[X] Close

பயணங்களும் பாதைகளும்: 7- என் மொழி...எம் மொழி? 


payanangalum-paathaigalaum

  • kamadenu
  • Posted: 23 May, 2018 12:05 pm
  • அ+ அ-

மொழி பற்றி இப்போது நிறையப் பேசப்படுகிறது. தமிழ் முதல் மொழி, அதனால் ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு , சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது ஆகவே அதற்கும் எதிர்ப்பு. இந்த பட்டியல் ஒரு உதாரணமே . இது நீண்டு கொண்டே போகக்கூடியது.
என்னைப் பொறுத்தவரையில் நதி எப்படி இலகுவாகப் பரவக்கூடிய தாழ்வான பகுதியை நோக்கிச் செல்லுமோ , அதே போல் தான் மொழி .எது சுலபமோ அந்த மொழி தான் எல்லோருக்கும் வசப்படும் . சமஸ்கிருதம் தேவ மொழி என அழைக்கப்படலாம்.

ஆனால் பேசப்படும்போது படுத்திவிடும். அதனால் தான் மறக்கப்பட்டது. தமிழே உருமாறி, இப்போது தங்க்லீஷ் ஏற்கப்பட்டுவிட்டது. கடினமான கவிதைகள் சென்று வழக்குமுறை கவிதைகள், புரியக்கூடிய விதத்தில் கதைகள். 
இது ஒரு மாறுதலே. மாற்றம் தவிர, மாறாதது வேறொன்றும் இல்லை. இது நல்லதா கெடுதலா, யாமறிவேன். .நாம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம் பிட்சா, பர்கர் விட இட்லி உடலுக்கு நல்லது என்று . ஆனால் கடைகளில் அதிகம் விற்பனை ஆவது பிட்சா தான். புடவை, வேஷ்டி யாரும் விரும்புவதில்லை .

மொழியும் அதே போல்தான். முதலில் வட்டாரமொழியாகி, பின் வழக்கு மொழியாகி ....பின் அகராதியில் இணைக்கப்பட்டு புது மொழி ஆகிறது. யாரும். இதைத் தடுக்க முடியாது. தள்ளிப்போட முடியும். அவ்வளவே.

இந்த மொழி பற்றிய இந்த ஆராய்ச்சிக்குக்காரணம் நான் வெளி நாடு சென்றிருந்தபோது நேர்ந்த சில அனுபவங்களே. இப்போது இங்கே பேசப்படும் தமிழ் தான் எங்கள் மூச்சு சரிதான். ஆனால் அந்த மூச்சின் கூட வேறு மொழிகளும் உள் சென்றால் அதில் தவறு காணமுடியுமா? நாம் நம் குழந்தைகளை வெளிநாட்டிற்கு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கப்போகிறோம் என்றால் வேறு மொழிகளுக்கான தேவை இல்லை. ஆனால் குழந்தைகளை அதுவும் பெண்களை வெளிநாட்டிற்குப் படிக்க அல்லது வேலை பார்க்க அனுப்பப்போகிறோம் எனும் போது , மற்ற மொழிகளும் தெரிந்திருப்பது அவசியம்.

அப்போது ஜெர்மனி சென்றிருந்தேன். ஒரு நாள் தனியாக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம். முதலில் ட்ராமில் சென்று பின் ஓர் இடத்தில் பஸ்ஸுக்கு மாறவேண்டும். பையனிடம் பஸ் ஸ்டாண்டுக்கு ஜெர்மன் மொழியில் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அங்கே செல்வதற்கு முன் குடன்டாக், குடன் மார்க்கன், என்று சில பல வார்த்தைகள் தெரிந்து கொண்ட தைரியம். Bushaltesstelle என்று சொன்னான். இந்த ஜெர்மன் மொழி பேசுவது மிகவும் சிரமம். Shஐ , ஷ் சொல்லக்கூடாது, ற் கிடையாது.... இப்படி நிறைய. ஆக நான் என் காதில் விழுந்ததைக் கஷ்டப்பட்டு சொன்னபோது ..Bustenhalter எனும் சவுண்ட் வர..... நான் கேள்வி கேட்டவன் ஒரு நிமிடம் திகைத்து பின் விழுந்து விழுந்து சிரிக்க..... நான் விழிக்க...
அட வேறு ஒண்ணும் இல்லீங்க.... நான் இரண்டாவதாகச் சொன்னது எதற்கான பெயர் தெரியுமா? நமது நாயுடு ஹால் சமாசாரம்.

இந்தச் சம்பவத்தில் வெறும் நகைச்சுவைதான் இருக்கிறது. ஆனால் இப்போது சொல்லப்போகும் சம்பவம் நம் பெண்குழந்தைகள் வெளிநாடுகளில் சந்திக்கும் பல கஷ்டங்களில் ஒன்றான மொழி காரணமாக ஏற்பட்ட ஒன்று.
அந்தப்பெண் தனது மேல் படிப்பிற்காக ஜெர்மனி வந்திருந்தாள். வந்து சில மாதங்களே ஆகி இருந்தது. அதனால் அன்றாட தேவைக்கு எந்த அளவு ஜெர்மன் மொழி தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கற்று வைத்திருந்தாள்.
அன்று அவள் பாட நேரம் காலையிலேயே முடிந்துவிட்டது.

அதனால் அவள் தங்கி இருந்த இடத்திற்குத் திரும்பி வரக் கல்லூரியின் வாசலுக்கு வந்திருக்கிறாள். நடக்கும் தூரத்தில் தான் அவள் தங்கி இருந்த இடம். அப்போது கல்லூரி நோட்டீஸ் போர்டில் ஏதோ ஒட்டப்பட்டிருப்பதைப்பார்த்தாள். ஜெர்மன் மொழியில் அவள் கண்களுக்கு ஜிலேபியாகத் தெரிய அலட்சியமாகத் திரும்பி நடந்தாள். அப்போது கும்பலாக வந்த ஒரு கோஷ்டி அவள் கைகளில் ஒரு நோட்டீஸை திணித்து ஜெர்மன் மொழியில் கைகளை நீட்டி தூரம் காட்டி என்னவோ சொல்லி இருக்கிறார்கள். புரியாவிட்டாலும் தலையை ஆட்டிவிட்டு தன் ரூமிற்குள் சென்றுவிட்டாள்.

வேலை அதிகம் இல்லாததால் ஒரு மணி நேரம் சுகமான தூக்கம். எழுந்து பார்த்ததும் ரூம் மேட்ஸ் யாரும் இல்லை. சரி குளியலறை காலியாகத்தானே இருக்கும், நிம்மதியாகக் குளிக்கலாம் என்று நினைத்துச் சென்றிருக்கிறாள்.
சதாரணமாக யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்பதால் கதவை பூட்டிக்கொள்ள வில்லை. அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்க, தன் நண்பர்கள் தான் என்று எண்ணிக்கொண்டு நான் குளிக்கிறேன் என்று சத்தம்போட்டு குரல் கொடுக்க..
கதவு படார் என்று திறந்து கொண்டது. கைகளில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் இரண்டு போலீஸ்காரர். குஷ்பு , ரஜினியின் கடவுளே கடவுளே சீனைத்தாண்டி இருவரும் இவளைப்பார்த்து ஜெர்மனில் கூச்சல் போட்டு கைகளைப்பிடித்து இழுத்திருக்கிறார்கள். அவசரமாக டவலை சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளிடம் , லேசாக ஆங்கிலம் டெரிந்த ஒருவர் … உனக்கு என்ன மூளை இல்லையா.. மதியம் ஒரு மணியிலிருந்து இந்த இடம் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒரு மைல் தூரத்தில் யாரும் இருக்கக்கூடாது என்று நோட்டீஸ் அடித்துக்கொடுத்தோமே…உள்ளே சத்தம் கேட்டு வந்து பார்த்தோம். போ…சீக்கிரம் இந்த இடத்தைவிட்டுப்போ… என்று கூச்சலிட்டனர்.

நடந்தது என்ன..?

ஒரு இருபது நாட்கள் முன்பு கூட இதைப்போன்ற ஒரு சம்பவம் பற்றிய செய்தி பேப்பரில் வந்துள்ளது. உலகப் போரின்போது ஜெர்மனியின் பல இடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டன. சண்டை முடிந்தும் இதில் பல கண்டுபிடிக்கப்படவில்லை. அவை என்றும் வெடிக்கக்கூடிய அபாயம் உண்டு. அப்படி ஒரு இடத்தில் ஏதோ ஒரு வெடிகுண்டை கண்டுபிடித்தால் அந்த இடம் க்வாரண்டைன் செய்யப்படும். புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வேறு எதாவது இருக்கிறதா என்பதை பாம் ஸ்க்வாட் சோதனை செய்யும். அப்போது சிவிலியன்ஸ் யாரும் அந்தப் பக்கம் வர அனுமதி இல்லை.

இதில் மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம், இந்த வெடிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ஆக, எங்கோ படிப்பதற்கு என்று சென்றவர்கள் இப்படிப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது. இது எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் மொழி புரிந்திருந்தால் அந்தப்பெண் இப்படி ஒரு அபாயத்தில் சிக்காமல் தப்பித்திருக்கலாம்.

லதா ரகுநாதன்

lrassociates@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close