[X] Close

வாசிப்பை நேசிப்போம்: இருக்கும் வரைக்கும் வாசிப்பு தொடரும்


  • kamadenu
  • Posted: 19 May, 2019 10:02 am
  • அ+ அ-

எழுபதுகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெரும்பாலான பெண்களுக்குப் பத்திரிகைகளும் நாவல்களுமே பொழுதுபோக்க உதவின. 73-ல் பள்ளிப்படிப்பை முடித்தேன். அம்மா என்னைக் கல்லூரிக்கு அனுப்ப மறுத்துவிட்டார். ஆனால், ஐந்து ரூபாய் கட்டி வாடகை நூலகத்தில் உறுப்பினராக்கிவிட்டார். தம்பிதான் புத்தகங்களை எடுத்துவருவான். அதற்கே அவனைக் கெஞ்ச வைத்துவிடுவான். ஆனாலும், கிட்டத்தட்ட ஐந்நூறு நாவல்களை வாசித்து ரசித்தேன். நா.பார்த்தசாரதி, சாண்டில்யன் இருவரும்தாம் அப்போது என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்கள்.

நா. பார்த்தசாரதியின் நடை இயல்பாகவும் கச்சிதமாகவும் இருக்கும். ‘பொன் விலங்கு’, ‘சத்திய வெள்ளம்’ நாவல்களில் குறிப்பிட்டுள்ள மல்லிகைப்பந்தல் ஊரை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? சாண்டில்யனின் சரித்திர நாவல்களுக்கும் நான் ரசிகை. வியூகம் அமைத்து எழுதுவதில் அவர் வல்லவர். ‘பாகுபலி’ திரைப்படத்தில், மகிழ்மதியைக் காக்க வியூகம் அமைத்ததைப் பார்த்தவுடன் ‘யவனராணி’யில் சர்ப்ப வியூகத்தை முறியடிக்கக் கருட வியூகம் அமைத்தது நினைவில் வந்தது. அதுபோல் கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’யும் சிறப்பாக இருக்கும். கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்று பெண்களுமே மூன்று வெவ்வேறு மதத்தினர்.

மாதம் ஒருமுறை வரும் ராணிமுத்துவை அன்று ஒரே நாளில் படித்து விடுவேன். சில நாவல்களை அப்பாவையும் வாசிக்கச் சொல்வேன். அவர்கள் படித்ததும் இருவரும் அது குறித்து உரையாடுவோம். இப்போதும் அந்த உரையாடல் தொடர்கிறது. வானொலியில் பாடலைக் கேட்டுக்கொண்டே வாசிப்பது தனி சுகம். பக்கத்து வீடுகளுக்கு ஆசிரியர் யாராவது வாடகைக்கு வந்தால் எனக்குக் கொண்டாட்டம். பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் வருமே. திருமணம் ஆனவுடன் வாசிப்பில் சிறு இடைவெளி விழுந்தது. விரைவிலேயே விட்ட இடத்திலிருந்து வாசிப்பைத் தொடர்ந்தேன்.

இப்போதும் இரவு புத்தகங்களை வாசித்த பிறகே தூங்கச் செல்வேன். குழந்தைகளைச் சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்போல் அங்கிங்கெனாதபடி எங்கும் கிடக்கும் புத்தகங்கள் என் தோழிகள். இன்று நான் வார, மாத இதழ்களை விரும்பி வாசிக்கிறேன். நாவல்களை விரைவாக வாசிக்க இயலவில்லை. ஆனாலும், சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்துவின்  ‘கருவாச்சி காவியம்’ புத்தகத்தை 20 நாட்களில் வாசித்தேன்.

ஆணாக இருந்தும் பிரசவத்தைக் கச்சிதமாக, கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் எழுதிய அவரது திறமையை வாசித்து அதிசயித்தேன். நெல்லை வானொலியில் நடக்கும் வார்த்தை விளையாட்டில், வாசிப்பு அனுபவம் கைகொடுக்கும். கண்புரை அறுவை சிகிச்சை  முடிந்த பிறகு 20 நாட்களுக்கு வாசிக்க முடியாமல் நான் பட்டபாடு சொல்ல முடியாதது. என் கைப்பையில் எப்போவும் புத்தகம் இருக்கும். உயிர் உள்ளவரை நிற்காது என் வாசிப்பு.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப்பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

- என். கோமதி, பெருமாள்புரம், நெல்லை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close