[X] Close

டிங்குவிடம் கேளுங்கள்: ஆலங்கட்டி மழை எவ்வாறு உருவாகிறது?


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:19 am
  • அ+ அ-

யார், எங்கே, எப்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தது, டிங்கு?

நல்ல கேள்வி. ஆனால், இவர்தான் என்று எளிதில் பதில் சொல்லிவிட முடியாத கேள்வி. மின்சாரம் என்பது இயற்கையான ஆற்றல். இதை யாரும் உருவாக்கவில்லை; கண்டுபிடிக்கத்தான் செய்தனர்.

மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்று பெரும்பாலும் நினைக்கிறார்கள். ஆனால், அவர் மின்னலுக்கும் மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பைதான் தன் பரிசோதனை மூலம் கண்டறிந்தார். சரி, யார்தான் மின்சாரத்தைக் கண்டுபிடித்தது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மின்சாரத்தைப் பற்றி அறிய ஆரம்பித்துவிட்டான். கி.மு. 6-ம் நூற்றாண்டில் கிரேக்கர்கள், காய்ந்த மரப்பிசின் மீது விலங்குகளின் கம்பளித் தோலைத் தேய்க்கும்போது, ஒருவித ஆற்றல் உருவாகிறது என்பதை அறிந்தனர். இது நிலையான மின்சாரம். 17-ம் நூற்றாண்டில் இயற்பியலாளர் வில்லியம் கில்பர்ட், இரண்டு பொருட்களை உரசும்போது ஆற்றல் உண்டாவதை அறிந்துகொண்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேய விஞ்ஞானி தாமஸ் ப்ரெளன், வில்லியம் கில்பர்ட்டின் சோதனைகளை வைத்துப் பல்வேறு பரிசோதனைகளைச் செய்தார். புத்தகங்களை எழுதினார். இதில் ‘எலக்ட்ரிசிட்டி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். 1752-ம் ஆண்டு பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் புயல் காற்றில் காற்றாடியைச் செலுத்தி, மின்னலுக்கும் மின்சாரத்துக்கும் தொடர்பிருப்பதை அறிந்தார். 1800-ம்

ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெஸாண்ட்ரோ வோல்டா, சில வேதியியல் வினைகளின்போது மின்சாரம் உருவாகிறது என்பதைக் கண்டுபிடித்தார். இவரே நிலையான மின்சாரத்தை, சற்று நீடித்த பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். 1831-ம்

ஆண்டு விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே டைனமோவை உருவாக்கினார். இதன் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடிந்தது. காந்தத்திலிருந்து சிறிய தாமிரக் கம்பிகளில் மின்சாரத்தைக் கடத்த முடியும் என்பதை அறிந்தபோது, அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசனும் பிரிட்டனின்  ஜோசப் ஸ்வானும் ஒளிரும் இழை மின்விளக்கை அவரவர் நாடுகளில் 1878-ம் ஆண்டு உருவாக்கினர்.

இவர்களுக்கு முன்னாலும் சிலர் மின்விளக்கை உருவாக்கினாலும், இவர்கள் இருவரின் மின்விளக்குகளே சில மணி நேரத்துக்குத் தொடர்ந்து வெளிச்சத்தைத் தந்தது. பின்னர் செர்பிய அமெரிக்கரும் பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லா, பரவலான மின்சாரப் பயன்பாட்டுக்குப் பெருமளவில் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார், பாலஷண்முகேஷ்.

– ஜி.கே. பாலஷண்முகேஷ், 8-ம் வகுப்பு, ஆதர்ஷ் வித்ய கேந்திரா, நாகர்கோவில்.

‘பாராட்டுகள்’, ‘வாழ்த்துகள்’ இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டிங்கு?

ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் அதைப் பாராட்டலாம். ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு வாழ்த்தலாம். அதாவது, ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள் என்றால், ஓடுவதற்கு முன்பு சிறப்பாக ஓடி வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தலாம். பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு, சிறப்பாக ஓடியதற்காகப் பாராட்டலாம். ஒரு செயலைச் செய்யும் முன்பும் வெற்றிகரமாகச் செய்த பின்பும் வாழ்த்தைத் தெரிவிக்க முடியும். ஆனால், வெற்றிகரமாகச் செய்து முடித்தால் மட்டுமே பாராட்டைத் தெரிவிக்க முடியும், இன்பா.

–இன்பா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

supplement (3).jpg 

மொபைல் போன் வாங்கித் தரச் சொல்கிறேன். 12-ம் வகுப்பு முடித்த பிறகு வாங்கித் தருவதாகச் சொல்கிறார்கள் என் பெற்றோர். நான் தவறாகப் பயன்படுத்த மாட்டேன். படிப்புக்கும் நல்ல செயல்களுக்கும்தான் பயன்படுத்துவேன் என்று சொன்னாலும் மறுக்கிறார்கள். போன் தேவை இல்லையா? என்ன செய்வது, டிங்கு?

ஓர் இடைவெளிக்குப் பிறகு சீனிவாசனிடமிருந்து கடிதம் வந்திருப்பதில் மகிழ்ச்சி. தேர்வுக்காக மாயாபஜாருக்கும் எனக்கும் கடிதம் எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தீர்கள். படிப்பில் இவ்வளவு அக்கறை செலுத்தும் நீங்கள், மொபைல் போனைப் படிப்புக்காகவும் நல்ல செயல்களுக்காகவும்தான் பயன்படுத்துவீர்கள் என்றே நானும் நம்புகிறேன். ஆனால், மொபைல் போன் என்பது நம் நேரத்தை நமக்குத் தெரியாமலே எடுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அடிமைப்படுத்திவிடும்.

பிறகு வேறு எதையும் சிந்திக்க விடாது. பள்ளி இறுதியில் இருக்கும் உங்களுக்கு இந்த 2 ஆண்டுகள் மிக முக்கியமான காலகட்டம். அதனால்தான் உங்கள் பெற்றோர் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வாங்கித் தருவதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு மொபைல் போன் மூலம் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால், உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் காரியமும் கைகூடும். நேரமும் விரயமாகாது. பெற்றோருக்கும் கவலை வராது.

–ந. சீனிவாசன், 11-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

ஆலங்கட்டி மழை விழுந்ததாகப் படித்தேன். அது எப்படி உருவாகிறது, டிங்கு?

பெரும்பாலும் ஆலங்கட்டி மழை வெயில் காலத்திலேயே உருவாகிறது. வெப்பம் காரணமாக நிலத்திலிருந்து சூடான காற்று வெகு வேகமாக மேல் நோக்கிச் செல்கிறது. மேலே இருக்கும் குளிர்ந்த காற்றும் இடியும் மேகங்களும் சூடான காற்றை குறைவான உயரத்திலேயே குளிர்வித்துவிடுகின்றன. இதனால் பனிக்கட்டிகள் உருவாகின்றன. இவை சிறு சிறு கட்டிகளாக நிலத்தில் விழுகின்றன. பெரும்பாலான சிறிய கட்டிகள் நிலத்தை அடையும் முன்பே கரைந்துவிடுகின்றன. கரையாத பெரிய கட்டிகளே ஆலங்கட்டி மழையாக மண்ணில் விழுகின்றன, ஹரிஹரசுதன்.

–எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close