[X] Close

வானவில் பெண்கள்: ‘நம்மைப்போல் ஒருவர்’ வித்யா


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:08 am
  • அ+ அ-

-க்ருஷ்ணி

நம்மைப் போல் ஒருவரைப் பார்க்க நமக்கு ஆசையாக இருக்கும்தானே. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுப்பதையே தொழிலாக வைத்திருக் கிறார் வித்யா. சென்னையைச் சேர்ந்த இவர் மூன்று நிறுவனங்களை நடத்திவருகிறார். மூன்றுமே படிப்புடனும் தொழில்நுட்பத்துடனும் தொடர்புடையவை என்பதன்மூலம் பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவு போதாது என்ற பொதுக் கணிப்பை மாற்றியிருக்கிறார்.

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை என்பதை வித்யாவின் பேச்சே சொல்லிவிடுகிறது. ஒவ்வொரு வாக்கியத்திலும் சென்னை கெத்து! எம்.காம்., எம்.பி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., பி.ஜி.எல்., என அசராமல் பல படிப்புகளைப் படித்துமுடித்தவர் பிரபல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்ததன் மூலம் அதற்கான நியாயத்தைச் செய்தார். வித்யாவின் வாழ்க்கையில் தி.மு., தி.பி., எனப் பிரித்தரியும் வகையில் பெரிய மாற்றங்கள் இல்லை. திருமணத்துக்குப் பிறகும் வேலையைத் தொடர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் கணக்குப் பிரிவில் பணியாற்றியவருக்கு ஏன் தொடர்ந்து இதே வேலையைத் தினமும் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஒரே மாதிரியான வேலையைச் செய்கிற பலருக்கும் இப்படியான எண்ணம் தோன்றுவது இயல்புதான்.

ஆனால், வித்யா அந்த எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தார். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கினார். தெரியாத துறையில் கால்பதித்துத் தடுமாறுவதைவிடத் தெரிந்த துறையில் களம்காண முடிவெடுத்தார். அந்த முடிவு சரியானதுதான் என்பதை அடுத்து வந்த ஆண்டுகளில் அவர் உணர்ந்தார்.

எல்லாமே ஏறுமுகம்

2010-ல் சென்னை வேளச்சேரியில் ‘சீனிவாசா அகாடமி’யை ஆரம்பித்த வித்யா அடுத்தடுத்து இரண்டு கிளைகளைத் தொடங்கினார். 2015-ல் ‘ஸ்வயா கேட் செண்டர்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். இரண்டு நிறுவனங்களும் நல்லபடியாகப் போகிறதே என்று அவர் நிறைவுபெறவில்லை. அடுத்து என்ன என்ற தேடல் ‘3D பிரிண்ட்டிங்’ துறையை நோக்கி வித்யாவை நகர்த்தியது. “ஓடிக்கிட்டே இருக்கற நதியில பாசி படியறது இல்லை. நானும் அந்த மாதிரி நிற்காம ஓடிக்கிட்டே இருக்க நினைச்சேன். ஏதாவது சேலஞ்சிங்கா பண்ணணும்னு தோணுச்சு. அப்போதான் 3D பிரிண்ட்டிங் மேல ஆர்வம் வந்தது” என்று சொல்லும் வித்யா, இதற்கென சிங்கப்பூருக்குச் சென்று பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றார். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு அதிலும் கரைகாண நினைத்தார். பொம்மைகள், பரிசுப் பொருட்களைவிட மனித உருவங்கள் நம் மனத்துக்கு நெருக்கமானவை என்பதை உணர்ந்தவர் அதைத் தான் புதிதாகத் தொடங்கவிருக்கும் தொழிலிலும் பயன்படுத்த நினைத்தார். “முடிவு பண்ணிட்டேனே தவிர, அகலக் கால் வைக்கணுமான்னு யோசிச்சேன். 3D பிரிண்ட்டிங் மிஷின் வாங்கவே ரூ.82 லட்சம் செலவாகும்னு கேட்டதுமே மலைப்பா இருந்தது. அப்புறம் கிண்டி சிறுதொழில் வளர்ச்சி மையத்துல லோனுக்கு அப்ளை செய்து ஜெர்மனியிலிருந்து மிஷினை வாங்கினேன்” என்கிறார் வித்யா. இந்த நிறுவனத்துக்காக வாங்கிய இரண்டு கடனுதவிகளில் ஒன்றைக் கட்டி முடித்துவிட்டார்.

 3டி துறையில் முதல் பெண்

‘எஸ்.ஏ. 3டி சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தை வித்யா சாதாரணமாகத் தொடங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு சர்வே நடத்தியிருக்கிறார். எந்த மாதிரிப் பொருட்களுக்குச் சந்தையில் வரவேற்பு இருக்கிறது, 3D பிரிண்ட்டிங் பொருட்களை மக்கள் விரும்புவார்களா என்றெல்லாம் ஓரளவு தரவுகளைச் சேகரித்த பின்னரே துணிந்து இறங்கினார். “என் கணவர் ஸ்ரீகாந்த்தும் குடும்பத்தினரும் எனக்குப் பக்கபலமா நின்னாங்க. தயங்காம துணிஞ்சு இறங் குன்னு அவங்க சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு உற்சாக டானிக்” என்று சிரிக்கும் வித்யா, தமிழகத்தில் இந்தத் துறையில் தடம்பதித்த முதல் பெண் என்பதில் பெருமிதம்கொள்வதாகச் சொல்கிறார்.

நிறுவனம் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் சிறு நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள் எனப் பலதரப்பு வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறார். ‘செல்ஃபி மினியேச்சர்’, இவரது நிறுவனத் தயாரிப்பில் முக்கியமானது. நம்மைப் போலவே அச்சு அசலாகச் சிறு உருவத்தைச் செய்து நம் கையிலேயே கொடுத்துவிடுகிறார்கள். யாருடைய உருவம் வேண்டுமோ அவர்களின் ஒளிப்படத்தை வாட்ஸ் அப்பிலோ மெயிலிலோ அனுப்பினால் போதும். உடனே அதை ‘ஸ்வயா கேட் சென்டர்’ நிறுவனத்தில் கம்ப்யூட்டர் உதவியோடு 3D உருவமாக மாற்றுகிறார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தலை அலங்காரம், ஆடை வடிவமைப்பு போன்ற வற்றைச் செய்துதருகிறார்கள். “நாங்க கம்ப்யூட்டர்ல டிசைன் செய்ததை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவோம். வேற ஏதாவது சேர்க்கணும்னு சொன்னா அதுக்கேத்த மாதிரி மாத்துவோம். அப்புறம் அந்த உருவங்களை பிரிண்ட் எடுக்க வேண்டியதுதான்” என்கிறார் வித்யா.

திருமண மினியேச்சர்

பெருவணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர் களுக்கான பரிசுப் பொருட்களையும் நிறுவனத்தின் அடையாளச் சின்னங்களையும் செய்யச்சொல்லி ஆர்டர் தருகிறார்களாம். இணையமும் முகநூலும் இவரது நிறுவனத்தின் புகழைப் பரப்ப, குறுகிய காலத்திலேயே நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். “காதலர் தினம் மாதிரியான சீசன்ல நிறைய ஆர்டர் வரும். ஒருத்தர் தன் காதலியிடம் காதலைச் சொன்ன தருணத்தை அப்படியே பிரிண்ட் செய்துதரச் சொல்லிக் கேட்டார். நாங்களும் அந்தப் பெண் அமர்ந்திருந்த ஊஞ்சலோடு சேர்த்து அந்தப் பெண்ணின் உருவத்தை வடித்துக் கொடுத்தோம். சிலர் அவங்க பெற்றோர் நினைவா அவங்களோட உருவத்தைச் செய்துதரச் சொல்லிக் கேட்பாங்க. ஒருத்தர் அவங்க தாத்தா, பாட்டியோட 60-வது கல்யாணத்துக்காக அவங்க ரெண்டு பேரோட இள வயது உருவங்களைச் செய்துதரச் சொல்லிக் கேட்டார்” என்று தன் வாடிக்கையாளர்கள் குறித்துச் சொல்லும் வித்யா, பெரும்பாலும் திருமண மினியேச்சர்களே அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்.

துயரத்தை மீறிய சாதனை

செராமிக்கில் செய்யப்படும் உருவங்கள் 95 சதவீதம் கம்ப்யூட்டர் உதவி யோடு உருவாவதால் நேர்த்தி யாக இருக்கின்றன. ஒரு அங்குல உயரத்தில் தொடங்கி ஒரு அடிவரை மினியேச்சர்களைச் செய்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதல் மினியேச்சர் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் பெருகிய வண்ணம் இருப்பதாகவும் வித்யா சொல்கிறார்.

வித்யா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஒரே பாடலில் உலகப் புகழ் அடைந்துவிட்டதைப் போலத் தோன்றும். ஆனால், சென்னைப் பெருவெள்ளம் வித்யாவையும் சுழற்றியடித்தது. “வெள்ளம் வந்தப்போ எங்க அகாடமி மொத்தமும் மூழ்கிடுச்சு. பொருட்களும் பணமும் கண்ணு முன்னாலேயே வெள்ளத்துல அடிச்சுட்டுப்போச்சு. நாலு வருஷ உழைப்பு ஒண்ணுமே இல்லாம ஆகிடுச்சு. அன்னைய தேதிக்கு நான் பூஜ்ஜியம். ஆனா, நான் அதுலேயே தேங்கிவிட விரும்பலை. இன்னும் வேகமா ஓடணும்னு நினைச்சேன். விழுந்ததுமே சட்டுனு எழுந்துக்கற குதிரையா இருக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன். இப்போ வரைக்கும் ஓடிக்கிட்டே இருக்கேன்” என்று சொல்லும் வித்யா காலையில் தன் அகாடமியில் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார். மாலையில் கேட் செண்டரில் இருக்கும் பணிகளைப் பார்த்துவிட்டுச் சாயந்திரம் 3D பிரிண்ட்டிங் பிரிவுக்கு வருகிறார். வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் பேசி அவர்களின் தேவையைக் கேட்டறிந்து அதற்கேற்ப உருவங்களை வடிவமைத்துக்கொடுக்கிறார். நாம் சென்றிருந்தபோது சிறு குடும்பத்தை மினியேச்சராக வடிவமைக்கும் பணி அப்போதுதான் முடிந்திருந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனை வரின் முகங்களிலும் என்றும் மங்காத புன்னகை. அது வித்யாவின் வெற்றிப் புன்னகையும்கூட!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close