[X] Close

வானவில் பெண்கள்: குழந்தைமையை மீட்பதே கலை!


  • kamadenu
  • Posted: 19 May, 2019 10:02 am
  • அ+ அ-

-வா.ரவிக்குமார்

குழந்தைகளுக்கு இரண்டு வயதிலேயே எழுத்தையும் எண்களையும் அறிமுகப்படுத்தும் நாம் ஓவியங்களை அறிமுகப்படுத்துவதில்லை. எழுத்துகளை மனப்பாடம் செய்வதற்குப் பயிற்சியளிக்கும் நாம், அவர்களிடம் இசையை அறிமுகப்படுத்துவதில்லை. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஒரு குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு இணையானது பரத நாட்டியத்தை அறிமுகப்படுத்துவது.

பரத நாட்டியம் எனும் கலையை ஸ்ரீமுத்ராலயா நடனப் பள்ளியின் மூலமாகப் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கும் அளித்து, அவர்களைப் பிரகாசிக்க வைத்துக்கொண்டிருப்பவர் பிரபலப் பரதநாட்டியக் கலைஞர் டாக்டர்

லக்  ஷ்மி ராமசுவாமி. பரத நாட்டியம் எளிய மனிதர்களுக்கானது அல்ல எனும் கருத்தைத் தன்னுடைய 25 ஆண்டு காலக் கலைச் சேவையில் அவர் பொய்யாக்கியிருக்கிறார்.

“என்னைப் பொறுத்தவரை கலை எல்லோருக்குமானது. நான் வந்த வழியில் எனக்கு ஏற்பட்ட வேதனைகளை அடுத்துவரும் தலைமுறைக்கு அளிக்க நான் விரும்பவில்லை. என்னுடைய அப்பா கிருஷ்ணன், மருந்து விற்பனை பிரதிநிதி. அம்மா சுந்தரி, குடும்பத் தலைவி. என்னிடமிருந்த நாட்டியத் திறமையை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் காரணமாக இருந்தனர். அதுபோன்ற பலமான ஆதரவைத் தங்கள் குழந்தைகளின் திறமைகளுக்குப் பெற்றோர் வழங்க வேண்டும்.

நான் படிப்பில் முதன்மையான மாணவி. எந்தவிதமான உயர் கல்வியைப் பெறுவதற்கும் வழி இருந்தது. ஆனால், கலையைத்தான் முதன்மையானதாகத் தேர்ந்தெடுத்தேன். அதற்காக என்னிடம் வரும் குழந்தைகளின் மீது என்னுடைய பணத் தேவையைத் திணிப்பதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அதனால்தான் 25 ஆண்டுகளில் 25 தயாரிப்புகளை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். பணம் கொடுத்தால்தான் வாய்ப்பு என்பது போன்ற கட்டுப்பாடுகளை என்னிடம் நடனம் கற்றுக்கொள்பவர்களுக்கு நான் விதிப்பதில்லை.

கல்வியின் பெயரால் குழந்தைகளிட மிருக்கும் குழந்தைமையை நாம் திருடிக் கொள்கிறோம். அதை பரத நாட்டியம் எனும் கலையின் மூலமாக மற்ற கலைகளையும் ஒருங்கிணைத்து நம்முடைய கலாச்சாரத் திலிருந்து விலகாத குழந்தைமையை அவர்களிடம் மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக் கிறேன்” என்கிறார் லக் ஷ்மி ராமசுவாமி.

பரதநாட்டியத்தில் புகழ் பெற்ற சித்ரா விஸ்வேஸ்வரன், டாக்டர் பத்மா சுப்ரமணியம், கலாநிதி நாராயண் ஆகியோரிடம் நாட்டியம் பயின்ற லக் ஷ்மி, மியூசிக் அகாடமியின் நிதிநல்கையோடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். ‘ஃபுல் பிரைட்’ உதவித்தொகையைப் பெற்றிருப்பவர்.

சங்கத் தமிழ் இலக்கியங்களான ‘நற்றிணை’, ‘புறநானூறு’, ‘ஐங்குறுநூறு’ ஆகியவற்றை அடியொற்றியும், ‘திருவரங்கக் கலம்பகம்’ போன்றவற்றையும் கொண்ட முழு நாட்டிய நிகழ்ச்சிகளை இவர் நடத்தியிருக்கிறார்.

கலைகள் சங்கமித்த கருத்தரங்கம்

ஸ்ரீமுத்ராலயா நடனப் பள்ளியின் 25-வது ஆண்டையொட்டி பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார் லக் ஷ்மி ராமசுவாமி. மார்ச் மாதம் நடந்த மூன்று நாள் கருத்தரங்கில் மற்ற கலைகளைப் பற்றிய அறிமுகமும்  நாட்டியம் பயிலும் மாணவிகளுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் நடந்தது.

சோழர் கால ஓவியங்கள் குறித்து சித்ரா மாதவன், திவ்யபிரபந்தம் பற்றி சுஜாதா விஜயராகவன், ஜாவளி பற்றி வி.ஏ.கே. ரங்கா ராவ், நடன மேடையில் ஒளி விளக்குகளின் பயன்பாடு குறித்து சித்ரா விஸ்வேஸ்வரன் என  ஏறக்குறைய 15 தலைப்புகளில் 17 நிபுணர்கள் பேசியிருக்கின்றனர். நாட்டியம் சாராத குடும்பத் தலைவிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளும் இந்தக் கருத்தரங்கால் பயனடைந்திருக்கின்றனர். விண்வெளியில் நடந்த மாற்றத்துக்கும் நடராஜருக்கும் உள்ள  ஒற்றுமையை வெளிப்படுத்தும் கருத்தரங்கத்தை ஏப்ரல் மாதத்தில் டாக்டர் தேவிகா நடத்தினார்.

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கும் பயிற்சி

“சில அரசுப் பள்ளிகளில் கருத்தரங்கு நடத்த விரும்புகிறோம். நாட்டியத்தில் ஆர்வமுள்ள மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம். எங்கள் திட்டங்களைச் சொல்லிவிட்டு வந்த பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. எங்களை அரசுப் பள்ளி சார்பாகத் தொடர்புகொண்டால், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கட்டணமில்லாமல் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்கிறார் லக் ஷ்மி.

இணையப் புத்தகம், சுற்றுலா

லக்ஷ்மி ராமசுவாமி, ‘நாட்டியம் அறிவோமா’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை அடுத்த மாதம் இணையத்தில் எல்லோரின் பயன்பாட்டுக்காகவும் வெளியிடுகிறார். நாட்டியத்தின் சில முக்கியமான விஷயங்களுக்கான தெளிவான விளக்கம் இதில் இருக்கும். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு இணையான பெருமையைப் பெற்ற கோயில் கங்கைகொண்ட சோழபுரம். இந்தக் கோயிலில் இருக்கும் 108 கரண சிற்பங்களைச் சிற்பக் கலை நிபுணர்களுடன் குழந்தைகளையும் அழைத்துச் சென்று பார்க்க ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.

“பரதநாட்டியத்தோடு நம்முடைய வரலாறும் முக்கியம் அல்லவா?” என்கிறார் லக்ஷ்மி.

பரதத்தில் பஞ்சதந்திரக் கதை

“நிறையக் குழந்தைகளிடமிருந்து குழந்தைமையைத் தட்டிப் பறிக்கும் கல்வி முறையை நாம் கொண்டிருக்கிறோம். அதை இந்த விடுமுறைக் காலத்திலாவது கொடுப்போமே என்று அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்று (மே 19) அளித்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இதைச் செய்கிறோம். பஞ்சதந்திரக் கதையில் வரும் விலங்குகள் நாட்டியம் சார்ந்த அசைவுகளைச் செய்தால் எப்படி இருக்கும் என்பதைக் குழந்தைகளைக்கொண்டே பஞ்சதந்திரக் கதைகளின் வழியாக பரதநாட்டியத்தை நடத்துகிறோம்” என்கிறார் லக் ஷ்மி ராமசுவாமி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close