[X] Close

வண்ணம் கொண்ட உடல்நலமே...


  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:14 am
  • அ+ அ-

-கனி

பிரட், சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எப்போதும் பழுப்புநிறத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதுவே, பெரும்பாலான இயற்கை உணவு வகைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கின்றன. இப்படி வண்ணமயமான இயற்கை உணவைச் சாப்பிடுவது உங்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும். ஒவ்வொரு வண்ணமும் நம் உடலுக்கு ஒவ்வொரு நன்மையை  அளிக்கிறது.

வெள்ளை உணவுகள்

ஊட்டச்சத்து நிபுணர்கள் வெள்ளை நிற உணவு வகைகளான சர்க்கரை, அரிசி, மாவு, பாஸ்தா, மற்ற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பிரட், சீரியல்ஸ் போன்றவை பற்றி எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறார்கள்.

இந்த உணவு வகைகள் பதப்படுத்தப்படுவதால் அவற்றிலிருக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்துகள் குறைந்துவிடுகின்றன. அத்துடன், அவற்றின் கலோரிகள் உங்களின் பசியை ஆற்றுவதாகத் தோன்றும். ஆனால், அவை ஊட்டச்சத்துகள் இல்லாத வெற்றுக் கலோரிகள்.

அதேநேரம், எல்லா வெள்ளை நிற உணவு வகைகளும் மோசமானவை அல்ல. ஓட்ஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றில் மாவுச்சத்தும், முக்கியமான வைட்டமின்களும் கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. காலிஃபிளவரில் ‘வைட்டமின் கே’ சத்து அதிகமாக இருக்கிறது.

பூண்டு, எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்புச்சத்துகளைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும். முள்ளங்கி, வெங்காயம், காளான், வெள்ளைக் காராமணி போன்றவையும் ஆரோக்கியமான வெள்ளை நிற உணவு வகைகளாக இருக்கின்றன.

இதயத்தைச் சீராக்கும் சிவப்பு

தக்காளியில் இருக்கும் சிவப்பு நிற ‘லைகோபின்’ (Lycopene) என்ற தாவர ஊட்டச்சத்து, மாரடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதற்கு, அதன் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றச் செயல்பாடுகள் காரணமாக இருக்கின்றன.

புத்துணர்ச்சியான தக்காளிகள் ‘எல்டிஎல்’ என்ற கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க உதவுகின்றன. அதனால், ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

கல்லீரலுக்கு உதவும் பச்சை

முட்டைகோஸ், புரோக்கோலி ஆகியவற்றில் இருக்கும் ‘குளுகோசினோலேட்ஸ்’ (Glucosinolates) என்ற உட்பொருள், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவும். இந்த இரண்டு காய்களையும் தினசரி வேகவைத்து உண்பது நல்லது.

எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் ஆரஞ்சு

கேரட்டின் பிரகாமான ஆரஞ்சு நிறம், ‘பீட்டா-காரோட்டின்ஸ்’ என்ற உட்பொருட்களால் உருவாகிறது. இந்த உட்பொருட்கள்தாம் உடலில் ‘வைட்டமின் – ஏ’ ஊட்டச்சத்தாக மாறுகிறது.

உடலில் எதிர்ப்பு ஆற்றல் வீரியமாகச் செயல்படுவதற்கு முக்கியமான காரணமாக வைட்டமின்-ஏ இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துதான் உடலில் ஏற்படும் சாதாரண சளியிலிருந்து புற்றுநோய் வரை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மூளையைப் பாதுகாக்கும் நீலம்

திராட்சையின் தோலில் டெரோஸ்டில்பின் (Pterostilbene) என்ற தாவர-ஊட்டச்சத்து இருக்கிறது. இந்த டெரோஸ்டில்பின் ஊட்டச்சத்து அறிவாற்றலை மேம்படுத்தவும் பதற்றத்தைக் குறைக்கவும் மனநிலையைச் சீர்படுத்தவும் உதவும். காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பழக்கலவையில்  திராட்சைகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

ஆரோக்கியமான கண்களுக்கு மஞ்சள்

சோளத்தின் காம்பு முனையில் இருக்கும் ‘லுடைன்’ (lutein) என்ற உட்பொருள், கண்களில் இருக்கும் விழித்திரையிலும் இருக்கிறது. மஞ்சள் நிற உணவு வகைகளை எடுத்துக்கொள்வது கண்களின் செயல்பாடுகளுக்கு நல்லது என்று ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தல்மாலஜி’ அறிக்கை தெரிவிக்கிறது. அத்துடன், மஞ்சள் நிறப் பழங்கள், காய்கறிகள் வயது காரணமாகக் கண்களில் ஏற்படும் விழிப்புள்ளிச் சிதைவையும் குறைக்கின்றன.

வானவில் உணவு சாப்பிடுவோம்!

table.JPG 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close