[X] Close

வழிகாட்டி: வேலைக்குப் பஞ்சமில்லை! வளர்ந்துவரும் புதிய வேலைவாய்ப்புகள்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 11:49 am
  • அ+ அ-

-இரா.நடராஜன்

உயர் மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பையும் உயர்கல்வியையும் முடித்திருந்தாலும் கலக்கமுற்ற கனவுகளுடன்தான் இன்றைய இந்திய மாணவர்கள் வேலைவாய்ப்பு உலகிற்குள் நுழைகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைகளோ தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது.

அதற்கேற்ப இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அதற்குரிய பயிற்சிகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திலும் உள்ளனர். இந்நிலையில், இன்றைய காலகட்டத்தில் பேரளவில் வேலைவாய்ப்பை அளிக்கவல்ல சில துறைகளைக் காண்போம்.

உத்தரவாதம் தரும் காப்பீட்டுத் துறை

அசுர வேகத்தில் இன்று வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று காப்பீட்டுத் துறை. முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இத்துறை அதிவேகமாக வளர்ந்துவருகிறது. காரணம் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் அதிகரித்துவரும் வருமானம். அதன்வழிப் பெருகும் அசையும், அசையா சொத்துகள்.

கூடவே மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள். இவற்றுக்கு ஏற்ப இத்துறையில் பல்வேறு நிலைகளில் பணிவாய்ப்புகள் பெருகியுள்ளன. இத்துறையில் வேலை கிடைக்க ‘ஆக்சுவரியல் சொசைட்டி ஆஃப் இந்தியா’வில் பதிவுசெய்து பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். தவிரவும் பி.காம். வித் இன்சூரன்ஸ், பி.பி.ஏ. வித் இன்சூரன்ஸ், முதுகலை ஆக்சுவரியல் சயின்ஸ், பி.ஜி. டிப்ளமா இன் ஆக்சுவரியல் சயின்ஸ் போன்றவற்றைப் படிக்கலாம்.

வான் வருவான்…பணி தருவான்

நடுத்தர வர்க்கத்தினரும் செலவழிக்கக்கூடிய கட்டணத்தில் விமானப் பயணம் இன்று சாத்தியமாகி இருக்கிறது. சிறு நகரங்களிலும் வான்வழிச் சேவை தொடங்கப்பட்டிருப்பதால் இத்துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகளும் இத்துறையில் பன்மடங்கு பெருகியுள்ளன.

விமானம் என்றாலே விமானி, விமானப் பணிப்பெண் ஆகியோரை மட்டுமே அனைவரும் அறிவர். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இத்துறையில் உள்ளன. பி.பி.ஏ./பி.எஸ்சி. ஏவியேஷன், பி.எஸ்சி. ஏர்கிராஃப்ட் மெயிண்டனன்ஸ், ஏ.எம்.இ., பி.ஜி. டிப்ளமா இன் ஏர்லைன்ஸ் ஆபரேஷன், டிப்ளமா இன் கேபின் க்ரூ மேனேஜ்மெண்ட், டிப்ளமா இன் ஏவியேஷன் கிரவுண்ட் ஹேண்ட்லிங், டிப்ளமா இன் ஃப்ளைட் டெஸ்பாச், பைலட் பயிற்சிகள் ஆகியவை உடனடி வேலை பெற்றுத் தரும்.

அலைபாயும் அலுவல்கள்

உலக நாடுகளுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேலானவை நீர் வழியே நடைபெறுகிறது. சிறிய படகுகள் முதல் மிகப் பெரிய சரக்குக் கப்பல், எண்ணெய்க் கப்பல், உல்லாசக் கப்பல் வரை அவற்றின் கட்டுமானப் பணிகள், பராமரிப்பு சிப்பந்திகள் எனப் பல நிலைகளில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.

பல ஆண்டுகளாக ஆண்களின் கோட்டையாக இருந்துவந்த இத்துறையில் தற்போது பெண்களும் கால்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ், மரைன் இன்ஜினீயரிங் போன்றவை அனைவரும் அறிந்ததே.

இவற்றைத் தவிர பி.எஸ்சி. ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர் சர்வீசஸ், ஹார்பர் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கான ஒரு வருட ஜி.எம்.இ. பயிற்சி, மரைன் கம்யூனிகேஷன், மரைன் ஃபிட்டர், ஃபிஷ்ஷரீஸ் அண்ட் நாட்டிக்கல் சயின்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

டிஜிட்டல் பாதுகாப்புப் பணி

விரல் நுனி தொடுதலிலேயே வங்கிப் பரிமாற்றம், வணிகம் உள்ளிட்ட பல வசதிகளைப் பெறுகிறோம். தொழில்நுட்பம் வளர வளர அதைத் துணையாகக் கொண்டு சைபர் குற்றங்களும் பெருகிக்கொண்டே போகின்றன.

டிஜிட்டல் மயத்தை நோக்கி ஒட்டுமொத்தத் தேசமும் நகர்த்தப்படும் இவ்வேளையில் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் அதற்கு உறுதியான தடுப்புகளை உருவாக்கவும் பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதற்கு அடிப்படைக் கணினிப் படிப்பை முடித்துவிட்டு எம்.டெக். சைபர் செக்யூரிட்டி, எம்.எஸ்சி. சைபர் சயின்ஸ், எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி போன்றவற்றைப் படிப்பது கைகொடுக்கும்.

10.jpg 

அழகுக்கு அழகு சேர்க்க

அண்மைக் காலமாக நகைகள், தோலாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், காலணிகள், கைப் பைகள் ஆகியவற்றை வடிவமைக்கும் பிரிவுகள் அதிவேகமாக வளர்ந்துவருகின்றன. வடிவமைப்பில் டிப்ளமா, பி.டெஸ். (B.Des.) உள்ளிட்ட பல படிப்புகளை பிளஸ் 2-வுக்குப் பிறகு படிக்கலாம்.

தேசிய அளவில் புகழ்பெற்ற நேஷனஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களில் படித்தால் இத்துறையில் ஜொலிக்கலாம்.

11.jpg 

புது மொழி பழகு

அறிவியல், பொறியியல் குறித்த கட்டுரைகள், புத்தகங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதற்குப் பயிற்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவதால் அறிவியல், பொறியியல், இதர படிப்புகளைப் படித்தவர்கள் உடன் அயல் மொழி ஒன்றில் புலமை பெற்றால் புதிய வேலைவாய்ப்புக் கதவுகள் திறக்கும். எம்.ஏ. ட்ரான்ஸ்லேஷன் ஸ்டடிஸ், பி.ஜி. டிப்ளமா இன் ட்ரான்ஸ்லேஷன் போன்றவற்றைப் படித்தால் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமின்றி அயல் மொழிகளில் வெளிவரும் செய்திக் கட்டுரைகளை எளிமையான வடிவில் மொழிபெயர்க்கக்கூடிய கண்டெண்ட் டிரான்ஸ்லேட்டர்களும் தேவைப்படுகிறார்கள்.

12.jpg 

வேலையே குறி!

திறன் எய்தும் பயிற்சிகளை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க இந்திய அரசு மேற்கொண்டுவரும் முன்னெடுப்புகளில் முதன்மையானது பி.வகேஷனல் படிப்புகள். இதன்கீழ் ஆடை வடிவமைப்பு, கேட்டரிங் டெக்னாலஜி, மெடிக்கல் டெக்னாலஜி, எக்ஸ்ரே டெக்னாலஜி, துணை மருத்துவப் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் கேமிங் டெக்னாலஜி போன்ற 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. படிப்பை முடித்தவுடன் வேலைக்குக் குறிவைப்பவர்கள் இவற்றை முயலலாம்.

எனவே, தங்களுக்கு முன்பாகக் கொட்டிக்கிடக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தினால், இன்றைய இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமில்லை.

கட்டுரையாளர் வேலைவாய்ப்பு,

பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close