[X] Close

டிங்குவிடம் கேளுங்கள்: மனிதர்களுக்கு ஏன் வால் இல்லை?


  • kamadenu
  • Posted: 01 May, 2019 11:36 am
  • அ+ அ-

விலங்குகளைப்போல் மனிதர்களுக்கு ஏன் வால் இல்லை, டிங்கு?– கே.இ. சரண்யா, 6-ம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

விலங்குகளுக்கு வால் பல விதங்களில் பயன்படுகிறது. பூச்சிகளை விரட்ட, மரத்திலிருந்து தாவும்போது உடலைச் சமநிலையில் வைத்துக்கொள்ள, கிளையைப் பற்றிக்கொள்ள, நடக்கும்போது விழாமல் இருக்க என்று பல வழிகளில் பயன்படுகிறது. நீரில் வசிக்கும் உயிரினங்களுக்கு நீந்தவும் திசை திருப்பவும் வால் பயன்படுகிறது. பறவைகளுக்குத் திசை மாற்ற வால் உதவுகிறது.

ஆனால், மனிதர்களுக்கு வாலால் என்ன பயன்? ஆரம்பக் காலத்தில் மனிதர்களுக்கும் சிறிய வால் இருந்தது. காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடையும்போது, வாலின் தேவை ஏற்படவில்லை. பயன்படுத்தாத எந்த உறுப்பும் காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதற்கு ஏற்ப, சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களுக்கு வால் மறைந்துவிட்டது. இப்போதும் கரு உருவாகி 4 வாரங்கள்வரை வால் இருக்கவே செய்கிறது. பிறகு அது மறைந்துவிடுகிறது, சரண்யா.

 

சமூகத்தில் நடைபெறும் பல விஷயங்கள் அநியாயமாகத் தோன்றுகின்றன. அதில் மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், ஒரு சாதாரண மாணவனான என்னால் என்ன செய்துவிட முடியும், டிங்கு?– எம். ஷியாம் சுந்தர், திருச்சி.

இந்தச் சமூகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற உங்கள் எண்ணத்துக்கு வாழ்த்துகள் ஷியாம் சுந்தர். 8 மாதங்களுக்கு முன்புவரை உங்களைப் போன்ற சாதாரணமான 15 வயது மாணவியாகத்தான் இருந்தார், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த க்ரெட்டா துன்பெர்க். பூமியில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்து கவலைப்பட்ட க்ரெட்டா, ஒரு சாதாரண மாணவியான தன்னால் இது குறித்து என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், ஏதாவது செய்தே தீரவேண்டும்.

எதிர்காலத் தலைமுறைக்கு இந்தப் பூமியைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய போராட்டத்தைப் பள்ளியில் ஆரம்பித்தார். வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகளைப் புறக்கணித்தார். கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய போராட்டத்தில் சக மாணவர்களும் பங்கேற்க ஆரம்பித்தனர். விஷயம் பரவி, பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தை நடத்தியபோது, உலக மக்களின் கவனத்தைப் பெற்றார் க்ரெட்டா.

இவரது அழைப்பை ஏற்று, மார்ச் 15, 2019 அன்று நடைபெற்ற போராட்டத்தில் 112 நாடுகளைச் சேர்ந்த 14 லட்சம் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் இறங்கினர். இன்று உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள், அரசியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் க்ரெட்டாவை அழைத்துப் பேசுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்வீடன் உட்பட பல நாடுகளும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதாகச் சொல்லியிருக்கின்றன. சென்ற வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பருவநிலை மாற்றம் குறித்துப் பேசியிருக்கிறார் க்ரெட்டா.

இவருடன் பேசுவதற்கும் படம் எடுத்துக்கொள்வதற்கும் இங்கிலாந்து அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டினர். மே 24, 2019 அன்று பெரிய அளவில் அடுத்த கட்டப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், சாதாரணமானவர்களால் எதுவும் செய்ய முடியாதா, என்ன? அதற்காகப் போராடுவதற்கு வகுப்பறையை முற்றிலும் புறக்கணிக்கச் சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. போராடுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. மனம் இருந்தால் மாற்றம் சாத்தியம்.

 

ரத்தத்திலிருந்து பால் வருகிறது என்றால், அது ஏன் வெள்ளையாக இருக்கிறது, டிங்கு?– பி. நித்யா, 8-ம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த குழந்தைக்கு வேறு உணவைக் கொடுக்க முடியாது என்பதால், புரோலாக்டின், ஆக்சிடோசின் ஹார்மோன்கள் பாலைச் சுரக்கும் பணியில் ஈடுபடுகின்றன. ரத்தத்திலிருந்து புரதத்தையும் சர்க்கரையையும் எடுத்து மார்பகத்துக்கு அனுப்புகின்றன.

இந்தச் சத்துகளை மார்பகத்தில் உள்ள alveoli அணுக்கள் பாலாக மாற்றி, குழந்தைக்கு அனுப்புகின்றன. ரத்தத்திலிருந்து சத்துகள் பிரிக்கப்பட்டு, மாற்றப்பட்டு வரும்போது பால் வெள்ளை நிறமாக மாறிவிடுகிறது, நித்யா.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close