[X] Close

'வீட்டில்தான் இருக்கிறார் பாலகுமாரன்!’


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:55 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

மயிலாப்பூர் வாரன் சாலையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இருக்கிறது எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் வீடு. எப்போதும் போல் அங்கே நிரம்பியிருக்கிறது கூட்டம்.

எல்லோரும் உறவுக்காரர்கள். எழுத்தாளருக்கும் வாசகருக்கும் உள்ள தொடர்பில் மலர்ந்த உறவுகள் அவை.

‘’சாந்தா... கொஞ்சம் காபி குடும்மா’’ என்று பாலகுமாரன் கேட்காமலேயே அவருக்கு தினமும் காலையில் காபி வழங்கப்படுகிறது.

ஹாலில் ஒரு சோபாவில் அந்த சிநேகமுள்ள சிங்கம், கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும். வாசல் கதவு திறந்ததுமே சிங்க தரிசனம், கனிவுடன் கிடைக்கும்.

இப்போதும் அப்படியான சிலிர்க்கச் செய்யும் தரிசனம்தான். ஆனால் சோபா அங்கே இல்லை. பூஜையறையில் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு அருகிலேயே இருக்கிறார் சிஷ்யன் பாலகுமாரன்.

யோகி ராம்சுரத்குமாரம்

யோகி ராம்சுரத்குமாரம்

யோகி ராம்சுரத்குமாரம்

ஜெயகுரு ராய...

 

என்று சத்சங்கத்தினர் மெல்லப் பாடத் தொடங்கினார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே திங்கள், வியாழன் என்றெல்லாம் இல்லாமல், அனுதினமும், எல்லா நாளும் நடந்துகொண்டிருக்கிற பஜன், அந்த வீட்டின் சாந்நித்தியத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது. அந்த சக்தி, ஒவ்வொரு முகத்திலும் அகத்திலும் வெளிச்சம் பரப்பிக்கொண்டே இருக்கிறது.

இன்றைக்கும் அப்படித்தான் தொடர்ந்தது பஜன். பாடல்களாலும் பஜனைகளாலும் நாமாவளிகளாலும் அந்த வீட்டுச் சுவர், இந்தக் கோடையிலும் வெம்மையிலும் குளிர்ந்துதான் போயிற்று.

ஹால்தான் பூஜை ரூம். பூஜையறைதான் வீட்டு வரவேற்பறை. ஹாலில் பாதி, பூப்பந்தல் போடப்பட்டிருந்தது. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு வாசகர்களை எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதேபோல் வாசனையையும் ரொம்பவே பிடிக்கும். மலர்களின் மணம் கமழ, ஆன்மிக மணம் கமழ, அத்தனையையும் ரசித்துக்கொண்டிருந்தார், பாலகுமாரன்.

 

இனிது இனிது காதல் இனிது என்றவராயிற்றே. ஒருகட்டத்தில், அன்பு இனிது, ஆன்மிகம் இனிது, பண்பு இனிது, நேசம் இனிது, ஒருங்கிணைத்தல் இனிது, ஒன்றிணைத்தல் இனிது என்றும் வாழ்ந்து காட்டி, எல்லோருக்கும் உணர்த்தியவரல்லவா பாலகுமாரன்.

எல்லோரும் ஒரு தாளத்துக்குக் கட்டுப்பட்டு பாடினார்கள். உற்சாகமாகப் பாடினார்கள். ஒருமித்துப் பாடினார்கள். குருநாதர் பாலகுமாரனை நினைத்துப் பாடினார்கள். பாலகுமாரனுக்குக் கேட்க வேண்டும் எனப் பாடினார்கள்.

ஹாலுக்கு அடுத்து உள்ளது படுக்கையறை. தன் வாசகர்களை தட்டி எழுப்பி, உசுப்பி, நேர்படுத்திய எழுத்துச்சித்தரின் படுக்கையறை. அந்தக் கட்டிலின் மெத்தையில் அமர்ந்து சாய்ந்தபடி, சின்னதான சாய்வு டேபிளில், புத்தகம் வைத்துப் படிப்பார் பாலகுமாரன். அந்த மெத்தையில் சின்னதான டேபிளும் புத்தகமும் இருக்கிறது. கண்ணாடி என வாழ்க்கையைக் காட்டிய பாலகுமாரனின் கண்களுக்கு ஒளியேற்றி, மூக்கில் சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் மூக்குக்கண்ணாடியும் நெஞ்சுக்குப் பக்கத்தில், சட்டைப்பையில் நிமிர்ந்து நிற்கும் பைலட் பேனாவும் அங்கே ரெடியாக காத்திருக்கின்றன.

பல வருடங்களாகவே பாலகுமாரன் கதையை கேசட்டில் பதிவு செய்ய, அதை உதவியாளர் பேப்பரில் எழுதிக்கொள்வார். இப்படி உருவான படைப்புகளும் புத்தகங்களும் ஏராளம்.

‘பேசு பாலா, உன் கம்பீரமான குரலைப் பதிவு செய்யத்தான், உன்னோட கதையைச் சுடச்சுட கேக்கறதுக்குத்தான் ஆசையோட இருக்கேன். பேசு பாலா, கதை சொல்லு பாலா’ என்று வாக்மேனும் கேசட்டும், ஏக்கமாகவும் ஆசையாகவும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

ஹாலில் இருந்த சிங்கத்தின் சிம்மாசனம், இப்போது படுக்கையறையில். படுக்கைக்குப் பக்கத்திலேயே! அந்த சோபாவில், சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது, பாலகுமார முகம்.

லட்சக்கணக்கான வாசகர்களின் வாழ்வுக்கு ஊன்றுகோலாக, நெம்புகோலாக இருந்த பாலகுமாரனின் அந்த ஊன்றுகோல், கைத்தடி... சோபாவில் சாய்ந்துகொண்டிருக்கிறது. ‘கிட்டத்தட்ட 300 புத்தகங்கள் தந்த கை, என்னைப் பிடிச்சிக்கிறது எனக்கு எவ்ளோ பெருமை தெரியுமா?’ என்று மரத்தால் செய்யப்பட்ட அந்த ஊன்றுகோல் நினைக்குமோ என்னவோ?

கதைகளுக்காகவும் கதைக்களத்துக்காகவும் சோழ சாம்ராஜ்ஜியப் பகுதியை முழுவதுமாக அறிந்து உணருவதற்காகவும் கங்கை வரைக்கும் பயணப்பட்ட பாதங்களைத் தாங்கிக்கொள்ளும் பாலகுமாரனின் காலணிகள்... சோபாவுக்கு அருகில்!

நேரம் ஆக ஆக, கூட்டம் இன்னும் கூடுகிறது. அங்கே சத்விஷயம் இனிமையாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 300 புத்தகங்களின் எழுத்துக்குள்ளேயும் இருந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன். இதோ... மயிலாப்பூர் வாரன் சாலை வீட்டுக்கு வருகிற தன்னுடைய வாசகர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாலகுமாரன்.

‘அப்பாவுக்கு இதுதான் பிடிக்கும். இப்படி எல்லாருமா சேர்ந்து வழிபடுறதுதான் ரொம்பவே விருப்பம். அவர் இருக்கும்போது ஒரு பூஜையோ வழிபாடோ எப்படி சிறப்பா, சிரத்தையா நடக்குமோ, அப்படித்தான் இன்னிக்கும் நடக்குது. அப்பாவே நடத்திக்கிட்டிருக்கார்’’ என்கிறார் சூர்யா பாலகுமாரன்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் நினைவு நாள் இன்று (15.5.19).

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close