[X] Close

ஞெகிழி பூதம் 15: முகம் கழுவுவதால் கடல் மாசுபடுமா?


15

  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:29 am
  • அ+ அ-

-கிருஷ்ணன் சுப்ரமணியன்

உலகில் தயாரிக்கப்படும் 60% பொருட்கள் ஞெகிழிப் பொருட்களே. தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகின்றன.

ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் அதே அளவு ஞெகிழிக் குப்பை நம்முடைய சுற்றுச்சூழலுக்குள் தினசரி சேர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதில் இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டு அஞ்சி வருவது நுண்ஞெகிழி (Microplastic).

நுண்ஞெகிழி என்பது ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் ஞெகிழித் துகள்கள். கடலில் மட்டும் 2,40,000 மெட்ரிக் டன்  நுண்ஞெகிழி  பரவி இருக்கிறது.

சருமப் பராமரிப்பு பொருட்கள்

முகம் கழுவும் பசை (Facial Scrub), பற்பசை, சிலவகை பெயிண்ட், சலவைத்தூள் போன்றவற்றின் உட்பொருட்களை வாசித்துப் பார்த்தால், அதில் ஞெகிழி கலந்திருப்பது தெரியும். இவை பல காரணங்களுக்காக மிகச் சிறிய துகள்களாகச் சேர்க்கப்படுகின்றன.

ஒரு சாதாரண 150 கிராம் சரும பேஸ்ட்டில் முப்பது லட்சம் நுண்ஞெகிழித் துகள்கள் இருக்கின்றன. பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ஞெகிழிப் பொருட்கள் Polyethylene (PE), Polypropylene (PP), Polyethylene terephthalate (PET), Polymethyl methacrylate (PMMA) and Nylon (PA) ஆகியவை.

செயற்கை இழை உடைகள்

பாலியஸ்டர் உடைகள், பல செயற்கை இழைகளால் ஆன துணிகள் இன்றைக்கு நம்மிடையே அளவுக்கு அதிகமாக மண்டிக் கிடக்கின்றன. இவற்றைத் துவைக்கும்போது அவற்றிலிருந்து சிறு துகள்கள் தண்ணீருடன் கலக்கின்றன.

 வீட்டில் மட்டும் அன்றி தொழிற்சாலைகளில், ஞெகிழி உற்பத்தி ஆலைகளில் என்று பல இடங்களில் நுண்ஞெகிழித் துகள்கள் உருவாகின்றன. பெரிய ஞெகிழிப் பொருட்கள் காலப்போக்கில் சிதைவடைந்தும் சிறிது சிறிதாக உடைந்தும் நுண்ஞெகிழியாக மாறுகின்றன.

சேரும் இடம் எது?

வீடுகளிலிருந்து கழிவுநீர்க் குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும் இந்த நுண்ஞெகிழி சுத்திகரிக்கப்பட்டும் (படாமலும்கூட) பல கி.மீ. தாண்டி நமது நீர்நிலைகளில் கலக்கிறது.

அனைத்து நீர்நிலைகளும் இறுதியில் கடலில்தானே கலக்கின்றன. இப்படியாக நாம் பல்விளக்கித் துப்பிய தண்ணீர் முதல் தொழிற்சாலைக் கழிவுவரை அனைத்தும் ஆறுகளிலும் கடைசியாகக் கடலிலும் சென்று சேர்கின்றன.

இப்படிக் கடலில் சேர்ந்த நுண்ஞெகிழி, அங்கே பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான். இது கடல் நீரின் தன்மையையே மாற்றியமைத்துள்ளது. கடல் உயிரினங்களின் உணவுச் சங்கிலிக்குள் புகுந்திருக்கிறது.

மீன்களில் மட்டுமல்ல; கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பிலும் நுண்ஞெகிழி கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாம் தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்கள் அனைத்தும் இப்படியாக நம்மைத் தேடி நம் உணவுத் தட்டுக்கே வந்துவிடுகின்றன.

இதனால் நம் உடலுக்கு என்ன பாதிப்பு நேரும் என்பதை இன்னும் திட்டவட்டமாகக் கண்டறியவில்லை. ஆனால், நம் கண்களுக்கு நுண்ஞெகிழி தெரிந்தால் நாம் அதைத் தைரியமாகச் சாப்பிடுவோமா?

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close