[X] Close

முகங்கள்: மலர் போல மணக்கிற வாழ்க்கை!


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 11:07 am
  • அ+ அ-

-நீல் கமல்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால் பலவிதப் பூக்கள், செடிகள், மரங்கள் என  இயற்கை அழகுடன் நம்மை வரவேற்கிறது  ‘கருணா நர்சரி ஃபார்ம்ஸ்’.  நர்சரிக்குள் நுழைந்தால் அதன் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள், அவற்றில் பூத்துக் குலுங்கும் பல வண்ணப் பூக்கள், மரக்கன்றுகள், வீட்டு அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பசுமையின் ஆட்சி!

பூக்களின் மலர்ச்சிக்குச் சற்றும் குறையாத புன்னகையோடு வந்து அமர்கிறார் நர்சரியின் உரிமையாளர் கருணா. பெயருக்கேற்ற மாதிரியே அவரது பேச்சும் இருந்தது. கருணா, ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். அவருக்கு ஏழு வயதானபோது அவருடைய பெற்றோர் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். 

நர்சரியாக மாறிய பூந்தோட்டம்

கருணாவுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பள்ளிக்குச் செல்லவில்லை. சென்னை படப்பையில் இவர்களுக்குச் சொந்தமாகப் பூந்தோட்டம் இருந்தது. அதனால் கருணாவுக்குச் சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. “எங்கப் பூந்தோட்டத்துல மல்லியையும் கனகாம்பரத்தையும் பயிரிட்டோம். பூக்களைச் சந்தைக்கு அனுப்பிவைப்போம். ஆனா, என்னால அதை லாபகரமாக நடத்த முடியலை” என்று சொல்லும் கருணா, தங்கள் தோட்டத்தில் இருந்த பூச்செடிகளை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கினார்.

அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க, அதையே சற்று விரிவாக்கி நர்சரி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கருணாவுக்குத் தோன்றியது. பிறகு பனையூரில் 2011-ல் சிறிய அளவில் நர்சரியைத் தொடங்கினார். வியாபாரம் வெற்றிகரமாக நகரத் தொடங்கியதும் 2015-ல் அக்கரையில் மற்றொரு நர்சரியை ஆரம்பித்தார். அதுவும் நல்லவிதமாகச் செல்ல, ஈஞ்சம்பாக்கத்தில் 2016-ல் ஏழு ஏக்கரில் பெரிய அளவில் நர்சரியைத் தொடங்கினார்.

19.jpg 

இல்லை என்பதே இல்லை

இதில் இல்லாத செடிகளே இல்லை என்னும் அளவுக்கு அத்தனை விதமான தாவர ரகங்கள் இங்கே இருக்கின்றன. நர்சரி நடத்திய அனுபவம் அனைத்தையும் இதில் விதைத்திருக்கிறார் கருணா. வாடிக்கையாளர்கள் எவற்றை அதிகம் விரும்புவார்கள்; எவையெல்லாம் எளிதில் விற்பனையாகும் என நர்சரியின் அத்தனை சூட்சுமங்களையும் கருணா அறிந்துவைத்திருப்பதை அவரது நர்சரி உணர்த்துகிறது. நம்மிடம் பேசியபடியே வாடிக்கையாளர்களையும் கவனிக்கிறார். அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லி, செடி பராமரிப்புக் குறிப்புகளையும் சொல்கிறார்.

“எங்க நர்சரியில் ‘வாட்டர் ஆப்பிள்’னு ஒரு வகை செடி இருக்கு. அது கொடைக்கானல் போன்ற குளிரான இடங்களில்தான் இருக்கும். அதை எங்க நர்சரியில பார்க்கிறவங்க ஆச்சரியப்பட்டு வாங்கிட்டுப் போவாங்க. தாய்லாந்துல இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போகன்வில்லா, கிராஃப்டட் போன்றவையும் இருக்கு.  கிராஃப்டட் செடியில  ஐந்து வண்ணப் பூக்கள்  பூக்கும். ஆலிவ் போன்ற செடி வகைகளை சீனாவுல இருந்து இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குறோம்” என்கிறார் கருணா.

தோப்பான தனி மரம்

500-க்கும் மேற்பட்ட பூச்செடி வகைகள் இங்கே உள்ளன. செம்பருத்தியில் மட்டும் சுமார் 200 ரகங்கள் இருக்கின்றன. வீட்டுக்குள் வைக்கப்படும் செடிகளும் ஏராளம். இவை போதாதென்று ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய செடியைக் கொண்டுவருவதை லட்சியமாக வைத்துச் செயல்படுகிறார் கருணா. “நன்றாக வளர்ந்த மரக்கன்றுகளும் எங்களிடம் உண்டு. வாங்கி வைத்த இரண்டே ஆண்டுகளில் அவை காய்க்கத் தொடங்கிவிடும்” என்று சொல்லும் கருணா, செடிகளை விற்பனை செய்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை.

21.jpg 

பல நிறுவங்களுக்குப் பூந்தோட்டத்தையும் புல்வெளியையும் அமைத்துத் தருகிறார். 150 ரூபாயில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் வரையிலான செடிகள் இங்கே உண்டு. வெளி மாநிலங்களிலிருந்தும்  வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்வதுடன் சொந்தமாக உற்பத்தி நிலையத்தையும் நடத்துவதாகச் சொல்கிறார் கருணா.

“இங்குள்ள செடிகளுக்கு இயற்கை உரங்களைத்தான் இடுகிறோம். இதனால் வாடிக்கையாளர்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு. தனியாகத்தான் இதில் இறங்கினேன். இப்போ இங்கே 40 பேர் வேலை செய்யறாங்க. என் கணவர் விஜயனும் தங்கை மகன் ரவீந்திரனும் எனக்கு உதவியா இருக்காங்க. மகள் லண்டனில் இருக்கா. மகன் சென்னையில ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யறான். நேரம் கிடைக்கும்போது அவங்களும் எனக்கு உதவுவாங்க” என்கிறார் கருணா.

22.jpg 

மரம் வளர்த்துச் சூழல் காப்போம்

2015-ல் ஏற்பட்ட சென்னைப் பெருவெள்ளத்தால் இவர்கள் பெரிய இழப்பைச் சந்தித்தனர். “கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் நஷ்டமாகிடுச்சு. அதிலிருந்து மீண்டு வருவது பெரிய சவாலா இருந்தது. பொதுவாவே மழை காலத்துல எங்களுக்கு நஷ்டம்தான். வியாபார நோக்கத்தோடு மட்டும் இந்த வேலையை நாங்க செய்யலை. அதனால லாப, நஷ்டத்தைப் பத்திப் பெருசா கவலைப்படுறது இல்லை.

இந்த இடத்துக்கு வர்றவங்களுக்கு மன நிம்மதி ஏற்படும். அதுதான் எங்களோட வெற்றி” என்று புன்னகைக்கும் கருணா, பள்ளி மாணவர்களிடம் செடி வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்குக் குறைந்த விலையில்  செடிகளைக் கொடுக்கிறார். “எல்லாரும் அவங்களால முடிந்த அளவுக்கு வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் செடிகளையும் மரங்களையும் வளர்க்கணும். அது அவங்களுக்கு மட்டுமில்ல; சுற்றுச்சூழலுக்கும் நல்லது” என்கிறார் கருணா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close