[X] Close

முகங்கள்: அழகிப் போட்டியில் ஒரு புதிய சாதனை


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:13 am
  • அ+ அ-

-அன்பு

அன்புதோற்றம், உயரம், நிறம், எடை எனப் பலவும் அழகுக்கான இலக்கணங்களாகச் சொல்லப் பட்டாலும் தன்னம்பிக்கையும் தைரியமுமே அழகின் அடையாளங்கள் என்கிறார் 386 மாடல்களை ஒரே மேடையில் நிற்கவைத்து அழகிப் போட்டியை நடத்தி ‘கின்னஸ் சாதனை’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ள லதா  கிருஷ்ணா.

திருமணத்துக்குப் பிறகுதான் தன்னுடைய அடையாளத்துக்கான புதிய பயணம் தொடங்கியது என்று சொல்லும் லதா, ஐரிஸ் கிளாம் நிறுவனத்தின் அமைப்பாளராக இருக்கிறார். 20 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டதால் தொலைதூரக் கல்வியில் மேற்படிப்பு படித்தார். வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்காமல் படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் செயல்படும்படிச் சொல்லித் தனக்கு ஊக்கம் தந்தவர் தன் கணவர்தான் என்கிறார் லதா.

வெற்றி மீது வெற்றி

90-களின் இறுதியில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளராகத் தன்னுடைய பயணத்தை லதா தொடங்கினார். அதன்பிறகு சொந்தமாக விளம்பர நிறுவனத்தைத் தொடங்கித் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார். இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக லாபம் ஈட்டும் துறையாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் துறை உள்ளது. ஆனால், இதுபோன்ற பணிகளை 1999-லேயே லதா தொடங்கியுள்ளார். முதன்முதலில் லேடீஸ் கிளப் ஒன்றுக்கு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கான ஒட்டுமொத்த ஏற்பாட்டையும் தனியாளாக நின்று நடத்த, லதாவுக்குப் பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தன. இவையே அவர் ஒரு தொழில்முனைவராக உருவாவதற்கான வாசலைத் திறந்தன. 2000-ல் ‘திருமதி சென்னை’ போட்டியை நடத்தினார். “அப்போதெல்லாம் அழகிப் போட்டி என்றால் மிஸ் இந்தியா, உலக அழகி என எங்கோ ஓர் இடத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி இங்கே செய்தித்தாள்களில் படித்துக்கொண்டிருப்போம். இதுபோன்ற நேரத்தில்தான் ‘திருமதி சென்னை’ நிகழ்ச்சி ஏராளமான பெண்களுடைய கவனத்தை ஈர்த்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் தினம், அன்னையர் தினம், குழந்தைகள் தினம் எனப் பெண்கள் சம்பந்தப்பட்ட தினங்களுக்கு ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினோம். அன்னையர் தினத்தையொட்டி நடத்தப்படும் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியை 14 ஆண்டுகளாக நடத்திவருகிறோம்” என்கிறார் லதா.

கின்னஸ் சாதனை

மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ‘ஃபேஸஸ் ஆப் சென்னை’ (Faces of Chennai) என்ற நிகழ்ச்சியை லதா நடத்திவருகிறார். இதற்கான பயிற்சியைத் தன்னுடைய  ‘ஐரிஸ் கிளாம்’ நிறுவனம் மூலம் தருகிறார். “இந்தப் பயிற்சியில் பங்கேற்ற பலர் தற்போது முன்னணி விளம்பர மாடல்களாக உள்ளனர். மாடல்களை மட்டுமே உருவாக்காமல் சென்னை நகரை மாடலிங் துறைக்கு ஏற்ற நகரமாக மாற்றுவதற்கான முதல்படிதான் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சி. வெளியே இருந்து பார்க்கும்போது வெறும் மாடலிங் நிகழ்ச்சிதானே எனத் தோன்றக்கூடும். ஆனால், இன்றைக்கு ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமும் அவர்களுடைய அணுகுமுறையும் தன்னம்பிக்கையும்தான்  வேலைத்தளத்தில் அவர்களை வெற்றியாளர்களாக முன்னிறுத்துகின்றன. இதற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வார இறுதி நாட்களில் குழுக்களாகப் பிரித்துப் பயிற்சி அளித்தோம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நகரின் முன்னணி மாடல்களும் மும்பை நகரின் முக்கிய மாடல்களும் வரவழைக்கப்பட்டனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் 366 மாடல்களைக்கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து 386 மாடல்களைக் கொண்டு சென்னையில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி  உலக கின்னஸ் சாதனையாகக் கௌரவிக்கப்பட்டுள்ளது” எனப் பூரிப்புடன் சொல்கிறார் லதா.

ஊக்கப்படுத்துவது அவசியம்

தொழில்முனைவோராகச் சாதிக்க விரும்பும் பெண்கள் குடும்பத்துக்கும் தொழிலுக்கும் சம அளவில் நேரம் ஒதுக்குவது அவசியம் என வலியுறுத்தும் லதா, “சாதிக்க விரும்பும் பெண்களுக்கு  அப்பா, அண்ணன், தோழன், கணவன் என அவர்களைச் சுற்றியுள்ள ஆண்கள்தாம் ஊக்க சக்தியாக இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப்

பின்னால் ஒரு பெண் இருப்பதுபோல் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்க வேண்டும் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close