[X] Close

யு டர்ன் 18: ஐடிசி - வித்தியாச விடுதலைப் போர்!


18

  • kamadenu
  • Posted: 06 May, 2019 12:01 pm
  • அ+ அ-

-எஸ்.எல்.வி.மூர்த்தி

உங்கள் எல்லோருக்கும், ஐடிசி கம்பெனியைத் தெரியும். ஆசீர்வாத் கோதுமை மாவு, சன்ஃபீஸ்ட் பிஸ்கெட், பிங்கோ சிப்ஸ், யிப்பீ நூடுல்ஸ், விவெல் சோப், கிளாஸ்மேட் நோட்டுப் புத்தகங்கள், மங்கள்தீப் அகர்பத்திகள் ஆகியவை தயாரிக்கும் கம்பெனி.

ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்களுக்கு, வில்ஸ், ப்ளேயர்ஸ், சிசர்ஸ், கோல்ட் ஃப்ளேக், இந்தியா கிங்ஸ் என்னும் சிகரெட் முகம் பரிச்சயமாக இருக்கும்.

இந்தியாவில், நூறு வயதைத் தாண்டி, இன்றும் வெற்றிநடை போடும் 28 கம்பெனிகளில் ஒன்று ஐடிசி. (தமிழ்நாட்டு சிம்ஸன்ஸ், பாரி அன்ட் கோ, சிட்டி யூனியன் வங்கி, டி.வி.எஸ். ஆகியோர் இந்தப் பட்டியலில் இருப்பது நமக்குப் பெருமை.)

ஐடிசி குழந்தையின் ஜாதகம்:

பிறந்த நாள் - ஆகஸ்ட் 24, 1910.

பிறந்த இடம் - கொல்கத்தா

பிறப்புப் பெயர் - இம்பீரியல் டுபாக்கோ கம்பெனி ஆஃப் இந்தியா லிமிட்டெட்

பெற்றோர் - The British American Tobacco Company (BAT) என்னும் இங்கிலாந்து - அமெரிக்கக் கூட்டு நிறுவனம்.

தொடக்க நாட்களில் இம்பீரியல் டுபாக்கோ முழுக்க முழுக்க வெள்ளைக்காரக் கம்பெனி. வேலை வேண்டுமா? ஆங்கிலேயராக, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாக இருக்கவேண்டும். இல்லையா? எங்க ஏரியா, உள்ளே வராதே!

ஆரம்பத்தில், அன்றைய மதராஸ் ராஜதானி (இன்று ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா), மைசூர் (இன்றைய கர்நாடகா) மாநிலங்களிலிருந்து புகையிலை வாங்கி, இங்கிலாந்தில் சிகரெட் தயாரித்து இங்கே விற்றார்கள்.

இந்தியாவிலேயே தயாரித்தால் அதிக லாபம் வருமே? மூலப்பொருளைத் தட்டுப்பாடில்லாமல் வாங்க, 1911-ல், ஆந்திரா குண்டூரில், Indian Leaf Tobacco Development Company Limited என்னும் நிறுவனம் தொடங்கினார்கள்.

தென்னிந்திய விவசாயிகளோடு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார்கள். 1913. பெங்களூருவில் சொந்தத் தொழிற்சாலை. புகையிலை வெள்ளைத் துகிலுடுத்திச் சந்தைக்கு வந்தது.

சிகரெட்களுக்கு அட்டைப்பெட்டி வேண்டுமே? பீகார் மாநிலம் முங்கெர் (Munger) என்னும் இடத்தில் இருந்த சிகரெட் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் இந்தத் தயாரிப்பு ஆரம்பித்தது. இதுவே, 1949-ல் சென்னையில் அட்டைப்

பெட்டித் தொழிற்சாலையும், அச்சகமுமாக மாறியது.

சுதந்திரம் பெற்ற இந்தியாவில், வெள்ளைக்

காரக் கம்பெனியாக நீடிக்கமுடியாது என்பதை உணர்ந்த இம்பீரியல் டுபாக்கோ, 1954-ல் பொது நிறுவனமானது. இதன் பிரதிபலிப்பாக, 1969 -ல்,

அஜித் நாராயண் ஹஸ்கர் (Ajit Narain Haskar) என்னும் இந்தியர் சி.இ.ஓ. ஆனார். அமெரிக்க ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற இவர், இந்தியக் கார்ப்பரேட் உலகின் விடுதலை வீரர்.

பதவியேற்ற அடுத்த வருடமே, கம்பெனி பெயரை, இந்தியன் டுபாக்கோ கம்பெனி என்று மாற்றினார். மூன்றே வருடங்களில், இந்தியர்களின் பங்குகளை 6 - இலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தினார். அயல்நாட்டுக் கம்பெனிகளை இந்திய மயமாக்க முன்னோடிப் பாதை போட்டவர் ஹஸ்கர்தான்.

புகை பிடிப்பது ஆரோக்கியத்துக் கேடு விளைவிக்கும், கேன்சரை உண்டாக்கும் என்னும் ஆராய்ச்சிகள் வெளியாகத் தொடங்கின. சிகரெட்டை மட்டுமே நம்பியிருந்தால், கம்பெனியின் வருங்காலத்துக்கும், நாட்டு நலனுக்கும் நல்லதல்ல என்பதை ஹஸ்கர் உணர்ந்தார்.

1973ல் பெங்களூருவில், பல்வேறு துறை அறிவியல் மேதைகள் கொண்ட ஆராய்ச்சி மையம் தொடங்கினார். சிகரெட் தவிர்த்த பிற துறைகளில் மக்களின் தேவை உள்ள புதிய தயாரிப்புப் பொருட்களைத் தயாரிப்பது இலக்கு. இதன் சங்கேதமாகக் கம்பெனி பெயரிலிருந்து “டுபாக்கோ” என்பதைத் தூக்கினார். புதுப்பெயர் - ஐ. டி.சி. லிமிட்டெட்.

1975. கம்பெனி புதுப்பாதையில் முதலடி எடுத்துவைத்தது - ஹோட்டல்கள். ஐ.டி.சி-ன் திட்டங்களில் ஏனோ, சென்னைக்குத் தனியிடம் உண்டு. 1949-ல், முதல் அட்டைப்பெட்டித் தொழிற்சாலையும், அச்சகமும் சென்னையில்.

இதேபோல், முதல் ஹோட்டலும் சென்னையில்தான். ஷெராட்டன் (Sheraton) என்னும் புகழ்பெற்ற அமெரிக்கக் குழுமத்துடன் கை கோர்த்து, சோழா ஷெராட்டன் ஹோட்டல் விருந்தோம்பல் கதவுகளைத் திறந்தது.

1979. பன்முனை முயற்சியில் இன்னொரு களம். ஆந்திராவின் (இன்று தெலங்கானா) பத்ராச்சலம் என்னும் ஊரில், ஐ.டி.சி. பத்ராச்சலம் பேப்பர் போர்ட்ஸ் லிமிட்டெட் (ITC Bhadrachalam Paperboards Limited) என்னும் பெயரில், காகிதக் கூழ், காகிதம், அட்டைகள் ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலை உற்பத்தி ஆரம்பம்.

இந்தக் காலகட்டத்தில், கம்பெனி உரிமையில் இந்தியர்களின் பங்கை ஹஸ்கர் 60 சதவிகிதமாக்கினார். இப்படிச் சாதனைச் சரித்திரம் பல படைத்தவர், 1983-ல், பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்து வந்தார் ஜகதீஷ் நாராயண் ஸாப்ரூ (Jagdish Narain Sapru). எட்டு வருடத் தலைமை. ஐ.டி.சி. வரலாற்று ஏணியில் பல ஏறல்கள்.

குறிப்பாக, 1986-ல். இந்திய எல்லையைத் தாண்டி ஐ.டி.சி. சிறகுகள் விரித்தது. சூர்யா நேபாள் பிரைவேட் லிமிட்டெட் என்னும் சிகரெட், தீப்பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் இந்தோ- நேபாள கூட்டு முயற்சியாக மலர்ந்தது. அடுத்த அடி, அமெரிக்க நியூயார்க்.

புக்காரா (Bukhara) என்னும் இந்திய உணவகம், பாரதத்தின் சுவை சொட்டும் சைவ, அசைவ உணவு வகைகளைத் தந்து, அமெரிக்கர்கள் நாக்குகளை மயக்கி, வயிறுகளை நிறைத்து, உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.

இந்தியாவின் நிதித்துறையின் அபார வளர்ச்சி கண்ட ஸாப்ரூ, இதை அறுவடை செய்வதற்காக, ஐடிசி கிளாசிக் ஃபைனான்ஸ் லிமிட்டெட் (ITC Classic Finance Limited) என்னும் புதிய கம்பெனி தொடங்கினார். 1986 -ல்

அவர் திறந்த இன்னொரு கதவு - ஐடிசி அக்ரோ டெக் லிமிட்டெட் (ITC Agro Tech Limited). இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. புகையிலை விவசாயிகளோடு கம்பெனிக்கு நெருங்கிய பந்தம் இருந்தது. இதைப் பயன்படுத்தி, கம்பெனியின் வருங்காலத்தைப் புகையிலை தாண்டிய விவசாயப் பொருட்களில் வளர்க்கத் திட்டமிட்டார்.

 இவர்களிடம் சூரியகாந்தி விதைகள் வாங்கி, ஸன்ட்ராப் (Sundrop) என்னும் சமையல் எண்ணைய் தயாரிப்பு தொடங்கினார். வேளாண்மையை அடிப்படையாகக்கொண்ட தொழில்களில் இறங்கவும், அந்தத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் திட்டங்கள் தீட்டினார்.

தாய் நிறுவனமான BAT முழுக்க முழுக்கப் புகையிலை நிறுவனம். ஐ.டி.சி. பிற துறைகளில் வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்

திய மேனேஜ்மென்ட்டுக்கும், இங்கிலாந்துத் தலைமைக்குமிடையே உரசல்கள் தொடங்கின. ஸாப்ரூவும் போர்க்கொடி தூக்கினார். ‘‘ஐ.டி.சி - க்கு

BAT தேவையில்லை” என்று முழங்கினார்.

1991. ஸாப்ரூ ஓய்வு பெற்றார். க்ரிஷன் லால் சுக் (Krishan Lal Chugh) சேர்மேன் ஆனார். கம்பெனியின் ஏற்றுமதிக்கு உந்து சக்தி தருவதற்காகச் சிங்கப்பூரில், ஐடி.சி. குளோபல் ஹோல்டிங் பிரைவேட் லிமிட்டெட் (ITC Global Holding Private Limited) உருவாக்கினார்.

தொடங்கின பல அரசியல் ஆட்டங்கள். 1995. சுக், ஸாப்ரூ மீது BAT குற்றச்சாட்டுக்களை எழுப்பியது - அந்நியச் செலாவணியில் மோசடி, பங்குவிலையை உயர்த்தக் கள்ளக் கணக்கு என நீண்ட பட்டியல். சுக்கைப் பதவியிலிருந்து துரத்தும் தீர்மானத்தை விவாதிக்க இயக்குநர்கள் குழுவைக் கூட்டும்படி கேட்டார்கள்.

ஐடிபிஐ (IDBI), ஐசிஐசிஐ (ICICI) போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிதி நிறுவனங்களிடம் 32 சதவிகிதப் பங்குகள் இருந்தன. இவர்களின் ஆதரவைப் பெறுவது BAT திட்டம்.

ஐ.டி.சி. பதில் காய்களை நகர்த்தினார்கள். பல உயர்மட்ட அரசியல் சந்திப்புகள். இது வெறும் ஐ.டி.சி – BAT என்னும் இரு கம்பெனிகளின் அதிகாரப் போட்டியல்ல, இந்தியக் கம்பெனிக்கும், பிரிட்டீஷ் கம்பெனிக்குமிடையே நடக்கும் உரிமைப்போர் என்னும் தேசபக்திக் கண்ணோட்டத்தைக் கொண்டுவந்தார்கள். மத்திய அரசும், நிதி நிறுவனங்களும் இப்போது ஐ.டி.சி. பக்கம்.

1995. இயக்குநர்கள் குழு கூட்டம். ஐடிபிஐ, ஐசிஐசிஐ ஆதரவில், BAT சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுக் தொடர்ந்தார். ஜனவரி 1, 1996. கம்பெனியில் 28 வருட அனுபவம் கொண்ட யோகேஷ் சந்தர் தேவேஷ்வர் (Yogesh Chander Deveshwar) புதிய சேர்மேனாகப் பதவியேற்றார்.

உடனேயே, அவர் தலையில் முதல் இடி. பல வருடங்களாகக் கலால் வரி ஏய்ப்புச் செய்வதாக நிதி அமைச்சகத்தின் நோட்டீஸ். வரி, அபராதம் என மொத்தம் 803 கோடி ரூபாய் செலுத்தச் சொன்னார்கள்.

அடுத்து வந்தது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக BAT எழுப்பியிருந்த குற்றச்சாட்டுக்களை அரசு கையில் எடுத்தது. அக்டோபர் 31. நாடு முழுக்க, ஐ.டி.சி. தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள்.

அன்று நள்ளிரவு. முன்னாள் சேர்மென்கள் ஸாப்ரூ, சுக் இருவரின் வீடுகளிலும், போலீஸ் டொக், டொக். அவர்கள் ஸ்டேஷனில் இரும்புக் கம்பிகள் பின்னால். அடுத்த சில நாட்கள். இன்னும் 12 உயர் அதிகாரிகள் சிறையில். 350 கோடி ரூபாய் அபராதம் கட்டும்படி நோட்டீஸ்.

சர்வ வல்லமைகொண்ட BAT எதிர்ப்பு, நாளுக்கு நாள் சுருங்கும் சிகரெட் விற்பனை, கலால் வரி, அந்நியச் செலாவணி அபராதம் என 1,153 கோடிச் சுமை, சகாக்கள் கைது - இவை அத்தனையையும் தாண்டி, ஐ.டி.சி இந்திய பிசினஸின் வெற்றிச்சின்னமாகத் தலை நிமிர்ந்து நிற்குமா, அல்லது, புகையும், சாம்பலுமாகக் கரைந்துபோகுமா? முடிவு தேவேஷ்வர் கைகளில்.

(புதிய பாதை போடுவோம்!)

slvmoorthy@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close