[X] Close

ஸ்கூல் ஃபீஸ், யுனிபார்ம், பேக், ஷூ... ‘பிபி’ எகிறும் மே மாத சீசன்..!


fees-uniform-bag-shoe

  • வி.ராம்ஜி
  • Posted: 21 May, 2018 16:22 pm
  • அ+ அ-

முன்பெல்லாம் இரண்டு விஷயங்கள் சேவையாகவே, முழுக்கமுழுக்க சேவையாகவே பார்க்கப்பட்டன. அவை... கல்வியும் மருத்துவமும். இப்போது இரண்டும் மிகப்பெரிய வணிகமாகிப் போனதுதான், கொடுமை.

மருத்துவத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம். அந்த மருத்துவத்துக்கே நுழைவுவாயிலாக இருக்கக் கூடிய கல்வி, கண்மண் தெரியாமல் எகிறியடித்து, துவம்சம் செய்கிறது.

மே மாதம் என்பது, வெயில் சுட்டெரிக்கும் மாதம் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். பிள்ளைகளைப் பெற்றவர்களின் வயிறெரியும் காலமும் இதுவே என்பதை ஏனோ எவரும் பகிர்ந்துகொள்ளவில்லை. அதுசரி... ஆயிரத்தில் ஒருவருக்கான பிரச்சினையாக இருந்தால் பரவாயில்லை. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் பள்ளி, கட்டணம், புத்தகம், சீருடை, பேக், ஷூ என்கிர பிரச்சினைகள் இல்லை. ஏனெனில்... இது மிடில்கிளாஸ் உலகம்.

இருபது வருடங்களுக்கு முன்பு வரை, மிகப்பெரிய செல்வந்தர்கள் அவர்களின் ஊரில், அவர்களின் தாத்தா பாட்டி, அப்பா அம்மா பெயர்களில் பள்ளிக்கூடம் தொடங்கி நடத்திவருவார்கள். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச புத்தகங்கள் என வழங்குவார்கள்.

இன்னும் சிலர், பள்ளிக்கூடம் வைப்பதற்கான வசதி இல்லாத நிலையில், அதேசமயம், ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேவையான நோட்டுப்புத்தகங்களை வழங்குவார்கள். இன்னும் சிலர், நோட்டுப்புத்தகங்களுடன் ஜாமெண்ட்ரி பாக்ஸ் வரைக்கும் தந்து உதவுவார்கள்.

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்று படித்த காலமெல்லாம் போய், எல்லாமே தனியார் பள்ளி எனும் மாயை உலகம் இது. இந்தப் பள்ளியில்தான் சேர்க்கணும் என்று ஆசைப்பட்டு, அந்தப் பள்ளியின் அப்ளிகேஷனை ஆயிரக்கணக்கானோர் வாங்குவார்கள். அதாவது ஆறாவது படிப்பதற்கு 40 பேருக்கான இடம் மட்டுமே இருக்கும். ஆனால் நாலாயிரம் பேர் விண்ணப்பித்திருப்பார்கள். ஒவ்வொரு விண்ணப்பமும் நூறு, இருநூறு ஏன் ஐநூறு ஆயிரம் என்றிருக்கும்.

ஒருபக்கம் புதிய மாணவர்கள் புதிய பள்ளிகளில் சேர இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு. இன்னொரு பக்கம், ஒன்பதாவது படிக்கும் மாணவர்களுக்கும் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கும் இப்போதே, இந்த விடுமுறையிலேயே தொடங்கியாகிவிட்டன, பாடங்கள்.

வெயில் கொடுமையைவிட, கோடை விடுமுறையில் பாடங்கள் என்பது இன்னும் கொடுமையாகிப் போகிறது. எல்லாக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டும் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டும், வீட்டில் ஹாயாக வீடியோ கேம்ஸ், டிவி என்று ரிலாக்ஸாடாக இருந்துகொண்டும் இருக்க... இந்தப் பசங்க பள்ளிக்குச் செல்வதும் பாடங்கள் கேட்பதும் படிப்பதும்... அவர்களை ஒருவித இறுக்கத்துக்குள் தள்ளிவிடுகின்றன என்பதை எவரும் உணருவதே இல்லை.

‘’அதே ஸ்கூல்தான். பசங்களும் பாஸ் பண்ணிட்டாங்க. ஆனாலும் ஃபீஸ் கட்றது, யுனிபார்ம் வாங்கறது, தைக்கக் கொடுக்கறது, பேக், ஷூ வாங்கறதுன்னு இந்த மே மாசம் வந்தாலே, பிபி எகிடுதகிடா எகிறியடிக்குதுங்க. இந்த பேக் வாங்கறது பெரிய தலைவலியா இருக்கு. முன்னாடிலாம் ரெண்டுமூணு வருஷம் வரும். ஆனா இப்ப என்னடான்னா, ஏழே மாசத்துல பேக் அறுந்துருது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்னா, ஒப்பேத்த முடியாம, அரையாண்டுத் தேர்வு முடிஞ்ச கையோட இன்னொரு பேக் வாங்கவேண்டியதா இருக்கு. அடுத்த வருஷம்... அடுத்த படிப்பு... இன்னும் புத்தகம் ஜாஸ்தி. புது பேக் வாங்கினாத்தான் தூக்கிட்டுப் போகமுடியும்.

அப்புறம்... இந்தப் பாழாப்போற ஷூவும் தேய்ஞ்சிருது. சீக்கிரமே கிழிஞ்சிருது. அதையும் வாங்கணும். மிடில்கிளாஸ்காரங்களுக்கு குருவி சேக்கறா மாதிரி சேத்துவைச்ச காசு, இப்படி கரையுது. ஆனா இல்லாத ஏழைபாழைங்க கதி என்னாகறது சொல்லுங்க...’’ என்கிறார்கள் ஏக்கத்துடனும் துக்கத்துடனும்.

இதில், இப்போதைய சூழல், பள்ளிக்குக் கட்டணம் செலுத்துவதிலும் ஸ்டேட்டஸ் புகுந்து பேயாட்டம் போடுகிறது. ‘என்னடா இன்னும் ஃபீஸ் கட்டலையா?’’ என்ற கேள்வி மாணவர்களைக் குடைந்தெடுக்கிறது. ‘எங்க அப்பாலாம் அன்னிக்கே கட்டிட்டாருப்பா’ என்பதில், இன்னும் உடைந்துபோகிறார்கள் மாணவக்குழந்தைகள். அவர்களுக்கு குடும்பமோ சூழ்நிலையோ, கடனோ கஷ்டமோ தெரியாது. தெரியவும் அவசியமில்லை. ஆனால், வெளியே பட்ட காயத்தின் வலியோடு, வீட்டுக்குள் அதகளம் செய்து, ரணகளக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்துவிடுவார்கள்.

சில வீடுகளில் நடக்கும் சண்டை ப்ளாஷ்பேக் சண்டைகளாக நினைத்துநினைத்து வெடிக்கும்.

‘இதுக்குத்தான் இந்த ஸ்கூலு வேணாம் வேணாம்னு தலைல அடிச்சிக்கிட்டேன். நம்ம தெருவுல நாலு பேர் சேத்துருக்காங்க. நம்ம அபார்ட்மெண்ட்ல ரெண்டுபேர் சேத்துருக்காங்கன்னு ஊர் ஜம்பம் பேசுறதுக்காகவே சேக்கச் சொன்னே. இப்ப பாரு... மாடு மாதிரி நம்மளை நிக்கவைச்சு, கறக்கறான் கறக்கறான்... பணத்தைக் கறந்துகிட்டே இருக்கறான்’ என்று வீடு ரெண்டுபடும். எல்லாம் பணம் புரட்டி, பள்ளிக்கட்டணம் கட்டுகிற வரைக்கும்தான். அப்புறம்... நல்ல ஸ்கூல்ல பசங்க படிக்குதுங்க... பின்னணியில் லாலாலா லாலாலா என பிஜிஎம் முழங்க, நெக்குருகிப் போவார்கள்.

‘ஆமாம்... நல்ல ஸ்கூல்னு எதைவைச்சு சொல்றீங்க?’ என்று பலரிடம் பலவித சூழல்களில் கேட்டபோது அவர்கள் அனைவரும் சொல்லிவைத்தது போல் சொன்னது ஒரே பதிலைத்தான்.

‘ஆமாம்... நல்ல ஸ்கூல்தான். இல்லாட்டினா, இந்த ஏரியாலயே இம்புட்டு ஃபீஸ் வாங்குவாங்களா?’

‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று சொல்லப்பட்ட காலத்தில் கூட, கல்வி தர்மமாகவும் சேவையாகவும் இருந்தது. இப்போதுதான், கடனையே பிச்சை போல் கேட்டு, பள்ளியில் கட்டணம் செலுத்த அழுதுகொண்டிருக்கிறார்கள், பெற்றவர்கள்!

என்னத்த சொல்ல... எல்.கே.ஜி.க்கு மூன்று லட்சம் கொடுத்து சீட் வாங்குவதைப் பெருமையாகச் சொல்லும் மக்கள் இருக்கும்வரை, இப்படித்தான் எப்போதுமே! எப்போதுமே... இப்படித்தான்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close