிடம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். அடுத்த கட்டமாகப் பறவைகள் குறித்த புத்தகங்களைத் தேடி வாசித்தல், அவை தொடர்புடைய வீடியோக்கள், இணையத்தின் உதவி போன்றவற்றை நாடலாம்.

ஆறு மாதங்களுக்கு விரும்பிய நேரத்தில், விரும்பியவாறு பறவைகளை நோக்கி வந்தால் பறவைகள் உலகு குறித்த அடிப்படைகள் பிடிபட்டுவிடும். அதன் பின்னர்த் தனக்கெனச் சுயமான பாணியில் பறவை நோக்கலை முன்னெடுத்துச் செல்லலாம்.

பறவைகளை நோக்கும் மாணவர்களுக்கு நேரம் பயனுள்ள வகையில் கழிவதுடன், வாழ்க்கை குறித்த நேர்மறைக் கருத்துகள் உருவாகும். சுற்றுச்சூழல் குறித்த ஆர்வமும் அக்கறையும் இயல்பாகத் தோன்றும். சக உயிர்களின் மீதான பிரியம் கூடும்.

உற்று நோக்கும் இயல்பும் பறவைகளின் ஒலிகளை அவதானிப்பதும் மனத்தை ஒருமுகப்படுத்தும். பொறுமை, அமைதியான சுபாவம் கைவரப்பெறும். இந்த இயல்புகள் பாடங்களைக் கவனிப்பதிலும், கற்பதிலும் பிரதிபலிக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close