[X] Close

பயனுள்ள விடுமுறை: வீட்டிலிருந்தபடியே கணினி கற்போம்!


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 12:01 pm
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

வீட்டிலிருந்தபடியே கணினி கற்கவும், கணினி வழியே பாடங்களை அலுப்பின்றிக் கற்கவும் உதவும் இலவசச் செயலிகள், மென்பொருட்கள் ஏராளம் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான கோடைக்காலப் பயிற்சி என்றதுமே பலவிதக் கணினிப் பயிற்சிகளே பெற்றோர்களின் நினைவிலாடும்.

வேகாத வெயிலில் தொலைவைப் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திக் கணினிப் பயிற்சிகளுக்கு அனுப்புவார்கள். இந்த மாதிரியான கட்டாயப் பயிற்சிகளால் கோடை விடுமுறையின் நோக்கமே பாழாகக்கூடும்.

தற்போதைய தலைமுறை மாணவர்கள் தனியாக அடிப்படைக் கணினிப் பயிற்சிக்கு அவசியமின்றி வீட்டிலிருக்கும் கணினியைக் கொண்டே சுயமாகக் கற்றுக்கொள்ள முயல்கிறார்கள். இந்த முயற்சியில் அடிப்படைகளுக்கு அப்பால் பயனுள்ள பல்வேறு மென்பொருட்கள், செயலிகளை அடையாளம் காண்பதில் அவர்களுக்குத் தடுமாற்றம் இருக்கும்.

பயன் தரும் மடைமாற்றம்

சரியான வழிகாட்டுதல் கிடைக்காமல் போகும்போது, பயனற்ற வீடியோ விளையாட்டுகளில் கால விரயம் செய்வதுடன் வயதுக்கு ஒவ்வாத தளங்களுக்குள் செல்லவும் வாய்ப்பாகிவிடும். கணினி கற்றலில் தொடக்க நிலையிலிருக்கும் அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே கணினி அடிப்படையை அறிந்துகொள்ளவும், அடுத்த கட்டமாகக் கணினி வாயிலாகவே தங்களுக்கான பாட அறிவு, பொது அறிவை மேம்படுத்தவும் செய்யலாம்.

அவற்றுக்கு உதவும் இணையதளங்கள், கணினிக்கான செயலிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செல்போன் செயலிகளாகக் கிடைக்கின்றன. இவற்றையோ பிற செயலிகளையோ பெற்றோர் அனுமதி அல்லது மேற்பார்வையில் செல்போனில் நிறுவியும் பயன்பெறலாம். இந்த வகையில்

குழந்தைகளை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் செல்போன் உபயோகத்தைப் பயனுள்ள வகையில் மடைமாற்றவும் செய்யலாம். கணினி கற்கலாம்; கணினி வழி பாடமும் கற்கலாம்.

உபயோகிக்க எளிதான சில இலவச கட்டற்ற மென்பொருள்களின் தொகுப்புகள்:

ஜிகாம்ப்ரிஸ் (GCOMPRIS)

2-10 வயதுடைய குழந்தைகள், தொடக்க நிலைக் கணினி பயன்பாட்டாளருக்கான நூற்றுக்கும் மேலான செயல்பாடுகள் நிறைந்துள்ளன. அறிமுக நிலையில் கணினியை எளிமையாகக் கையாளவும், அடிப்படையான ஆங்கிலம், கணிதம், அறிவியல், புவியியல், விளையாட்டுகள், அறிவுசார் செயல்பாடுகளை அறிந்துகொள்ள உதவுகிறது. https://gcompris.net/index-en.html

ஃப்ரீ மைன்ட் (FREE MIND) / ஃப்ரீ பிளேன் (FREE PLANE)

பாடத்தின் முக்கியக் கருத்துகளைத் தலைப்புகள், பிரிவுகள், உட்பிரிவுகள் என உரிய படி நிலைகளோடும், பல வண்ணங்களைப் பயன்படுத்தியும் மனவரைபடமாக எளிதில் வரைய இவை உதவுகின்றன. 6 -12 வகுப்பு மாணவர்களுக்கானது. https://sourceforge.net/projects/freemind/  /  https://www.freeplane.org/wiki/index.php/Home

லிப்ரே ஆபீஸ் (LIBRE OFFICE)

இது மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருள் தொகுப்புக்கு நிகரான இலவச மென்பொருள் தொகுப்பு. சொந்தப் பணி, அலுவலகப் பயன்பாட்டுக்கான பல்வேறு மென்பொருட்கள் இத்தொகுப்பில் உள்ளன. மைக்ரோசாப்ட் வேர்டுக்கு நிகராக டெக்ஸ்ட் டாகுமெண்ட்களை உருவாக்க லிப்ரே ஆபீஸ் ரைட்டர் (Libre Office Writer) உதவுகிறது. அதுபோன்று இதர மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளுக்கு இணையான லிப்ரே ஆபீஸ் கால்க் (LibreOffice Calc), லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (LibreOffice Impress),

லிப்ரே ஆபீஸ் பேஸ் (Libre Office Base), லிப்ரே ஆபீஸ் ட்ரா

(Libre Office Draw) ஆகியவை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ளன. https://www.libreoffice.org/download/download/

டக்ஸ் பெயிண்ட் (TUX PAINT)

இது 3 - 12 வயது குழந்தைகள் கணினி மூலம் படங்கள் வரைவதற்கு உதவும் சிறந்த இலவச மென்பொருள். இதிலுள்ள

படங்களை உள்ளடக்கிய தொகுப்பான ஸ்டாம்ப்ஸ் (STAMPS) வசதியும் மாணவர்களுக்கு உதவும். http://www.tuxpaint.org/

டக்ஸ் மேத் (TUX MATH)

அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்றவற்றை எளிமையாகவும் விளையாட்டாகவும் கற்க உதவுகிறது. 1 - 5 வகுப்புக்கானது. https://tuxmath.jaleco.com/

ஜிம்ப் (GIMP)

இது படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப்புக்கு (PHOTOSHOP) நிகரான இலவச மென்பொருள். 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கானது. https://www.gimp.org/downloads/

ஜியோஜீப்ரா (GEOGEBRA)

ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையிலான மாணவர்களுக்கு கணினி மூலம் கணிதம் கற்க உதவுகிறது. குறிப்பாக இயற்கணிதம், புள்ளியியல், வடிவியல் போன்ற பல்வேறு கணித பாடங்களைச் செயல்வழிக் கற்றலாகப் பெறலாம். 6 - 12 வகுப்புக்கானது. https://www.geogebra.org/download

பெட் (PHET)

இது கணிதம், அறிவியல் கற்றலுக்கான ஊடாடும் பாவனைகள் (Interactive Simulations) அடங்கிய மென்பொருள் தொகுப்பு. கணிதம், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான பல்வேறு தலைப்புகள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. 6 - 12 வகுப்பு மாணவர்களுக்கானது. https://phet.colorado.edu/

கால்ஸியம் (Kalzium)

வேதியியலின் தனிம வரிசை அட்டவணையின் டிஜிட்டல் வடிவமான இந்த மென்பொருள் மூலம் தனிமங்களின் அடிப்படைப் பண்புகள் முதல் சிறப்பு கூறுகள் வரை மெய்நிகர் (Virtual) முறையில் விளக்கம் பெறலாம். 6 - 10 வகுப்புக்கானது. https://kde.org/applications/education/kalzium

அவோகட்ரோ (Avogadro)

கணினி வழி வேதியியல் கற்றலுக்கான மற்றுமொரு இலவச மென்பொருளான இதில், மூலக்கூறு வடிவமைப்பு, உயிர்த் தகவலியல், பொருள் நோக்கு அறிவியல் சார்ந்து கற்கலாம். 6 -10 வகுப்பு மாணவர்களுக்குப் பயனுள்ளது. https://avogadro.cc/

ஸ்டெல்லேரியம் (Stellarium)

இது வெர்ச்சுவல் கோளரங்க (Planetarium) அனுபவத்தை வழங்கும் மென்பொருள். பால்வெளி, அண்டத்தினை முப்பரிமாணத்தில் தரிசிக்கவும், விண்வெளியில் வெர்ச்சுவலாக ஊடாடவும் உதவுகிறது. ஆரம்ப நிலை முதல் அனைத்து மாணவர்களுக்குமானது.

 https://stellarium.org/ மாணவர்களுக்கான மென்பொருள்களைப் பரிந்துரைத்தவர் இர.ஆசிர் ஜூலியஸ், உதவிப் பேராசிரியர், தகவல் தொழில்நுட்ப துறை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை.பயனுள்ள விடுமுறைஆசிர் ஜூலியஸ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close