[X] Close

அறிவியல் மேஜிக்: நெருப்பு சுடாத பலூன்!


  • kamadenu
  • Posted: 01 May, 2019 11:29 am
  • அ+ அ-

-மிது கார்த்தி

பலூனை நெருப்பு அருகே கொண்டு சென்றால் வெடித்துவிடும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தண்ணீர் ஊற்றப்பட்ட பலூனை  நெருப்பு அருகே கொண்டு சென்றால், வெடிக்குமா, வெடிக்காதா? ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாமா? (பெரியவர்கள் முன்னிலையில்தான் இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.)

என்னென்ன தேவை?

2 பலூன்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தண்ணீர்.

எப்படிச் செய்வது?

1. முதல் பலூனை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஊதிப் பெரிதாக்கி முடிச்சு போட்டு, கட்டிவிடுங்கள்.

2. மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். காற்று அடைத்த பலூனை மெழுகுவர்த்தியின் சுடர் அருகே கொண்டு செல்லுங்கள். என்ன ஆனது? சூடு பட்டவுடன் பலூன் படார் என்று உடைந்து, சுடர் அணைந்துவிட்டதா?

3. இப்போது இன்னொரு பலூனை எடுங்கள். அந்த பலூனின் வாயை ஒரு தண்ணீர்க் குழாயில் மாட்டுங்கள். குழாயைத் திறந்துவிட்டு பலூனில் தண்ணீரை நிரப்பி, முடிச்சுப் போடுங்கள்.

4. மீண்டும் மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை மெழுகுவர்த்தி சுடர் அருகே கொண்டு வாருங்கள்.  என்ன ஆகிறது? ஒன்றும் ஆகவில்லையா? இன்னும் நெருப்பு அருகே கொண்டு செல்லுங்கள். என்ன, பலூன் வெடிக்கவில்லையா? பலூனின் அடிப்பாகத்தில் கரும்புகை மட்டும் படிந்திருக்கிறதா? மெழுகுவர்த்தி சுடர் அருகே காற்று ஊதப்பட்ட பலூனைக்கொண்டு சென்றதும் வெடித்தது. தண்ணீர் நிரப்பிய பலூன் வெடிக்கவில்லையே, அது ஏன்?

காரணம்

காற்றுள்ள பலூனைச் சுடருக்கு அருகே கொண்டு சென்றதும் வெப்பம் பலூனை உருகச் செய்து, வெடிக்கச் செய்தது. வெடித்ததும் வெளியேறிய வேகமான காற்று, மெழுகுவர்த்தி சுடரை அணைத்துவிட்டது. தண்ணீர் உள்ள பலூனை மெழுகுவர்த்தி சுடரால் சூடுபடுத்தியும் பலூன் வெடிக்காமல் போனதற்கு காரணம், பலூனுக்குள் இருந்த தண்ணீர் வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டதுதான்.

தண்ணீரின் தன் வெப்ப ஏற்புத்திறனின் காரணமாக பலூன் உருகாமல் வெடிப்பது தடுக்கப்பட்டுவிட்டது. சுடரிலிருந்து வந்த கார்பன் துகள்களால் பலூனின் அடிப்பாகம் கரியாகிவிட்டது.

பயன்பாடு

தீமிதித் திருவிழாவில் கால்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு, வேகமாக நெருப்பில் நடப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close