[X] Close

திறந்திடு சீஸேம் 31: ஒரு கவிதை, ஒரு புதையல்


31

  • kamadenu
  • Posted: 01 May, 2019 11:33 am
  • அ+ அ-

-முகில்

இது காணாமல் போன புதையலோ அல்லது அந்தக் காலத்தில் அரசர்களாலோ, மற்றவர்களாலோ புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷமோ அல்ல. அமெரிக்கர் ஒருவர் பெட்டி நிறைய செல்வங்களை நிரப்பி, வேண்டுமென்றே ரகசிய இடத்தில் புதைத்துவிட்டு ‘முடிந்தால் கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று இந்த உலகத்துக்கே சவால் விட்டுள்ளார். யார் அவர்? அந்தப் பெட்டியில் என்னென்ன பொக்கிஷங்கள் இருக்கின்றன?

அவர் பெயர் ஃபாரஸ்ட் ஃபென். அமெரிக்க விமானப்படையில் மேஜராகப் பணியாற்றியவர். வியட்நாம் யுத்தத்தில் பங்கு வகித்தவர். அமெரிக்க விமானப்படை வீரருக்கான மூன்றாவது மிகப் பெரிய அங்கீகாரமான ‘சில்வர் ஸ்டார்’ வாங்கியவர். இருபது வருடங்கள் பணியாற்றிவிட்டு விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த ஃபென், தன் நண்பரான ரெக்ஸ் அரோஸ்மித் என்பவரிடம் கலைப்பொருட்கள் வணிகம் செய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டார். இருவரும் சேர்ந்து, நியூமெக்சிகோவின் சாண்டா ஃபே நகரில் ‘அரோஸ்மித் – ஃபென் கேலரி’ என்ற கடையை ஆரம்பித்தனர். பின்பு அரோஸ்மித் விலகிக்கொண்டார். ஃபென்னுடன் அவரது மனைவி பெக்கி இணைந்துகொண்டார். வணிகத்தில் நல்ல லாபம். ஃபென் செழிப்பாகவே இருந்தார்.

10.JPG1988-ல். ஃபென்னுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் பரிசோதனைகளைச் செய்துவிட்டு ‘சிறுநீரகத்தில் புற்றுநோய்’ என்றார்கள். ஃபென்னின் மனத்தில் கவலை சூழ்ந்தது. இன்னும் எத்தனை நாள் வாழப் போகிறோமோ என்ற விரக்தி அவரை ஆட்கொண்டது. இந்த உலகத்துக்கு, இந்த மக்களுக்கு ஏதாவது கொடுத்துவிட்டுச் செல்லலாமே என்று அவரது மனம் நினைத்தது. என்ன செய்யலாம் என்று நிதானமாக யோசித்தார்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு ரோமானியப் பேரரசைச் சேர்ந்த கலை அம்சங்கள் நிறைந்த மரப்பெட்டி ஒன்றை வாங்கினார். அது பத்துக்கு பத்து அளவு கொண்டது. அந்தப் பெட்டி நிறைய செல்வத்தை நிரப்பினார். கோழி முட்டை அளவிலான தங்கக்கட்டிகள், பழமையான, அரிய நாணயங்கள், சில நகைகள், மரகதக்கற்கள், வைரங்கள், சிலைகள் போன்ற கலைப்பொருட்கள் ஆகியவையே அந்தப் பொக்கிஷப் பெட்டியில் நிரப்பப்பட்டவை.

நோய் முற்றி தான் இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்துவிடுவோம் என்று தோன்றினால், இந்தப் பொக்கிஷப் பெட்டியை இழுத்துக்கொண்டு மலைப்பிரதேசத்துக்குச் செல்ல வேண்டும். அப்படியே அதன் அருகிலேயே விழுந்து சாக வேண்டும். யார் தன் உடலைக் கண்டுபிடிக்கிறாரோ அவரே அந்தப் பொக்கிஷத்தை எடுத்துக்கொள்ளட்டும் என்று ஃபென் திட்டமிட்டார். அதற்காகத் தன்னைத் தயார்படுத்தியும் கொண்டார்.

தொடர் மருத்துவ சிகிச்சையின் பலனாக புற்றுநோயால் ஃபென்னை, வெல்ல முடியவில்லை. அந்தப் பொக்கிஷப் பெட்டி அவரிடமே பத்திரமாக இருந்தது. அவரது வாழ்க்கை வழக்கமான சந்தோஷத்துடனேயே தொடர்ந்தது.

2007-ம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை நீடித்தது. பலர் வேலை இழந்தனர். அதன் பாதிப்பு அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடித்தது. அந்தச் சூழலில் ஃபென், தன் வசமிருந்த பொக்கிஷப் பெட்டியைப் பார்த்தார். அமெரிக்கர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அதற்காகப் பொக்கிஷத்தை அப்படியே தூக்கிக் கொடுக்கவும் அவர் நினைக்கவில்லை. சவாலான ஒரு திட்டத்தை உருவாக்கினார்.

நான் இந்தப் பொக்கிஷப் பெட்டியை ஓரிடத்தில் புதைத்து வைப்பேன். அந்த இடம் குறித்த குறிப்புகளைக் கொடுப்பேன். யார் கண்டுபிடிக்கிறாரோ அவர் புதையல் முழுவதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஃபென் அறிவித்தார். The Thrill of the Chase என்ற பெயரில் தனது சுயசரிதைப் புத்தகம் ஒன்றை எழுதி   2010-ல் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை ஜாடியில் போட்டு பொக்கிஷப் பெட்டிக்குள் வைத்தார்.

வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் ராக்கி மலைத்தொடர்கள் அமைந்திருக்கின்றன. மிக நீண்ட இந்த மலைத்தொடரில், நியூமெக்சிகோவின் சாண்டா ஃபேவுக்கும், கனடா நாட்டின் எல்லைக்கும் உள்ளிட்ட ஒரு பகுதியில் ஃபென் அந்தப் பொக்கிஷப் பெட்டியை மறைத்து வைத்தார். அது குறித்த வரைபடம் அவரது சுயசரிதைப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டது. தவிர, 24 வரிகளில் ஒரு கவிதையும் எழுதினார்.

11.jpg 

As I have gone alone in there என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதையில் ஒன்பது இடங்களில் புதையல் மறைத்து வைக்கப்பட்ட இடம் குறித்த குறிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். தவிர,  ஃபென் எப்படிப்பட்டவர், அவரது திறமைகள் என்னென்ன, அவருக்குப் பிடித்தமானவை எவை என்று விளக்கிய அந்தச் சுயசரிதைப் புத்தகமும் அவர் எங்கே அந்தப் புதையலை மறைத்து வைத்திருக்கக்கூடும் என்பது குறித்த மறைமுகக் குறிப்புகளைக் கொடுத்தது.

2010-ல் ஃபென் தன் புதையல் குறித்து அறிவித்ததுமே அவரது புத்தகம் பெரும் பரபரப்புடன் விற்பனையானது. பலரும் அந்தப் புதையலைத் தேடி ராக்கி மலைத்தொடர்களில் திரிய ஆரம்பித்தனர். இப்போதுவரை திரிந்துகொண்டுதான் இருக்கின்றனர். இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் தன்னுடைய புதையலைத் தேடியிருப்பதாக ஃபென் கணக்கு சொல்கிறார். இது குறித்து தினமும் அவருக்கு சுமார் நூறு இமெயில்கள் வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ‘புதையல் இருக்கும் இடத்தைச் சொல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று சில மிரட்டல்களையும் கடந்து வந்திருக்கிறார்.

யாருமே இதுவரை தன்னிடம் அந்த ஒன்பது குறிப்புகளைச் சரியான வரிசையில் சொல்லவில்லை என்று ஃபென் சொல்லியிருக்கிறார். இன்னொரு சோகமும் உண்டு. இதுவரை புதையலைத் தேடிச் சென்றவர்களில் நான்கு பேர் மலையிலிருந்து விழுந்தோ, வேறு வகையில் விபத்துகளைச் சந்தித்தோ மரணம் அடைந்திருக்கிறார்கள். வருத்தப்பட்ட ஃபென், புதையல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்து கூடுதல் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். அப்படியும் புதையலை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

ஃபென் பொய் சொல்கிறார். அப்படி ஒரு புதையலே கிடையாது என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு ஃபென் சொல்லும் பதில், ‘நான் இந்தப் புதையலை மறைத்து வைக்கும்போது எனக்கு வயது 80. இருமுறை அந்த இடத்துக்குத் தனியாகச் சென்று வந்திருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தேடுங்கள். நாளைக்கேகூட புதையல் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது இன்னும் ஆயிரம் ஆண்டுகள்கூட ஆகலாம். யாருக்குத் தெரியும்?’

இன்னொரு முக்கியமான விஷயம், ஃபென்னைத் தவிர வேறு யாருக்கும் அந்த ரகசிய இடம் தெரியாது. அவரது மனைவி பெக்கிக்குக்கூடத் தெரியாது. கூடுதலாகக் குறிப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறாரே தவிர, அதை யாரிடமும் சொல்வதாக இல்லை. ஒருவேளை புதையல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே ஃபென் இறந்துபோனால், அவருடனேயே சேர்ந்து அந்த ரகசியமும் புதைக்கப்படும்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close