[X] Close

அறிவியல் மேஜிக்: எடை தாங்கும் மாயக்காகிதம்!


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:19 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? பார்ப்பதற்கு லேசான மேற்கூரைபோல இருக்கும் அதன்மீது மனிதர்கள் பயமின்றி ஏறி நின்று வேலை செய்வதைக் கவனித்திருக்கிறீர்களா? அதன் பின்னால் ஓர் அறிவியல் உண்மை இருக்கிறது.

என்னென்ன தேவை?

A4 காகிதம்

டம்ளர்கள் 2

சற்றுக் கனமான சிறிய டிபன் பாக்ஸ்

(அல்லது ஏதோ ஒரு பொருள்)

எப்படிச் செய்வது?

# இரண்டு டம்ளர்களைஅரை அடி இடைவெளிவிட்டு நேராக வைத்துக்கொள்ளுங்கள்.

# அதன் மீது A4 காகிதத்தை வையுங்கள்.  டிபன் பாக்ஸை காகிதத்தின் மீது வையுங்கள். இப்போது என்ன ஆகிறது என்று பாருங்கள்?

# டிபன் பாக்ஸ் எடையைத் தாங்காமல், காகிதம் சரிந்துவிட்டதா? சரி விடுங்கள்.

# இப்போது காகிதத்தின் ஒரு பக்கத்தில் 3 செ.மீ. இடைவெளி விட்டு மடியுங்கள். பிறகு பின்பக்கமாக அதே அளவில் மடியுங்கள். ஒரு விசிறியின் மடிப்பைபோல மாற்றி மாற்றி மடியுங்கள்.

# மடித்த காகிதத்தை விரியுங்கள். மேடும் பள்ளமுமாகக் காகிதம் தெரிகிறதா?

# இப்போது அந்தக் காகிதத்தை இரண்டு டம்ளர்களுக்கு மேலே வையுங்கள். அதன் மீது டிபன் பாக்ஸை எடுத்து வையுங்கள்.

# இப்போது நடப்பதைக் கவனியுங்கள். அந்தக் காகிதம் டிபன் பாக்ஸ் எடையைத் தாங்கியபடி அப்படியே நிற்கிறதா?

# மடிக்காத காகிதத்தின் மீது வைத்த டிபன் பாக்ஸ் விழுந்ததுபோல மடித்து வைக்கப்பட்ட காகிதத்தில் விழவில்லையே, அது எப்படி?

காரணம்

ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசையே அழுத்தம் என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். ஒரு திடப் பொருள் மற்றொரு பொருள் மீது செயல்படுத்தும் விசையை அழுத்தம் என்றும் சொல்வார்கள். முதலில் டிபன்பாக்ஸை வைத்ததும் தாள் வளைந்து விழுந்தது அல்லவா? காகிதத்தின் குறைவான பரப்பின்மீது டிபன்பாக்ஸ் செயல்பட்டதே காரணம். ஆனால்.

விசிறி போன்று தாளை மடித்த பிறகு, அதன் மீது வைத்த டிபன்பாக்ஸ் விழவில்லை. காகிதத்தில் மடிப்புகள் இருப்பதால் டிபன்பாக்ஸின் அடிப்பாகத்துக்குக் கீழே காகிதத்தின் பரப்பு அதிகமாகிவிடுகிறது. மேலும் காகிதத்துக்கு வலுவும் கூடிவிடுகிறது. இதனால் காகிதத்தின் மீது செயல்படும் அழுத்தம் குறைந்து, காகிதம் வளையாமல் டிபன்பாக்ஸைத் தாங்கி நிற்கிறது.

பயன்பாடு

வீடுகள் கட்ட மேற்கூரையாகப் பயன்படும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் இந்த அடிப்படையில்தான் பயன்படுத்தப்படுகின்றன. பார்ப்பதற்கு லேசானதுபோல இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் மீது மனிதர்கள் ஏறி நின்றாலும், அது மனித எடையை எப்படித் தாங்குகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமே!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close