[X] Close

வாரன் பஃபெட்டின் அடுத்த வாரிசு


  • kamadenu
  • Posted: 13 May, 2019 10:41 am
  • அ+ அ-

எந்தவொரு துறையை எடுத்துக்கொண்டாலும் அதன் உச்சாணிக் கொம்பில் ஒருவர் அமர்ந்திருப்பார். உதாரணமாக, போருக்கு அலெக்சாண்டர், தத்துவத்துக்கு சாக்ரடீஸ், அறிவியலுக்கு ஐன்ஸ்டீன், புரட்சிக்கு லெனின், கிரிக்கெட்டுக்கு சச்சின்.

அதுபோலத்தான் பங்குச் சந்தைக்கு வாரன் பஃபெட். 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தவருக்கு இப்போது வயது 88. பங்குச் சந்தையின் அத்தனை நுணுக்கங்களும் இவருக்கு அத்துப்படி.

அப்படிப்பட்டவர் உருவாக்கிய முதலீட்டு சாம்ராஜ்யமான பெர்க்‌ஷயர் ஹாத்வேவின் இன்றைய மதிப்பு 530 பில்லியன் டாலர் (ரூ.36.74 லட்சம் கோடி).  உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான இந்த பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தை வாரன் பஃபெட்டுக்கு அடுத்து ஆளப்போவது யார் என்பதற்கான தேடல் ஆரம்பித்துவிட்டது.

பெரும் பணம் படைத்த நிறுவனங்களுக்கான வாரிசு தேடலில் வழக்கமாக அந்த நிறுவனத்தை நிறுவியவரின் குடும்ப வாரிசுகளுக்கு முன்னுரிமை தரப்படும். ஆனால், வாரன் பஃபெட் இந்த விஷயத்தில் வித்தியாசப்படுகிறார்.

அவரது மகள், மகன்கள் யாரையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தலைமையிடத்தில் அமர வைக்காமல், திறமையும் தகுதியும் உள்ளவரைத் தேர்ந்தெடுக்கவே முயற்சிக்கிறார்.

அவர் மட்டுமல்ல அவரது தொழில் பங்காளி சார்லி முஞ்சரும் இதையே தெரிவித்தார். நிறுவனத்தின் எதிர்கால தலைமை பதவிக்குவரப்போகிறவர் பெர்க்‌ஷயர் நிர்வாகத்துக்குள்ளிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அவர் நிறுவனத்தின் அடி மட்டத்திலிருந்து இயக்குநர் குழு வரை உயர்ந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் ஏற்கெனவே வாரன் பஃபெட்டுக்கு மிகவும் பிடித்துப்போன ஒரு ஊழியர்தான் அவருக்குப் பிறகு பெர்க்‌ஷயர் ஹாத்வேவுக்கு தலைமை தாங்கப் போகிறார் என்ற பேச்சு உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அவருடைய பெயர் அஜித் ஜெயின்.

காரணம் அஜித் ஜெயினை பல சமயங்களில் வாரன் பஃபெட் உச்சி முகர்ந்து பாராட்டியிருக்கிறார். பெர்க்‌ஷயர் ஹாத்வேவின் பல நெருக்கடியான காலகட்டங்களில் செயல்திறனுடனும், விரைவாகவும், சரியாகவும் முடிவெடுத்து பல பில்லியன் டாலர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களின் பாக்கெட்டுகளில் நிரப்பியிருக்கிறார் அஜித் ஜெயின்.

பெர்க்‌ஷயர் ஹாத்வேவின் ரீஇன்ஷூரன்ஸ் பிரிவில் பெரிய அளவிலான லாபத்தைக் கொண்டுவந்தவர். நிறுவனத்தின் வளர்ச்சியிலும், பங்குதாரர்களின் சொத்து வளர்ச்சியிலும் அஜித் ஜெயினின் பங்கு மிகவும் அதிகம் என வாரன் பஃபெட் நேரடியாகவே பாராட்டிய பல தருணங்கள் உள்ளன.

“என்னைவிட பெர்க்‌ஷயருக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்தவர் அஜித் ஜெயின். நான் அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் சகோதரரைப் போலவோ, மகனைப் போலவோ உணர்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பஃபெட்.

1986-ல் பெர்க்‌ஷயர் ஹாத்வேவில் சேர்ந்த அஜித் ஜெயின் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார். சமீபத்தில்தான் அவர் இயக்குநர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த வாரத்தில் நடந்த ஆண்டு பங்குதாரர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் பல கேள்விகளுக்கு அஜித் ஜெயின்தான் பதிலளித்தார். இதனாலேயே அடுத்த சிஇஓ அஜித் ஜெயின்தான் போலிருக்கிறது என்ற பேச்சு பங்குதாரர்கள் மத்தியில் சத்தமாகக் கேட்க ஆரம்பித்துவிட்டது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அஜித் ஜெயின் ஒரு இந்தியர். ஒடிசாவில் 1951-ல் பிறந்தவர். ஐஐடி கரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் முடித்தவர். இவர் பெர்க்‌ஷயரில் சேர்வதற்கு முன்பு ஐபிஎம், மெக்கின்சி அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

தனது 63-வது வயதில் பெர்க்‌ஷயருக்கு இவர் தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமையாக இவர் திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close