[X] Close

என் பாதையில்: எதை வென்றீர்களோ அதனிடமே அடிபணியலாமா?


  • kamadenu
  • Posted: 19 May, 2019 10:02 am
  • அ+ அ-

கறுப்பாக இருக்கும் என் நெருங்கிய உறவினருக்கும் மாநிறம் கொண்ட எனக்கும் அடிக்கடி சண்டை வரும். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வளர்ந்தோம். நான் அவரைப் பல முறை நிறத்தை வைத்து கேலி செய்திருக்கிறேன். பெரும்பாலும் அவர் பதிலுக்கு எதுவும் சொல்ல மாட்டார். ஒரு நாள் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. என்னை ‘பளார்’ என்று அறைந்துவிட்டார். நான் சீற்றத்துடன் மீண்டும் அவரது நிறத்தைக் குறிப்பிட்டுத் திட்டினேன். மீண்டும் அறை விழுந்தது.

இவ்வாறாக எனக்கு நான்கைந்து அறைகள் விழுந்தன. நிறத்தை வைத்து ஒருவரைக் கேலி செய்வதும் பாகுபாடு காட்டுவதும் சம்பந்தப்பட்டவருக்கு எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்பதை எனக்கு அந்த நிகழ்வு உணர்த்தியது. அன்றிலிருந்து யாரையும் அவர்களது நிறம் குறித்தோ தோற்றம் குறித்தோ கேலி செய்ததில்லை.

நிறத்துக்கும் அழகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வதிலேயே நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். சிவப்பு நிறம்தான் அழகு என்பது இந்திய மனங்களில் ஊறிப்போய்விட்டது. இருபாலரும் இதனால் பல நிலைகளில் பாதிக்கப்பட்டாலும் அதிக வலியைச் சுமப்பவர்கள் பெண்கள்தாம். திருமண நிகழ்வுகளின்போது, “மாப்பிள்ளை நல்லாப் படிச்சிருக்கான். கை நிறையச் சம்பாதிக்கறான். ஏன் இப்படிக் கறுப்பான பொண்ண கட்டிக்கறான்னு தெரியல” என்பது போன்ற பேச்சுகள் பெண்கள் மத்தியிலேயே எழுவது சகஜம்.

கறுப்பாக இருப்பது பெரும் குறை என்று நினைத்துக் குறுகிப்போகும் அளவுக்கு இந்தச் சமூகம் அழகு குறித்த கற்பிதத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. அதன் விளைவாகத்தான் கறுப்புத் தோலைச் சிவப்பாக்கிப் பொலிவும் அழகும் ஊட்டுவதாக வாக்குறுதி அளிக்கும் சிவப்பழகு கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கான மாபெரும் சந்தையாக இந்தியா உருவெடுத்துவிட்டது.

சிவப்பழகு கிரீம்களுக்கான விளம்பரங்களில் முன்னாள், இந்நாள் உலக அழகிகளும்  திரைப்பட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். அந்த விளம்பரங்களில் தோன்றி, “நான் இந்த கிரீமைப் பயன்படுத்தி சிவப்பாக மாறியதுதான் என் வெற்றிக்குக் காரணம்” என்ற பொய்யைப் பெருமையுடன் கூறியுள்ளனர்.

கடந்த 10-15 ஆண்டுகளாக சிவப்புத் தோலை அழகாகவும் வெற்றி பெறுவதற்கான வழியாகவும் முன்வைக்கும் விளம்பரங்களுக்குப் பெண்ணியவாதிகளும் மகளிர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இவற்றின் தாக்கத்தால் சிவப்பழகு கிரீம்களுக்கு எதிரான மனநிலையும் ஓரளவு வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது.

நந்திதா தாஸ், கங்கனா ராணாவத், ரன்பீர் கபூர் போன்ற திரைத்துறை நட்சத்திரங்கள் சிவப்பழகு கிரீம் விளம்பர வாய்ப்புகளை மறுத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய்கூடத் தொடக்க காலத்தில் நடித்தாலும் பிறகு அவற்றில் நடிக்க மறுத்து விட்டார் என்ற செய்தியைப் படித்திருக்கிறேன். அண்மையில் நடிகை சாய் பல்லவி சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்தார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பலரது பாராட்டைப் பெற்றது.

சிவப்பழகு மோகம் தமிழ்நாட்டை மட்டும் விட்டுவைத்திருக்கிறதா என்ன? தமிழ் நடிகைகள் பலரும் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடித்துள்ளனர். தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்திருக்கும் ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரம் ஒன்று யூடியூபில் சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பரத்தில் கவனமாக ‘பொலிவு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் காட்சி அமைப்பில் கறுப்பு நிறம் சிவப்படைவதைத்தான் ‘பொலிவு’ என்று காண்பிக்கிறார்கள். விளம்பரத்தைப் பார்த்தவுடன் வேதனை அடைந்தேன்.

ஒரு தனிநபராக எந்த ஒரு விளம்பரத்திலும் நடிப்பது நடிகையின் உரிமை. இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதற்கு அவருக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் அவரது இந்தத் தேர்வு எனக்குப் பெரும் ஏமாற்றம் அளித்தது. எதைத் தோற்கடித்தாரோ அதனிடமே அடிபணிந்திருக்கிறாரோ என்று நினைக்கவைக்கிறது.

தன் நிறத்தால் பல்வேறு தடைகளைச் சந்தித்திருப்பதாக அவரே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். “உன்னால் கதாநாயகியாகச் சாதிக்க முடியாது. நாயகனின் சகோதரி, தோழி போன்ற வேடங்களுக்கு முயற்சி செய்” என்று பலர்  தன்னிடம் சொன்னதாகவும் அதுவே தன்னை கதாநாயகியாகச் சாதிக்கத் தூண்டியதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். இப்போது பல படங்களில் சிறப்பாக நடித்துத் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகை என்ற மதிப்பை மட்டுமல்லாமல் முன்னணி நட்சத்திர அந்தஸ்தையும் பெற்று சாதித்துக் காட்டியிருக்கிறார்.

இருந்தாலும், அவர் இப்போதும் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெறுவதில்லை. இதற்கும் கதாநாயகி விஷயத்தில் தமிழ் சினிமாவை ஆட்கொண்டுள்ள சிவப்புத் தோல் மோகத்துக்கும் தொடர்பிருக்கிறது. கதைப்படி கறுப்புத் தோல் கொண்ட பெண் கதாபாத்திரத்துக்குக்கூட சிவப்புத் தோல் நடிகைகளுக்குச் சாயம்பூசி நடிக்க வைக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகம். 

இப்படிப்பட்ட சூழலில் அந்த நடிகை இன்று அடைந்திருக்கும் இடம், தோற்றத்துக்காக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல பெண்களுக்கு ‘நம்மால் சாதிக்க முடியும்’ என்ற உத்வேகம் அளித்திருக்கிறது. அப்படிப்பட்டவர் சிவப்புத் தோலை அழகு என முன்னிறுத்தும் விளம்பரத்தில் நடிப்பது அவரது சாதனைகள் அளித்திருக்கும் தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

- திவ்யா, சென்னை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close