[X] Close

சின்னஞ் சிறு கிளியே!


  • kamadenu
  • Posted: 18 May, 2019 12:03 pm
  • அ+ அ-

-டாக்டர் ஆ. காட்சன்

சிறுகுழந்தைகளின் சேட்டைகளை ரசித்து, கொஞ்சும் ஒவ்வொருவரும் ‘இந்தச் சிறிய மூளைக்குள் அப்படி என்னதான் சிந்தனைகள் ஓடுமோ?’ என்று ஒருமுறையாவது யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.

பிறந்த குழந்தைகள் முதல் பதின்பருவ வயதினர் வரை எப்படிச் சிந்திப்பார்கள், சுற்றியுள்ளவர்களோடு தங்களை எப்படி ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள், அது எப்படி அவர்களது சமூக, சிந்தனை ஆற்றலின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து உலகுக்கு வெளிப்படுத்திய முக்கிய மனிதர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘குழந்தைகள் உளவியலின் தந்தை’ ஜீன் பியாஜெட் (1896-1980).

குழந்தைகளின் சிந்தனை, கற்பனை ஓட்டம் உருவாகி முதிர்ச்சி பெறுவதை நான்கு நிலைகளாக அவர் பிரித்துள்ளார்.

பிறப்பு முதல் இரண்டு வயது வரை

பிறந்த குழந்தையின் முதல் கற்றல் அனுபவம், தாயின் மார்பகங்கள் கன்னத்தில் பட்டால்கூட வாயைத் திறந்து அதைத் தேடி சப்புவதற்கு முயல்வதில் ஆரம்பிக்கிறது. நாம் குழந்தையின் கன்னத்தில் தொட்டால்கூட வாயைத் திறப்பதற்குக் காரணமும் இதுதான். இப்படித்தான் தொடு உணர்வு மூலமாகச் சுற்றுப்புறத்துடனான தனது உறவை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறது பச்சிளம் குழந்தை.

சில மாதங்களில் அசைவுகள் மூலமாக அடுத்தகட்ட கற்றலைத் தொடர ஆரம்பிக்கும். கிலுகிலுப்பையைப் பார்த்து, பின் அதை ஆட்டுவதன் மூலம் ஆரம்பித்து, அதுபோலவே இருக்கும் மற்ற பொருள்களையும், ‘இப்படித்தான் ஆட்ட வேண்டும்போல’ என்று அறிந்துகொள்ளும்.

ஒரு வயதுக்கு மேல், சுற்றியுள்ள பொருள்களிலிருந்து தான் வேறுபட்டவன் என்பதை அறிந்து, ஒரு பொருள் பார்வையில் படாத வேளைகளிலும் அந்தப் பொருளைத் தனது கற்பனையில் உருவகப்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது. நாம் ‘பந்தை எடுத்து வா’ என்று சொன்னாலே, பந்தின் உருவத்தைக் கற்பனையில் தோற்றுவித்து அதைத் தேட ஆரம்பிக்கும்.

இரண்டு முதல் ஏழு வயது வரை

இந்தப் பருவத்தில்தான் ஏராளமான, ஆனால் முதிர்வற்ற சிந்தனை ஆற்றல் குழந்தைகளுக்கு உருவாகும் என்பது ஜீனின் ஆராய்ச்சி முடிவு. ‘கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சிப் பாருங்க’ என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். இந்த வாதப் பொருத்தமுடைய சிந்தனைகள் இன்னும் உருவாகாததால் குழந்தை களுக்கு ‘இதன் விளைவாக இது ஏற்படுகிறது’ என்று தொடர்புபடுத்திச் சிந்திக்க முடிவதில்லை.

அதனால்தான் ஒரு பொம்மையைக் கைதவறி உடைத்து விட்டால், ‘அதை நான்தான் உடைத்துவிட்டேன்’ என்று நினைப்பதற்குப் பதிலாக ‘அது உடைவதற்குத் தயாராக இருந்திருக்கும்’ என்று குழந்தை நினைக்கும். மேஜை, படுக்கை அறை, வராந்தா என வெவ்வேறு இடங்களில் பார்க்கும் தனது பால் பாட்டிலை மூன்றும் வெவ்வேறு பொருள்கள் என்றுதான் நினைக்குமே தவிர, ஒரே பொருள் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்துள்ளது என்று குழந்தையின் மனத்துக்கு நினைக்கத் தோன்றாது.

நல்லது, கெட்டது கொஞ்சம் தெரிந்தாலும் நன்னடத்தைக்குரிய விஷயங்களைப் பகுத்தாராய்வது ஏழு வயதுவரை முதிர்ச்சியற்ற நிலையிலேயே காணப்படும். வேண்டுமென்றே ஒரு பிஸ்கட்டைத் தூக்கி எறிந்தவன்; தெரியாமல் ஐந்து பிஸ்கட்டுகளைக் கீழே தவற விட்டவன்; இவ்விருவரில் யார் தவறிழைத்தவன் என்று கேட்டால் அதிக பிஸ்கட்டைத் தவறவிட்டவன்தான் எனக் கணக்கின் அடிப்படையில் சிந்தித்துச் சொல்லும்.

‘பாப்பா தூங்கிக்கொண்டிருக்கிறது, சத்தம் போட்டு விளையாடாதே’ என்று எச்சரித்தால் அதைப் புரிந்து கொள்ள இந்த வயதுக் குழந்தைகளால் முடிவதில்லை. மற்றவர்களுக்காகத் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் அல்லது மற்றவர்கள் இடத்தில் தங்களை வைத்து யோசிக்கும் பக்குவம் உருவாகாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

இது தெரியாமல் குழந்தைகளைத் தண்டிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்களும் உண்டு. உயிரற்ற பொருள்களுக்கும், தனது பொம்மைக்கும்கூட உணர்வுகள் உண்டு. தான் அடித்தால் அதற்கு வலிக்கும் அல்லது அது நினைத்தால் நம்மைத் தண்டிக்கும் என்ற எண்ணம் இந்தப் பருவத்தில் இருக்கும் குழந்தைகளிடம் காணப்படுவது வளர்ச்சியின் அங்கமாகும்.

chinnanchiru 2.jpg 

முக்கியமாக, தான் செய்யும் தவறுகளுக்கு நிச்சயமாகத் தண்டனைகள் உண்டு, அது தவிர்க்க இயலாதது என்ற பயம் இருக்கும். இதனால் மிரட்டப்பட்ட குழந்தை மீண்டும் ஆற்றுப்படுத்தப்படாவிட்டால் நிரந்தர பயத்துடன் இருக்க வாய்ப்புள்ளது. ‘இந்தப் பாடலைப் பாடாவிட்டால் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்ல விட மாட்டேன்’ என்று மிரட்டினால், பாடிவிட்டால்கூட வீட்டுக்குச் செல்ல முடியாதோ என்ற பயத்தில்தான் குழந்தை இருக்கும். பள்ளியைக் கூடப் புறக்கணிக்க ஆரம்பிக்கும்.

அம்மா வேலைக்குச் சென்று விட்டால் வீடு திரும்பவே மாட்டார்கள், விபத்தில் அப்பாவின் கை எலும்பு உடைந்துவிட்டது. இனி, அதை ஒட்டவைக்கவே முடியாது என்ற மழலைச் சிந்தனைகள் குழந்தைகளைப் பதற்றமடைய வைத்துவிடும்.

ஏழு முதல் பதினொன்று வரை

இந்தப் பருவத்தில் தான் குழந்தைகள் பொருள்களைச் சிறியது முதல் பெரியது என்று வரிசைப்படுத்தவும், இவை பழங்கள், இவை விலங்குகள் என்று குழுவாகப் பிரித்தறியவும் ஆரம்பிக்கும். நன்னடத்தை, சமூக நெறிகளைப் பற்றிய சிந்தனைகள் ஆரம்பிக்கும் பருவமும் இதுதான்.

அறிவுரைகள் மற்றும் ஒழுக்கநெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அகலமான பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் ஒரு குறுகிய டம்ளரில் ஊற்றப்பட்டால், பாத்திரத்தில் இருந்த தண்ணீர்தான் அளவில் அதிகம் என்று முடிவு செய்த பழைய சிந்தனை மாறி இரண்டும் ஒரே கொள்ளளவுதான் என்ற முடிவுக்கு வரும் திறனாற்றல் இந்த வயதில்தான் ஏற்படும். பிரிவு நிரந்தரமல்ல, உடைந்தால் சரிசெய்துவிடலாம் என்ற மன முதிர்வு ஏற்படும்.

chinnanchiru 3.jpg

ஆனால், இன்னமும் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று கேட்டால் யானை கீழே விழுந்துவிடும் என்று சிந்திக்கத்தான் இயலுமே தவிர, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அதன் உள் அர்த்தம் அல்லது சாராம்சத்தைச் சிந்திக்க இயலாது.

பதினோரு வயதுக்கு மேல்

இந்தப் பருவத்துக்கு நுழைந்த பின்புதான் மேலே குறிப்பிட்ட முதிர்வுபெறாத அல்லது குறைவாக உள்ள சிந்தனை ஆற்றல் முழு முதிர்ச்சியைப் பெற்றுப் பதின்பருவ மற்றும் வயது முதிர்ந்தோருக்கான சிந்தனை, கற்பனை ஆற்றல், உயர் சிந்தனைத் திறன் போன்றவை முழுமைபெறும். தர்க்கம், பகுத்தாராய்வுக்குத் தேவையான சிந்தனை ஆற்றலைக் குழந்தைகள் பெறுவார்கள்.

ஜீன் பியாஜெட்டின் கண்டுபிடிப்புகள் வெறும் ஆராய்ச்சி முடிவுகள் மட்டுமல்ல; கல்வியாளர்களால் பாடத்திட்டங்களை அமைப்பதிலும், ஆசிரியர்களால் பள்ளிகளிலும், பெற்றோர்களால் வீட்டிலும் புரிந்துகொள்ளப்பட்டு தினசரி பின்பற்ற வேண்டிய நடைமுறைக்கல்வி ஆகும். நான்கு வயதுக் குழந்தையிடம் எட்டு வயதுக் குழந்தையின் சிந்தனை, செயல்திறனை எதிர்பார்த்துக் கல்வியையோ நெறிமுறைகளையோ திணிப்பது, ஊசியின் காதில் ஒட்டகத்தைத் திணிக்க முயல்வது போன்றது.

இது குழந்தையின் மனவளர்ச்சியையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ‘தேர்வில் பத்துக் கேள்விகளைத்தானே கேட்கிறார்கள், பின் நான் ஏன் நூறு கேள்விகளைப் படித்துச் செல்ல வேண்டும்’ என்று கேட்ட ஒரு ஐந்து வயதுக் குழந்தையின் கேள்விக்குத் தற்காலக் கல்விமுறை என்ன பதிலைச் சொல்ல முடியும்?

கட்டுரையாளர், மனநலமருத்துவர், உதவிப் பேராசிரியர்,
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close