[X] Close

உறுதியான வருமானம் தரும் திட்டங்கள்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 12:40 pm
  • அ+ அ-

-ராஜலஷ்மி நிர்மல்

எல்லாவற்றிலும் என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நாம் செய்யும் முதலீட்டில் என்ன கிடைக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியும்.

சந்தையில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு உத்தரவாதமான ‘குறைந்த’ வருமானம் தரும் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இங்கு நாம் அவற்றை விட கவர்ச்சிகரமாக உள்ள திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்பு இல்லாத இன்ஷூரன்ஸ் (Non-Participating insurance) திட்டங்கள் தற்போது 4.5 சதவீதம் முதல் 6 சதவீத வருமானத்தை அளிப்பதாக உள்ளன. மேலும் இவற்றுக்கு வரி ஏதும்கிடையாது. மேலும், இந்த வருமான சதவீதத்தை அடுத்த 20-30 வருடங்களாக உங்களால் லாக் செய்துகொள்ள முடியும். இதுபோன்ற நீண்டகாலத்துக்கு உறுதியான வருமானம் தரக்கூடிய திட்டங்கள் எதுவுமே சந்தையில் இல்லை.

சமீபத்தில் ஹெச்டிஎப்சி லைஃப் நிறுவனம் உத்தரவாத வருமானம் தரக்கூடிய ‘சஞ்ஜே ப்ளஸ்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் இரண்டு விதமான உத்தரவாத சேமிப்புத்திட்டத்தின் கீழ் 6.3 சதவீத வருமானத்தை வழங்குகிறது. தற்போது சந்தையில் இதுதான் அதிகபட்ச சதவீதம் ஆகும்.

ஒவ்வொரு இன்ஷூரனஸ் நிறுவனமும் நிறைய சேமிப்பு திட்டங்களைத் தங்களின் பட்டியலில் வைத்துள்ளன. ஆனால், அவற்றில் எவையெல்லாம் உத்தரவாதமான வருமானம் தருபவை என்று நம்மால் எளிதில் கண்டுபிடித்து விட முடியாது.

உதாரணமாக, ஒரு முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனம் உத்தரவாதமான வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்கள் என 17 திட்டங்களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளது. அவற்றில் எது உத்தரவாத வருமானம் தரும் திட்டம் என்பதைக் கண்டுபிடிக்க வழி ஒன்று இருக்கிறது.

அந்தத் திட்டம் ‘பங்களிப்பு’ திட்டமா அல்லது ‘பங்களிப்பு இல்லாத’ திட்டமா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், பங்களிப்பு திட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் ஈட்டும் லாபத்திலிருந்து பாலிசி தாரருக்கு லாபம் பகிர்ந்து அளிக்கப்படும்.

ஒருவேளை அவ்வருடம் அந்நிறுவனம் குறைவான லாபம் ஈட்டினால் நமக்கான லாபமும் குறைவாகவே வரும். அப்படி என்றால் அது உத்தரவாதமான திட்டமாக இருக்க முடியாது. பின் எது உத்தரவாதமான திட்டம்? பங்களிப்பு இல்லாத திட்டம்தான் உத்தரவாதமான திட்டம்.

பங்களிப்பு இல்லாத திட்டத்தில் நமக்கான லாபம் என்பது இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஈட்டும் லாபத்திருந்து பகிர்ந்து அளிக்கப்படுவது அல்ல. மாறாக நாம் முதலீடு செய்த பணத்திலிருந்து தரப்படுவதாகும். இதில் நமக்கான லாபம் என்பது உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

தற்போது வரை இவ்வகையான உத்தரவாத சேமிப்பு திட்டங்கள் பலவும் 4. 5 – 5.5 சதவீத லாபத்தை தரக் கூடியவையாகவே இருக்கின்றன. இந்நிலையில் ஹெச்டிஎப்சி ஃலைப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சஞ்ஜே ப்ளஸ் இரு வகையான திட்டங்களில் 6.3 சதவீத லாபத்தைத் தருகிறது.

அவை, வாழ்நாள் முழுமைக்குமான வருமான திட்டம் (Life Long Income) மற்றும் நீண்ட காலத்துக்கான வருமான திட்டம் (Long Term Income). ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் பல்வேறு உத்தரவாத வருமானம் தரும் சேமிப்புத் திட்டங்களை கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் பொதுவாக ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டவை. அதாவது நாம் 5/6/10 வருடங்களுக்கு பிரீமியம் தொகையை கட்டுவோம்.

முதிர்வு காலம் முடியும் தருவாயில் நமக்கான வருமானம் வர ஆரம்பிக்கும். அது 10/12/24 ஆண்டுகளுக்குத் தொடரும். நமக்கு வழங்கப்படும் தொகை என்பது வருடாந்திர பிரீமியம் தொகையில் 100/135/150 ஆகிய சதவீதங்களில் வழங்கப்படலாம். சில பாலிசிகளில் முதிர்வு காலத்தில் முழு தொகையும் வழங்கப்படும்.

காப்பீட்டு காலத்திலேயே மரணம் அடைய நேர்ந்தால், அந்த திட்டத்தில் உறுதி செய்யப்பட்ட முதிர்வு தொகை முழுவதுமாக பாலிசிதாரரின் நாமினிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். அத்துடன் அந்த திட்டம் முடிக்கப்பட்டுவிடும். மேற்கொண்டு எந்தப் பலன்களும் அத்திட்டத்தின் கீழ் தரப்பட மாட்டது.

அதுவே, காப்பீட்டு முதிர்வு காலம் முடிந்து மரணம் அடைந்தால், திட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட தொகை முழுவதுமாக வழங்கப்படாவிட்டாலும், திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய உத்தரவாத வருமானம் என்பது எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்து அவரது நாமினிகளுக்குத் தரப்படும்.

நீண்ட கால திட்டத்தை தேடுபவராக இருந்தால் உங்களுக்கான பொருத்தமான திட்டமாக ஹெச்டிஎப்சி ஃலைப் சஞ்ஜே ப்ளஸின் நீண்ட காலத்திற்கான திட்டம் இருக்கக் கூடும். உங்களுடைய பாலிசி கால தேர்வை பொருத்து, 25லிருந்து 30 ஆண்டுகள் வரை உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் திட்டத்தில் நீங்கள் பயன்பெறலாம்.

பிற நிறுவனங்கள் வழங்கும் உத்தரவாதமான வருமான திட்டங்களின் வருமானம் வழங்கப்படும் காலம் என்பது இதனுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளன. மேலும் அவை 4.5 -5.5 சதவீத வருமானம் மட்டுமே உறுதியளிக்கின்றன.

ஆனால், ஹெச்டிஎப்சி ஃலைப் சஞ்ஜே ப்ளஸ் அதிகபட்சமாக 6.3 சதவீத லாபத்தை, தன் நீண்ட கால வருவாய் திட்டத்தின் கீழ் உறுதியளிக்கிறது. மேலும் இந்த வருமானத்துக்கு வரி ஏதும் கிடையாது என்பது கூடுதல் ப்ளஸ். அந்த வகையிலும் ஹெச்டிஎப்சி ஃலைப் சஞ்ஜே ப்ளஸ் திட்டம் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது.

அதேசமயம் இந்தத் திட்டத்தின் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் செலுத்தும் காலம் முடிவதற்குள் நீங்கள் திட்டத்திலிருந்து விலகி விட்டால் உங்களுக்கு வழங்கப்படும் தொகை என்பது மிகக் குறைவாகவே இருக்கும்.

தவிர, குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாவது நீங்கள் தொடர்ந்து பிரீமியம் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். ஹெச்டிஎப்சி ஃலைப் சஞ்ஜே ப்ளஸ் திட்டத்தில் நீங்கள் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் விலகுகிறீர்கள் என்றால் 30 – 50 சதவீத காப்பீட்டுத் தொகை தான் உங்களுக்கு வழங்கப்படும். அது உங்களுக்கு நஷ்டம் தான்.

எனவே, உங்களால் அதிக அளவு பிரீமியத்தை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த முடியாது என்றால், உங்களுடைய காப்பீட்டு தொகையின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு காப்பீடுத் தொகையை தேர்ந்தெடுத்துவிட்டு பின்பு அதற்கான பிரீமியத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாமல் கஷ்டப்பட வேண்டாம். முறையான திட்டமிடலுடன் முதலீடு செய்யுங்கள், உத்தரவாதமான வருமானத்தின் பலனை அனுபவியுங்கள்.

 

rajalakshmi.nirmal@thehindu.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close