[X] Close

திறந்திடு சீஸேம் 32: நீரோவின் தங்க மாளிகை!


32

  • kamadenu
  • Posted: 08 May, 2019 11:08 am
  • அ+ அ-

-முகில்

ரோமாபுரியை ஆண்ட கொடுங்கோல் மன்னர் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் நீரோ. இவருக்கு மக்கள் நலப்பணிகளைவிட, பல்வேறு விஷயங்களில் ஆர்வம் இருந்தது. பாடல்கள் எழுதுவார். பாடுவார். இசைப்பார். ஆடுவார். நடிப்பார். வரைவார். செதுக்குவார். ‘நான் ஒரு மாபெரும் கலைஞன்!’ என்று அவரே சொல்லிக்கொள்வார்.

ரோமாபுரியில்  உள்ள கலை அரங்குகளில் ‘நீரோனியா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும். அதாவது நீரோவே சிந்தித்து வடிவம் கொடுத்த பாடல்களோ இசை நாடகமோ மேடையில் அரங்கேறும். காவலாளிகள் மக்களை அரங்கத்துக்குள் வலுக்கட்டாயமாக அடைத்து வைப்பார்கள்.

நீரோவின் குரல் கர்ண கொடூரமாக இருந்தாலும், அவர் மீட்டும் இசை நாராசமாக ஒலித்தாலும், அவரது நடிப்பு சகிக்கவே முடியாததாகத் தெரிந்தாலும் ஆர்ப்பரித்து ரசிக்க வேண்டியது பார்வையாளர்களின் கடமை.

ஆம், அப்படிச் செய்தால் மட்டுமே பூட்டி வைக்கப்பட்ட அரங்கத்தின் கதவுகள் திறக்கப்படும். இல்லை என்றால் நீரோவின் நடிப்பை, பாடலை ரசிப்பதைவிட பெரிய தண்டனைகள் வழங்கப்படும்.

நீரோவைப் பற்றி பலரும் சொல்லும் ஒரு சம்பவம், அவர் ரோம் நகரமே பற்றி எரியும்போது உட்கார்ந்து பிடில் வாசித்தார் என்பது. ஆனால், அதில் உண்மை இல்லை. என்ன நடந்தது?

கி.பி. 64, ஜூலை 18 இரவில் ரோமின் மேக்ஸிமஸ் என்ற குதிரைப் பந்தய மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு நெருப்பு பரவியது.

அப்போது காற்றும் அதிகமாக வீச வீடுகள், விடுதிகள், கடைகள், அரண்மனையின் ஒரு பகுதி எனப் பலவும் தீக்கிரையாயின. அந்த நெருப்பை முற்றிலும் கட்டுப்படுத்த சுமார் ஒரு வாரம் ஆனது என்கிறார்கள்.

asdfgh.jpg 

அன்றைக்கு ரோம் நகரத்துக்குத் தீயை வைத்ததே நீரோதான். நகரைப் புதிதாக நிர்மாணிக்கத் திட்டமிட்டிருந்த நீரோ, தன் ஆட்கள் மூலம் இரவோடு இரவாக நெருப்பைப் பற்றவைத்துவிட்டு, அந்த அனலின் மத்தியில் ஒரு கோபுரம் மீதேறி நின்று ஏகாந்தமாகப் பிடில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்தார் என்று சில வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் நீரோ மீது வெறுப்பு கொண்ட பிற்கால வரலாற்றாளர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள் என்று சில ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள்.

டெசிடெஸ் என்ற நீரோவின் சமகால ரோமானிய வரலாற்றாளரது பதிவுகள் முக்கியமானவை. தீ விபத்து நடந்த நேரத்தில் நீரோ ரோமிலேயே இல்லை. அண்ட்டியம் நகரில் இருந்தார். விஷயம் கேள்விப்பட்டு உடனே ரோமுக்கு விரைந்த அரசர், தீயை அணைக்கும் பணிகளை முடுக்கிவிட்டு, தானும் களப்பணி ஆற்றினார்.

 பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவற்கு அரண்மனையைத் திறந்துவிட்டார். மக்களுக்கு உணவும், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன. இதெற்கெல்லாம் நீரோ தன் சொந்தப் பணத்திலேயே செலவு செய்தார் என்கிறார் டெசிடெஸ்.

நெருப்பால் சிதைந்த ரோமை, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிதாகக் கட்டுவதற்குத் திட்டமிட்டார் நீரோ. வலுவான கல் கட்டிடங்கள், அகலமான தெருக்கள், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் தங்க மாளிகை (Domus Aurea) என்ற பெயரில் புதிய அரண்மனையும் மாபெரும் வளாகமும் அதில் அடக்கம்.

klk.jpg 

அரண்மனை என்றால் பிரம்மாண்ட மான, ஆடம்பரமான, ஏராளமான அறைகள் கொண்ட சொகுசு மாளிகை. இதற்கெல்லாம் பணம்? சாம்ராஜ்யம் எங்கும் இருக்கும் செல்வந்தர்களும், மாபெரும் வணிகர்களும் நீரோவின் காலடியில் வந்து பணத்தைக் கொட்ட வேண்டும் என்பது கட்டளை. கொட்டினார்கள்.

செல்வம் அடித்தும் பிடுங்கப்பட்டது. கூடுதலாகத் தேவைப்பட்டபோது, ரோமானிய சாம்ராஜ்ய வரலாற்றிலேயே முதன் முறையாக நீரோ ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையை மேற்கொண்டார். வெள்ளி நாணயங்களில் எடையும், வெள்ளியின் தூய்மையும் குறைக்கப்பட்டன.

அருகருகில் அமைந்திருந்த பாலடின், எஸ்குலைன், ஆப்பியன், காய்லியன் ஆகிய நான்கு மலைகளின் அடிவாரத்தில் புதிய அரண்மனை வளாகம் கட்டப்பட்டது. அதன் மத்தியில் மார்ஷைப் பள்ளத்தாக்குப் பகுதியில் செயற்கை ஏரி, அதன் அருகிலேயே சுமார் 103 அடி உயரத்தில் நீரோவின் மாபெரும் வெண்கலச்சிலை போன்றவை உருவாக்கப்பட்டன. அந்தச் சிலையை அனைவரும் வழிபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்தக் கலை ஆர்வம் நீரோவின் ஆட்சிக்கு உலை வைத்தது.

புதிய அரண்மனை வளாகக் கட்டுமானத் திட்டத்தால் அநாவசியச் செலவு. ரோமானிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்,  அடிமையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்படிப் பல்வேறு காரணங்களால் நீரோவுக்கான எதிர்ப்பு அதிகரித்தது. கி.பி. 68, ஜூன் 9 அன்று அரசியல் சதியால் நீரோ கொல்லப்பட்டார்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஒருநாள். ரோமைச் சேர்ந்த ஓர் இளைஞர், எஸ்குலைன் மலைப் பகுதியில் திரிந்து கொண்டிருந்தார். அப்போது கால் இடறிக் கீழே விழுந்தார். பிளவுபட்ட நிலப்பகுதியில் விழுந்த அவர், அங்கே குகைபோல ஒன்றைக் கண்டார். அதன் சுவர்களில் சில ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதையும் பார்த்தார்.

தகவல் பரவியது. அடுத்தடுத்த நாட்களில் இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர்கள் பலரும் அந்த இடத்தை ஆராயத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டிப் பார்த்தபோது அது நீரோ காலத்து தங்க மாளிகை (Domus Aurea) என்று தெரியவந்தது.

நீரோ கொல்லப்பட்ட பிறகு, அவரது எதிரிகள் அவர் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளைச் சிதைத்தனர். அவர் கட்டிய கட்டிடங்களை உடைத்தனர்.

நீரோ உருவாக்கிய புதிய அரண்மனை வளாகத்தையும் சிதைத்து மொத்தமாக மண் மூடிப் போகுமாறு செய்தனர். அப்படிப் பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த தங்க மாளிகைதான், பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மாளிகை 300 பெரிய அறைகளைக் கொண்டது. அனைத்து அறைகளின் தரைகளும் சுவர்களும் கூரைகளும் பளபள மார்பிள்களால் ஆனவை. அழகுச் சிலைகளாலும், அற்பத ஓவியங்களாலும் அலங்கரிக்கப் பட்டவை.

சுவர்களில் யானைத் தந்தங்கள் பதிக்கப்பட்டிருந்ததாகவும், உணவருந்தும் இடத்தில் விருந்தினர்கள் மீது ரோஜாப்பூவும் வாசனைத் திரவியமும் தூவுவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உண்டு.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர்களான மைக்கேல் ஏஞ்சலோ, ராபேல் போன்றோர் நீரோவின் தங்க மாளிகைக்குச் சென்று அங்கிருக்கும் ஓவியங்களை ஆராய்ந்து மகிழ்ந்திருக்கின்றனர்.

அந்தச் சுவர்களில் தங்கள் பெயர்களையும் செதுக்கி வைத்துள்ளனர். இன்னும் கண்டுபிடிக்கப்படாத நீரோ காலத்து கட்டிடங்கள் இருக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நீரோவின் மாளிகை, இடைப்பட்ட காலத்தில் மழை, சூறாவளி போன்ற இயற்கை இடர்களாலும், மனிதர்களாலும் ஏராளமான சேதாரங்களைச் சந்தித்துள்ளது. கடந்த 80 வருடங்களில் இத்தாலிய அரசால் இந்த மாளிகை செப்பனிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டாலும் சுமார் 2000 வருடப் பழமை வாய்ந்தது என்பதால் அதன் நிலை கவலைக்கிடமாகத்தான் உள்ளது.

வார இறுதியில் மட்டும் நீரோவின் மாளிகையைச் சுற்றிப் பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நீரோவின் தங்க மாளிகை – எஞ்சியிருக்கும் உலகின் பழமையான கட்டிடங்களில் மிக முக்கியமானது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close