[X] Close

வங்கம், ஒடிஷா, தமிழ்நாட்டிலும் கூட பாஜக இம்முறை வெல்லும்!- தேவேந்திர பட்நவீஸ் பேட்டி


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 07:00 am
  • அ+ அ-

நாட்டின் பொருளாதார மையமும், வளர்ந்த மாநிலங்களின் வரிசையில் முதல் வரிசையில் நிற்பதுமான மஹாராஷ்டிரத்தின் முதல்வர் பதவி என்பது சக்தி வாய்ந்தது. 2014 தேர்தல் முடிவுகளுக்குப் பின் தேவேந்திர பட்நவீஸ் முதல்வராகப் பதவியேற்கும் வரை மகாராஷ்டிரம் முழுமையும் அறிந்த தலைவர் என்றுகூட அவரைச் சொல்ல முடியாது. இந்த ஐந்தாண்டுகளில் வலுவான தலைவர்களில் ஒருவராகத் தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார். மாநிலத்தில் பாஜகவின் தளகர்த்தர்களில் ஒருவராகப் பிரச்சாரக் களத்தில் சுற்றிக்கொண்டிருப்பவர் சரத் வியாஸுக்கு அளித்த பேட்டி.

பாஜகவினுடைய ‘மோடியை இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆக்குங்கள்’ என்ற பிரச்சாரம், ஏன் உங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை - வளர்ச்சியைப் பற்றியதாக மையம் கொள்ளாமல், தேசியத்தை மையமாகக் கொண்டிருக்கிறது?

இந்தத் தேர்தலில் தேசியம், வளர்ச்சி இரண்டுமே எங்களால் பேசப்படுகிறது. ஒரு சில சமயங்களில் ஒன்றைவிட மற்றொன்று மேடைகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. தேசிய உணர்வு மக்களுடைய மனங்களில் பொங்கிக்கொண்டிருப்பதால் தேசியத்தைப் பற்றிய பேச்சு கவனிப்பைப் பெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் தேசியம் குறித்து மேலும் பேச வைத்திருக்கிறது. ‘ஜம்மு-காஷ்மீரில் ராணுவப் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம்’, ‘ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திருத்துவோம்’, ‘தேச விரோதச் சட்டத்தைத் திருத்துவோம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி விசாரிக்கலாம் என்பதை நீக்குவோம்’ என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் தேசியம் முக்கியத்துவம் பெறுகிறது. தேசத்துக்கு ஒரு பிரதமரும் காஷ்மீருக்கு ஒரு பிரதமரும் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறும்போது தேசியம் மீண்டும் விவாதப்பொருளாகிறது. எல்லைகளால் தொல்லை என்ற நிலையில் அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும்கூடத் தேசியம் பேசப்படும்போது இந்தியாவில் ஏன் பேசப்படக் கூடாது?

மத்திய பிரதேசத்தில் பிராக்யா சிங் தாக்கூரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறீர்கள். அவர் மீது பயங்கரவாத வழக்கு இருக்கிறது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இந்து ராஷ்ட்ரத்தை அமைக்கும் திட்டங்களைக் கொண்டிருந்ததாக மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த வழக்கில் அவர் மீது வேண்டும் என்றே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கருதி அவருக்குப் போட்டியிட வாய்ப்பு தந்திருக்கிறீர்களா?

அவர் மீதான வழக்கு ‘பொய்’ என்றே நம்புகிறோம்; அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுவிசாரணை செய்த ‘தேசியப் புலனாய்வு முகமை’ (என்ஐஏ) பிராக்யா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று தெளிவாகத் தெரிவிக்கிறது.

‘இந்து பயங்கரவாதம்’ என்ற வார்த்தை 2008-ன் பின் பகுதியில் பயன்படுத்தப்பட்டது. அதை நிரூபிக்கும் சான்றாகத்தான் பிராக்யா சிங் தாக்கூர் மீதான தாக்குதல்கள் அமைந்தன. அவரை இந்த வழக்கில் சிக்கவைத்தவர்களுக்கும் அவரைத் துன்புறுத்தியவர்களுக்கும் அவர் தக்க பதிலைத் தருவார்.

மும்பைத் தாக்குதலின்போது நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவரும், பிராக்யா சிங்கை விசாரித்த ‘ஏடிஎஸ்’ தலைவராக இருந்தவருமான ஹேமந்த் கர்கரேவை அவமதிக்கும் வகையில் பிராக்யா சிங் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த நாட்டைக் காப்பதற்காகத் தன்னுடைய இன்னுயிரையே ஈந்த ஹேமந்த் கர்கரேவுக்கு எதிராக பிராக்யா சிங் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது. ஏடிஎஸ் விசாரணையின்போது கடுமையான வலி, வேதனையை அனுபவித்திருந்தபோதிலும், கர்கரேயின் மரணத்துக்குக் காரணம் தான் கொடுத்த சாபம்தான் என்று சாத்வி பேசியிருக்கக் கூடாது. அரசியலில் நீண்ட காலம் இருக்கும் தலைவர்கள்கூடத் தங்களை மறந்து பேசிவிடுகின்றனர். இனி எதிர்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பிராக்யா பேச வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனை. இதைக் கட்சியும் அவரிடம் தெரிவித்துள்ளது.

2014 தேர்தலில் கிடைத்ததைவிட 30-40 தொகுதிகள் பாஜகவுக்குக் குறையும் என்று தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன. உங்கள் கருத்தென்ன?

நாங்கள் 30 முதல் 40 தொகுதிகளை இழப்போம் என்று நினைக்கவில்லை. கிழக்கு மாநிலங்களிலிருந்து அதிக இடங்கள், அதிலும் வடகிழக்கிலிருந்து எல்லா இடங்களும் கிடைக்கும் என்றே கருதுகிறோம். வங்கத்தில் மட்டுமே 20 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. ஒடிஷா, தமிழ்நாட்டில்கூட எங்களுக்கு இம்முறை இடங்கள் கிடைக்கும்.

2014-ல் பெற்ற தொகுதிகளைவிட அதிகம் பெறுவதில் எங்களுக்குச் சிரமம் இருக்காது.

உங்கள் கட்சி சரத் பவாரைக் கடுமையாகத் தாக்குகிறது. ஆனால், தேர்தலுக்கான விவாதப் பொருளை ‘மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை’ தலைவர் ராஜ் தாக்கரேதான் உருவாக்குகிறார் என்பதுபோலத் தெரிகிறதே?

ராஜ் தாக்கரேவுக்கெல்லாம் பதில்சொல்லத் தேவையில்லை என்று கட்சியில் தீர்மானித்திருக்கிறோம்; அவருடைய பேச்சைக் கேட்டு வாக்காளர்கள் தங்களுடைய முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை; தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் பாகிஸ்தானிய பிரதிநிதியும் ரகசியமாகச் சந்தித்துப் பேசினார்கள் என்று சில ஆவணங்களைக் காட்டினார் ராஜ் தாக்கரே. அப்புறம், பாகிஸ்தானின் ‘எஃப்16’ போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று பென்டகன் கூறுகிறது என்றார். எல்லாமே ஆதாரங்கள் அற்றவை. இப்படி 50 காணொலிகளை ராஜ் தாக்கரே வெளியிட்டிருக்கிறார். அவருடைய அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது. மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கூட்டணியில் சேர முடிவெடுத்திருக்கிறார். மகாராஷ்டிரத்தின் மகா கூட்டணிக்குத் தலைவர் என்பதால் சரத் பவார் கூறும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்கிறோம். ஆட்சியைப் பிடிக்க இதுவே அவருடைய அரசியல் வாழ்வின் கடைசி முயற்சியாக இருக்கக்கூடும்.

தமிழில்: சாரி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close