[X] Close

வாழ்ந்து காட்டுவோம் 05: யாரும் இங்கே ஆதரவற்றோர் அல்ல


05

  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:52 am
  • அ+ அ-

-ருக்மணி

பிறந்தது முதல் நமக்குக் கிடைக்கும் ஆதரவு பெற்றோரின் ஆதரவுதான். ஆனால், அந்த ஆதரவு ஒரு சிலருக்குப் பிறந்தவுடனேயோ இளம் வயதிலேயோ அவர்களுடைய பெற்றோரின் இறப்பால் கிடைக்காமல் போகக்கூடும். அவர்களை இந்தச் சமூகம் அனாதை என்று வார்த்தைகளால் வதைக்கும். சமீபகாலமாக அனாதை என்ற வார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அதற்குப் பதிலாக ஆதரவற்ற குழந்தைகள் என்று சற்றே நாகரிகமாக அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

பெற்றோர் இல்லாமல் வளர வேண்டிய சூழலில் இந்தக் குழந்தைகள் படும் துன்பங்கள் ஏராளம். பாட்டி, தாத்தா இருந்துவிட்டால் கொஞ்சம் பரவாயில்லை. அவர்களும் இல்லாதபோது மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா என்று உறவுகளிடம் ஏலம் விடப்படும் சூழ்நிலைதான் பல குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது.

உமாவுக்குக் கிடைத்த வெளிச்சம்

உமா பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவளுடைய அப்பா, அம்மா இருவருமே ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். உமா தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் வளர்ந்துவந்தாள். அவளுக்கு ஐந்து வயதானபோது தாத்தா இறந்துவிட்டார். பாட்டி வெளியூரில் ஒரு வீட்டில் தங்கி சமையல் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் உமாவை ‘அரசுக் குழந்தைகள் காப்பக’த்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டனர். அதிலிருந்து அந்தக் காப்பகம்தான் அவளின் தாய் வீடாயிற்று.  ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறைக்கு மற்ற குழந்தைகள் தங்கள் உறவினர் வீட்டுக்குப் போகும்போது  உமாவைக் காப்பகப் பணியாளர்களே தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வார்கள்.

உமா பருவமடைந்தபோது சமூக நல அலுவலர் உள்ளிட்ட அனைவரும் புத்தாடை, அணி கலன்கள் ஆகியவற்றை வாங்கித் தந்து விருந்துடன் உளுந்தங்களி, புட்டு, உளுந்த வடை என நல்ல விதமாக அவளைக் கவனித்துக் கொண்டனர்.

உமாவின் படிப்பின்மீது அவளுக்கு இருந்த ஆர்வத்தைக் கவனித்த அலுவலர் அவளை அரசு மானிய உதவியுடன் அரசுக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தார். அவளின் திருமணத்துக்கும் அரசு அளிக்கும் திருமண நிதி உதவியைப் பெறுவதற்கும் உதவியும் செய்தார்.

அன்பும் அரவணைப்பும்

உண்ண உணவும் இருக்க இடமும் மட்டுமா அந்தப் பிஞ்சுகளின் தேவை? அன்பும் அரவணைப்பும் அடிப்படைக் கல்வியும் பாசப்பிணைப் புடன் வேண்டுமல்லவா? பெண்குழந்தை என்றால், பூப்படைவதில் தொடங்கி நல்லதொரு திருமணம் நடத்த வேண்டிய பொறுப்பையும் பாதுகாவலரே ஏற்று நடத்த வேண்டிய அவசியமும் சேரும்போது அந்தப் பெண் குழந்தைக்கு ஆதரவுக்குப் பதில் நிராதரவான சூழல் உருவாகிவிடுகிறது. பாதுகாவல ராக இருப்பவருக்குத் தனது குடும்பத்துப் பெண்களுக்கும் திருமணத்துக்குச் செலவுசெய்ய வேண்டிய நிலை வரும்போது, பெற்றோர் இல்லாத குழந்தை அந்தக் குடும்பத்தில் நிச்சயமாகத்  தனித்துவிடப்படும் அல்லது கடைசி  நிலைக்கு ஒதுக்கப்பட்டுவிடும்.

இப்படிப்பட்ட நிலை எந்தக் குழந்தைக்கும் வரக் கூடாது என்ற காரணத்தாலும் குழந்தைகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகங்கள் மூலம் இவர்களுக்கு உண்ண உணவு, இருக்க இருப்பிடம் மட்டுமல்லாது பிளஸ் டூ வரை இலவசக் கல்வியும் அளிக்கப்பட்டுவருகிறது.

இதேபோல் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்குப் பொருளாதாரரீதியில் திருமணத்துக்கு உதவும்வகையில் ‘அன்னை தெரேசா நினைவு ஆதரவற்ற பெண்களின் திருமண நிதி உதவித்திட்டம்’ செயல்படுத்தபட்டுவருகிறது. தாய், தந்தை இல்லாத ஆதரவற்றப் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: somurukmani@gmail.com

அணுக வேண்டிய அலுவலர்கள்

1. மாவட்டச் சமூக நல அலுவலர்கள்

2. சமூக நல விரிவாக்க அலுவலர்கள்/மகளிர் ஊர் நல அலுவலர்கள்

விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தேசிக்கப்பட்ட கால அளவு:

விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள். தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள்: திருமணத் தேதியன்றோ திருமணத்துக்குப் பிறகோ  அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

குறைபாடுகள் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சியர் / மாவட்டச் சமூக நல அலுவலர்

மாநில அளவில்: சமூக நல ஆணையர், 2-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

தொலைபேசி எண்: 044 – 24351885.

திட்டம் 1:

மின்னணுப்  பரிமாற்ற   சேவை    மூலம் ரூ.25,000 ரொக்கத்துடன் தாலி செய்வதற்காக 23.05.2016 முதல்  ஒரு சவரன்  (8 கிராம்)  22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.

திட்டம்  2:

மின்னணுப்  பரிமாற்ற  சேவை  மூலம்  ரூ. 50,000   ரொக்கத்துடன் தாலி செய்வதற்காக 23.05.2016   முதல் ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க  நாணயம் வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி: பட்டதாரிகள் கல்லூரியிலோ தொலைதூரக் கல்வி மூலமோ அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களிலோ படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வருமான வரம்பு:

 வருமான உச்ச வரம்பு இல்லை.

வயது வரம்பு:

திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது  நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே   திருமண நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்துக்கு முதல் நாள்வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close