[X] Close

பிளஸ் 2-வுக்குப் பிறகு: கற்பனையை வளர்க்கும் கலைப் படிப்புகள்


2

  • kamadenu
  • Posted: 14 May, 2019 12:34 pm
  • அ+ அ-

-பவித்ரா

லிங்க்ட்இன் நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் தத்துவத்தில் முதுகலை படித்தவர். யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சூசன் வோஜ்சிக்கி வரலாற்றிலும் இலக்கியத்திலும் பட்டம் பெற்றவர்.

சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபாவின் முதன்மை நிறுவனர் ஜாக் மா ஆங்கிலத்தில் இளங்கலை படித்தவர். இன்னும் சொல்வதானால், அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற ஆளுமைகளில் சிலர் கலைப் படிப்புகள், மனிதவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களே.

ஆனால், இன்றும் பிளஸ் 2 முடித்த நம் மாணவர்களில் பலரை நெருக்கடிக்குள்ளாக்கும் கேள்வி ஒன்று உண்டென்றால் அது, “அடுத்தது, இன்ஜினீயரிங்கா, மெடிக்கலா இல்ல காமர்ஸா?”. வேறு துறைகளே இந்த உலகில் இல்லையென்பதைப் போல அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் சமூக, தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்வதற்கும், சமூகங்களை, மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கும்  கலைத் துறைசார் கல்வியும் தேவை.

சமகாலத்தை அறிதல்

கலைப் படிப்பு என்பது அறிவுசார் ஆர்வத்தை ஊக்குவித்துக் கலை, மனிதவியல், பயன்பாட்டு அறிவியல் துறைகளில் ஆழமாகப் படிப்பதற்கு உதவுவதாகும். படைப்பூக்கமும், சுதந்திரமான சிந்தனையையும் உருவாக்குவதற்குக் கலைப் படிப்புகள் உதவுகின்றன.

பருவநிலை மாறுதல்கள், செயற்கை அறிவுத் திறன், தானியங்கி முறைகள் போன்ற சமகாலத்து மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்வதற்குமான படிப்பாகக் கலைப் படிப்பு உள்ளது. உதாரணத்துக்கு இணையம், ஸ்மார்ட்ஃபோன் வசதிகள் வழியாகக் கடல் போலத் தகவல்கள் நமது கையிடுக்கில் குவிந்துகிடக்கின்றன. இந்தப் பின்னணியில் இளைஞர்கள் இத்தகவல்களின் தரவுடன் எப்படிச் சிந்திப்பது என்பதற்கும், எவ்வாறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பதற்கும் கலைப் படிப்புகள் உதவுகின்றன.

பகுப்பாய்வு, விமர்சனப் பார்வை

கலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கும் ஒருவர் தனது திறன்கள், அறிவைக்கொண்டு தனக்குப் பிடித்தமான துறையில் வெற்றிகரமாகக் கால்பதிக்க முடியும். எந்த விஷயத்தையும் பகுப்பாய்வு செய்து விமர்சனபூர்வமான திறனுடன் பார்ப்பதற்கும் கலைப் படிப்பு உதவியாக இருக்கும். கலைப் படிப்புகளில் எழுதுவது, உரையாற்றுவது, குழுவாகப் பணியாற்றுவது ஆகியவற்றில் நல்ல பயிற்சி கிடைக்கும்.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூகவியல், கலாச்சார மானுடவியல், தத்துவம் ஆகியவை மானுடர்களின் நிலை, கலாசார நிலைமைகளைப் பற்றிய புரிதலை அளிக்கும்.

படைத்தல், ஒருங்கிணைத்தல், தாக்கம் செலுத்துதல், புதுமை நாடல் ஆகிய திறன்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் நிர்வாகரீதியான பொறுப்புகளை அடைய முடியும்.

இந்தியாவின் சிறப்பான தொழில்நுட்ப எதிர்காலத்துக்குப் பொறியாளர்களோடு இசைக் கலைஞர்கள், உளவியலாளர்கள், தத்துவம் படித்தவர்கள் சேர்ந்து ஒருங்கிணைந்து பங்களிக்கும் நாள் தொலைவில் இல்லை!

இன்றைய கலைப் படிப்புகள்

இலக்கியம், மொழியியல், தத்துவம், மதம், நெறிகள், அயல்மொழிகள், இசை, நாடகம், வரலாறு, உளவியல், சட்டம், சமூகவியல், அரசியல், பாலினக் கல்வி, மானுடவியல், பொருளாதாரம், புவியியல் ஆகியவை குறித்த படிப்புகள்.

 

12.JPG 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close