[X] Close

ஹெல்த் இன்ஷூரன்ஸில் பாலிசி போர்ட்டபிளிட்டி


  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:35 am
  • அ+ அ-

-கே.எஸ்.பவதாரிணி

சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை சிக்கல்கள் போன்றவற்றால் நாளுக்கு நாள் உடல் ஆரோக்கியத்தில் புதிது புதிதாக பாதிப்புகள் உண்டாகின்றன. இதனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது பாலிசி திட்டங்களையும் அவற்றுக்கேற்ப மாற்றிக்கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் நீங்கள் ஒருபாலிசிதாரர் எனில், உங்களுடைய தேவைக்கேற்ப உங்களுக்கான பாலிசி திட்டத்தை மாற்றிக்கொள்ளும் வசதிகள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

நிறையும் குறையும்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டத்தை மாற்றிக்கொள்ளும் வசதியினால் இரண்டு விதமான நன்மைகள் உள்ளன. ஒன்று, பாலிசிதாரர் தொடர்ந்து பலனை பெற முடியும். அதாவது முந்தைய பாலிசியில் நீங்கள் காத்திருப்பு காலத்தை முடித்திருந்தால் புதிதாக மாறும் பாலிசியில் காத்திருப்பு காலம் என்பது விலக்கப்பட்டுவிடும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு பாலிசியை மூன்று ஆண்டுகளாக வைத்திருக்கிறீர்கள் எனில், உங்களுடைய ஆரம்பகட்ட காத்திருப்பு காலம் பாலிசியை மாற்றும்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். அதாவது உங்களுடைய புதிய பாலிசி நான்கு ஆண்டுகால காத்திருப்பு காலத்தைக் கொண்டிருந்தால், மூன்று ஆண்டுகள் போக ஒரு ஆண்டு கால காத்திருப்பு காலம் மட்டுமே இருக்கும். இரண்டாவது முக்கியமான பலன், கிளெய்ம் பெறப்படாத போனஸ் கிடைப்பது ஆகும்.

அதாவது உங்களுடைய பாலிசி மீது நீங்கள் நீண்டகாலத்துக்கு எந்த கிளெய்மும் பெறாதிருந்தால், உங்களுடைய காப்பீட்டு தொகையின் மீது குறிப்பிட்ட சதவீதம் ‘நோ கிளெய்ம் போனஸ்’ஆக கிடைக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் ரூ.10 லட்சத்துக்கான பாலிசி வைத்திருக்கிறீர்கள், அதில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கூடுதலாக ஒரு லட்ச ரூபாயை போனஸாகக் கொடுத்துள்ளது.

நீங்கள் பாலிசியை மாற்றும்போது உங்களுடைய காப்பீட்டு தொகை ரூ.11 லட்சமாக எடுத்துக்கொள்ளப்படும். அதேசமயம் செலுத்த வேண்டிய பிரீமியமும் ரூ.11 லட்சத்துக்குத்தான்  கணக்கிடப்படும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மாற்றுவதால் சில சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக நீங்கள் ஒரே மாதிரியான பாலிசிக்குதான் மாறிக்கொள்ள முடியும்.

நீங்கள் மெடிகிளெய்ம் பாலிசி வைத்திருக்கிறீர்கள் எனில், இன்னொரு மெடிகிளெய்ம் பாலிசிக்குத்தான் மாற முடியுமே தவிர, தீவிர நோய்களுக்கான பாலிசிக்கு மாற முடியாது.மேலும், பாலிசி புதுப்பித்தல் காலத்தின்போது மட்டுமே உங்களால் பாலிசி மாற்றம் செய்ய முடியும்.

அதாவது உங்களுடைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் புதுப்பித்தல் தேதிக்கு குறைந்தபட்சம் 45 நாள்களுக்கு முன்பு பாலிசி மாற்றம் செய்துகொள்ளலாம். அதேபோல், தொடர்ந்து தவறாமல் பாலிசியை புதுப்பித்து வந்தவர்கள் மட்டுமே பாலிசி மாற்றம் செய்ய முடியும்.

இவைதவிர வேறு சில நிபந்தனைகள், காரணங்களுக்காகவும் உங்களுடைய பாலிசி மாற்ற விண்ணப்பத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளது. 45-50 வயதை தாண்டியவராக இருந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம் கேட்கப்படலாம். வயது அதிகமாக இருந்தாலோ, தீவிரமான நோய்கள் இருந்தாலோ செலுத்த வேண்டிய பிரீமியம் சற்று அதிகமாக இருக்கலாம். 

எப்படி மாற்றுவது?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி மாற்றம் மிக எளிமையானது. ஆன்லைன் மூலமாகவே இதை செயல்படுத்தலாம். ஆனால், அதற்கு முன் பழைய பாலிசியிலிருந்து புதிய பாலிசிக்கு மாறுவதற்கு ஆகும் கட்டணம் மற்றும் இதர கழிவுகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய தற்போதைய பாலிசி காலாவதியாவதற்கு 45 நாட்களுக்கு முன் பாலிசி மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், பாலிசிபசார் டாட்காம் நிறுவனத்தின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரிவு தலைவர் அமித் சப்ரா கூறுகையில், பாலிசிபுதுப்பித்தல் தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாகவோ, அல்லது பாலிசி காலாவதியாகும் நாளன்றோ கூட விண்ணப்பிக்கலாம்.

ஆனால் எல்லா நேரங்களிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தெரியாததால், வாடிக்கையாளர்கள் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது என்கிறார். புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அழைத்து போர்ட்டபிளிட்டி நடைமுறை

களைச் செயல்படுத்த சொல்லலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களுடைய பாலிசி விவரங்கள், கிளெய்ம் ஹிஸ்டரி உள்ளிட்டவற்றை ஏழு நாட்களுக்குள் நீங்கள் பாலிசி வைத்திருந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் சரிபார்க்கும். இது முடிந்த பிறகு, பாலிசி மாற்றம் நடைமுறைப் படுத்தப்படும். பாலிசி ஆவணங்கள் 15 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.

bavadharini.ks@thehindu.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close