[X] Close

அலசல்: போற்றுவதால் மட்டும் உயராது!


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 12:39 pm
  • அ+ அ-

வேளாண் தொழிலை போற்றுகிறோம். இந்தியா விவசாய நாடு என்று உலக அளவில் பெருமைபடக் கூறுகிறோம். விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் என அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. ஆனால் உண்மையில் விவசாயிகள் நிலை மேம்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.

விவசாயத்துக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இந்தியாவின் மக்கள் தொகை  135 கோடி. 2024-ல் சீனாவின் மக்கள் தொகையை மிஞ்சிவிடும் (150 கோடி) என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 2030-ல் இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் என்கிறது.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக  ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச்சியை எட்டி வருகிறது. தனி நபர் வருமானம் அடுத்த 10 ஆண்டுகளில் 6 சதவீத அளவுக்கு அதிகரிக்கும். 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சராசரி இந்தியக் குடிமகன் தனது வருமானத்தில் 45 சதவீதத்தை தனது உணவுப் பொருளுக்காக செலவிடுகிறான் என்று கணித்துள்ளது.

தற்போது இது இன்னும் அதிகம். அதிகரித்துவரும் விலையேற்றத்தில் இது தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறதா என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் உணவுப் பொருள் பயிரிடும் பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் பலரும் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

1943-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியா மிகப் பெரும் பஞ்சத்தை எதிர் கொண்டது. வங்க பஞ்சம் காரணமாக 15 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இதைப் போன்று பெருமளவிலான பட்டினி சாவுகள் இதுவரை பதிவாகவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்.

விவசாயிகள் பொருளை விளைவித்தும் அதற்கு உரிய விலை கிடைக்காததற்கு இங்குள்ள கொள்கைதான் காரணம். வேளாண் உற்பத்தி மற்றும் சந்தை குழு (ஏபிஎம்சி) குறிப்பிட்ட சந்தை மூலமாகத்தான் தங்கள் பொருட்களை விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஆனால் இந்த சந்தையோ ஏஜெண்டுகளின் கைகளில் உள்ளன. இதனால் உரிய பலன் கிடைக்காமல் விவசாயிகள் விரக்தியடைகின்றனர்.

விவசாயிகளுக்கு மானியம் உள்ளிட்ட வகைகளில் அரசு அளிக்கும் தொகை ரூ.2.65 லட்சம் கோடி (3,800 கோடி டாலர்). சீனாவில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் சலுகை 21,200 கோடி டாலர். எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் மானியம் 23,500 கோடி டாலர். இந்தியாவில் மக்கள் தொகை அதிகமிருந்தும், உணவுப் பொருளுக்கான தேவை இருந்தும் தவறான வேளாண் விற்பனை கொள்கையால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

மேலும் வேளாண் பொருள் ஏற்றுமதி கொள்கையும் விவசாயிகளுக்கு பாதகமாகவே உள்ளது. உள்நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனே ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.  இதனால் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானமும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் வேளாண் பொருட்களை இருப்பு வைக்க அனுமதிப்பதில்லை. இதனாலேயே அழுகும் பொருட்களை பாதுகாக்கும் கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளில் தனியார் ஈடுபடத் தயங்குகின்றனர். விளைவிப்பது ஒரு பங்கு என்றால் வீணாவது இதில் பாதி அளவாக உள்ளதும் ஒரு காரணம்.

இந்தியாவில் வெண்மை புரட்சி (பால் உற்பத்தி), நீல புரட்சி (மீன் உற்பத்தி), சிவப்பு புரட்சி(இறைச்சி, கோழி வளர்ப்பு), தங்க புரட்சி (பழங்கள் மற்றும் காய்கறிகள்), ஜீன் புரட்சி (பருத்தி) உள்ளிட்ட புரட்சிகள் காரணமாக உற்பத்தி அதிகரித்தது.

அனைத்து புரட்சிகளும் வெற்றிகரமானதாக அமைய தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் காரணமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. அரிசி, கோதுமை உள்ளிட்ட பிரதான உணவு உற்பத்தி செய்யும்விவசாயிகளுக்கு தொடர்ந்து அரசு மானிய உதவிகளை அளிப்பதன் மூலமே வேளாண் தொழில் சிறக்கும்.

இதில் டபிள்யூடிஓ நிர்பந்தத்துக்கு ஒருபோதும் பணியக் கூடாது. வேளாண் தொழிலை புறக்கணித்தால் பிறகு கச்சா எண்ணெய்க்கு பிற நாடுகளை நம்பியிருப்பதைப் போல உணவுப் பொருட்களுக்கும் வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close