[X] Close

வாசகர் வாசல்: ஃபிகர் என்றால் பெண்ணா?


  • kamadenu
  • Posted: 19 May, 2019 10:02 am
  • அ+ அ-

வீட்டில் டியூஷன் எடுத்து வருகிறேன். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறேன். மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவன் ஒருவன் ஆங்கிலப் பாடத்தைப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது ‘ஃபிகர்’ என்ற சொல்லை உச்சரித்தான்.

அதைக் கேட்டதுமே அருகிலிருந்த நான்காம் வகுப்பு மாணவன், “என்னடா ஃபிகர்னு படிக்கிறே. ஃபிகர்னா உன் ஆள்னு தானே அர்த்தம்?” என்று சொன்னான். இதைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டேன். அந்த இரண்டு மாணவர்களையும் அழைத்தேன். ‘ஃபிகர்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வடிவம் என்று பொருள்; அது பெண்ணைக் குறிக்கும் சொல் அல்ல என்பதை அவர்களுக்குச் சொன்னேன். அவர்களோடு என்னிடம் டியூஷன் படிக்கும் அனைவருக்கும் இதைச் சொன்னேன்.

இந்தச் சம்பவம் குறித்து நான்காம் வகுப்பு மாணவனின் அம்மாவிடம் சொன்னேன். அவரும் தன் மகன் சொன்னது சரிதான். ‘ஃபிகர்’ என்றால் பெண்தானே என்றும் திரைப்படங்களில் அப்படித்தானே சொல்கிறார்கள் என்றும் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

படிப்பறிவு குறைந்த மக்களிடம் திரைப்படங்கள் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைத்தான் அந்தப் பெண்ணின் பேச்சு உணர்த்தியது. திரைப்படங்கள் அந்தக் குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்குப் பெண்ணைச் சிறுமைப்படுத்தும் பொருளைக் கற்றுத் தந்ததுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. பெண்களைப்

போகப் பொருட்களாகவும் உடல்களாகவும் மட்டுமே பெரும்பாலான திரைப்படங்கள் சித்தரிக்கின்றன. அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதிக்கம் செலுத்தும் ஊடகத்தில் இப்படி மலிவான கருத்துகளைச் சொல்வது நல்லதல்ல. பெண்களைக் கண்ணியமாகச் சித்தரிக்க வேண்டும். அதுவே இளைய மனங்களில் பெண்ணைப் பற்றிய மலிவான சிந்தனைகள் ஏற்படாமல் தவிர்க்கும்.

இந்தச் சம்பவம் நடந்த நாள் முதல் அனைத்து மாணவர்களுக்கும் பாலினப் பாகுபாடு தவறு என்பதைச் சொல்லிவருகிறேன். பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுத்தருகிற அதே நேரம் ஆண்கள் எப்படிக் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லித்தருகிறேன். அவர்கள் அனைவரும் குழந்தைகள் என்பதால் அவர்களுக்குப் புரியும் வகையில் சிறு சிறு உதாரணங்களுடன் சொல்லிவருகிறேன்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்வதோடு அனைவரும் பெண்களுக்கே அறிவுரை கூறும் அவலத்தையும் சொல்கிறேன். பெண்ணுக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திவிட்டு எல்லாச் சூழ்நிலைகளிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்படி ஆணுக்குச் சொல்லி வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இதை மனத்தில் வைத்துச் செயல்பட வேண்டும்.

- பிரியா, ஈரோடு.

நீங்களும் சொல்லுங்களேன்

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவம் முதல் கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனத்துக்குத் தெளிவைத் தரலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close