[X] Close

வாழ்ந்து காட்டுவோம் 06: கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நிதியுதவி


06

  • kamadenu
  • Posted: 19 May, 2019 10:02 am
  • அ+ அ-

-ருக்மணி

ஒரு காலத்தில் சகுனம் பார்த்தல் என்பதே ஒரு சடங்காக நடக்கும். பூனை குறுக்கே வந்தால், யாராவது தும்மினால், வாசல் கதவில் இடித்துக்கொண்டால், கல் தடுக்கினால் என்று பட்டியல் நீளும். கணவனை இழந்த பெண் எதிரே வந்துவிட்டால் அவ்வளவுதான். அந்தப் பெண்ணை, எந்த வயதுடையவராக இருந்தாலும் கரித்துக்கொட்டுவார்கள். அவரைப் பார்த்த தோஷம் விடுபட மீண்டும் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுச் சிறிது நேரம் கழித்துத்தான் கிளம்புவார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள். கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது, மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பது போன்ற தனிமனித உரிமைகளுக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்த்துச் சமூக நீதியில் நம்பிக்கைகொண்ட பெண்களும் ஆண்களும் போராடினர். திருமணத்தின்போதுதான் கணவன் என்கிற ஒருவனின் வரவு வந்தது.

அதுவரை விதவிதமாகப் பொட்டுவைத்துத் தலைவாரிப் பூச்சூடி மகிழ்ந்தவர்கள், கணவன் இறந்துவிட்டால் பூ, பொட்டு போன்றவற்றை வைக்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? மனைவியை இழந்த கணவன் தலைவாராமல், தாடி மீசை மழிக்காமல், பவுடர் போடாமல் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்வது இல்லையே.

ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயமா என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கத் தொடங்க ஆரம்பித்தன. அரசும் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்து, பெண்கள் முன்னேற்றத்துக்கான சில சட்டங்களையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியது.

விதவைப் பெண்கள், மறுமணம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்’ செயல்படுத்தப்பட்டுவருகிறது.

வழங்கப்படும் உதவி

திட்டம் 1 : ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.15,000, மின்னணுப் பரிமாற்ற சேவை மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 23.05.2016 முதல் தாலி செய்வதற்காக ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.

திட்டம் 2: ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.30,000, மின்னணுப் பரிமாற்ற சேவை மூலமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 23.05.2016 முதல் தாலி செய்வதற்காக ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.

 

மாற்றத்தை நோக்கிய மனமாற்றம்

அரசின் திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடைய வேண்டும் என்றால் நம் மனத்தில் மாற்றம் வர வேண்டும். கணவனை இழந்த பெண்கள் சிலரை அவர்களின் மறுமணத்துக்குப் பிறகு சந்தித்தபோது அவர்கள் பகிர்ந்துகொண்டவை, ஆண் - பெண் தொடர்பாகச் சமூகத்தில் இப்போதும் நிலவக்கூடிய பாரபட்சமான பார்வையை உறுதிசெய்தன.

vaaznthu 2.jpg

கணவனை இழந்த பெண்ணை ஒருவர்  மணந்துகொள்ளும்போது, சமுதாயம் அவரைத் தியாகி என்றும் முற்போக்குவாதி என்றும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துவிட்டார் என்றும் புகழ்ந்துதள்ளுகிறது. அதேநேரம், மனைவியை இழந்த ஒரு ஆணை, ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இதுபோன்ற பாராட்டுப் பத்திரத்தைச் சமூகம் அளிக்கிறதா? அவளை இரண்டாம்தாரம் என்றும் ‘சித்தி கொடுமை’ என்றும் தூற்றியல்லவா பேசுகிறது.

முதல் மனைவியை இழந்த ஒரு ஆண், இரண்டாம் திருமணம் செய்தவுடன் புதுமணத் தம்பதியாக வீட்டுக்கு வரும்போது ஆரத்தி எடுத்து, புது மணமகளைப் பூஜை அறையில் விளக்கேற்றச் சொல்வார்கள். அங்கு சாமி படங்களுடன் இறந்துபோன முதல் மனைவியின் போட்டோவும் இருக்கும். “அக்கா படத்துக்கு விழுந்து கும்பிடு” என்பார்கள்.

அந்தப் பெண்ணும் கும்பிடுவார். ஆனால், மறுமணம் செய்துகொண்ட ஒரு பெண், தன் பூஜை அறையில் தன் முதல் கணவனின் போட்டோவை வைத்து, “ஏங்க உங்க அண்ணன் படத்தையும் விழுந்து கும்பிடுங்க” என்று தன் இரண்டாம் கணவனிடம் சொல்லிவிட முடிகிறதா?

இதற்கெல்லாம் என்ன காரணம், யார் காரணம்? ஊர் என்ன சொல்லும் என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். விதவை மறுமணத்தைப் பெரிய சமூக சேவைபோல ஊர் பாராட்டும்போது ஏற்றுக்கொண்டாலும், அடிமனத்தில் இவள் இன்னொருவன் மனைவியாக இருந்தவர்தானே என்னும் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அந்தப் பெண்ணின் மன உணர்வுகளை வார்த்தைகளால் காயப்படுத்தாத இரண்டாம் கணவன்கள் குறைவு. வாய்ச்சொல் வீரனாக இருந்தால் மட்டும் போதாது. செயல் வீரனாகவும் ஆண்கள் மாறினால் மட்டுமே கைம்பெண் மறுமணம் உண்மையான வெற்றிகரமான மண வாழ்க்கையாக இருக்கும்.

 

 

பயன் பெறுபவர் - மறுமணம் செய்யும் கைம்பெண் தகுதிகள்

அ. கல்வித் தகுதி

திட்டம் – 1: கல்வித் தகுதி தேவையில்லை.

திட்டம் 2: 1. பட்டதாரிகள், கல்லூரியிலோ தொலைதூரக் கல்வி மூலமோ அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களிலோ படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டயப் படிப்பு ( Diploma) தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 வருமான வரம்பு: வருமான வரம்பு இல்லை.

 வயது வரம்பு: மணமகளின் குறைந்தபட்ச வயது 20-ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதர நிபந்தனைகள்: மணமகனுக்கு இதுவே முதல் திருமணம் என்று வட்டாட்சியரிடமிருந்து சான்று.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: மறுமணம் செய்த நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள்.

அணுக வேண்டிய அலுவலர்கள்: 1. மாவட்டச் சமூகநல அலுவலர்கள்

2. சமூகநல விரிவாக்க அலுவலர்கள்

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

1. விதவைச் சான்று

2. மறுமணம் செய்ததற்கான திருமண அழைப்பிதழ்

3. மணமகன், மணமகள் இருவரின் வயதுச் சான்று

4.பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தேர்ச்சிச் சான்று (திட்டம்-2)

விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தேசிக்கப்பட்ட கால அளவு: விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்.

குறைபாடுகள் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்கள்:

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சியர்/மாவட்ட சமூகநல அலுவலர்.

 மாநில அளவில்: சமூக நல ஆணையர், 2-வது தளம்

பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015. தொலைபேசி எண். 044 – 24351885

 

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close