[X] Close

வாழ்ந்து காட்டுவோம் 03: காப்பாற்றப்பட்ட குழலியின் வாழ்க்கை


03

  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 11:07 am
  • அ+ அ-

-ருக்மணி

விவசாயம் செய்ய ஏதுவான சூழல் இல்லை. பஞ்சம் பிழைக்க குழலியின் பெற்றோர் நகரத்துக்குச் செல்ல வேண்டிய நிலை. பிளஸ் டூ படிக்கும் குழலியைப் பாட்டியோடு விட்டுச் செல்லலாம் என்றுதான் முதலில் முடிவெடுத்தனர். ஆனால், அடுத்த தெரு பரமசிவம் அவர்களின் மனத்தை மாற்றிவிட்டார். அவரின் உறவுக்காரர் ஒருவர், முதல் மனைவியை இழந்தவர்.

வீடு, நிலம், வியாபாரத்தில் கைநிறையக் காசு. அவருக்கு  இரண்டாம் தாரமாக குழலியைக் கட்டிக்கொடுத்து விடலாம் என்றார். அப்பா, அம்மாவுக்கு முதலில் விருப்பமில்லை. ஆனால், இந்த முறை பரமசிவம் வேறு ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அக்கம்பக்கத்தில் சில பெண்கள் காதலித்தவனோடு ஓடிப் போய் விட்டதைச் சுட்டிக்காட்டினார்.

பாட்டியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு குழலி யாரையாவது காதலித்து ஓடிப் போய்விட்டால் குடும்ப மானம் போய்விடும் என்றார். குழலியின் பெற்றோர் உடனே சம்மதித்துவிட்டனர். இது எதுவும் குழலிக்குத் தெரியாது. குழலியைத் தேடிவந்த  தோழி அவர்கள் பேசியதைக் கேட்டாள். ஏதாவது செய்ய வேண்டும் என  நினைத்தாள்.

அதற்கு முந்தைய வாரம் கலெக்டரிடமிருந்து அந்த மாவட்டப் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் வந்த கடிதத்தில் குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம் என்றும் அப்படி ஒன்று நடந்தால் யாரிடம் புகார் கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. போன் போட்டு குழலியின் விஷயத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தாள். திருமணம் நிறுத்தப்பட்டதோடு, பெண்களுக்கான அரசு விடுதியில் தங்கி குழலி படிப்பைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

காரணமும் விளைவும்

குழலியின் தோழிக்கு இது குறித்து விழிப்புணர்வு இருந்ததால் குழந்தைத் திருமணக் கொடுமையிலிருந்து அவள் மீள முடிந்தது. ஆனால், இன்றும் நம்மிடையே குழந்தைத் திருமணங்கள் நடந்தபடிதான் இருக்கின்றன.

வறுமை, போதிய கல்வியறிவு இல்லாமை, பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருதுவது, இடம்பெயர்ந்து வாழும் குடும்பச் சூழ்நிலை, திருமணத்தின் மூலம் பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்ணுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை, குழந்தைத் திருமணத்தின் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது, நவீன காலத்தில் சிறுமிகள், இளைஞர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றிய புரிதல் இன்மை போன்றவை குழந்தைத் திருமணத்துக்கான சில காரணங்கள்.

குழந்தைத் திருமணம் முதலில் அந்தப் பெண்ணின் கல்வியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுகிறது. அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. அடிக்கடி கருவுறுதல், கருக்கலைப்பால் சத்து பற்றாக்குறை போன்றவை ஏற்படலாம். இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். பிரசவத்தின் போது தாய், சேய் மரணம் ஏற்படக்கூடும்.

எடை குறைவான அல்லது குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும். தாய்க்கு ரத்த சோகை ஏற்படும். உடலும் மனமும் பலவீனம் அடையும். நோய்க்கும் வறுமைக்கும் வழிவகுக்கும். பெண்ணுக்குக் கல்வி தடைபடுவதால் குழந்தைகளைச் சரியாக வழிநடத்த இயலாமல் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும்.

குடும்பத்தைச் சரியாக வழிநடத்த இயலா மல் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப நேரிடும். இதெல்லாம் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006’.

நோக்கம்

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ செய்யப்படும் திருமணம் குழந்தைத் திருமணம். இப்படிச் செய்யப்படும் திருமணத்தைத் தடைசெய்யவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

தடைசெய்வது மட்டுமன்றி   குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் குழந்தைத் திருமணத்தை நடத்துவோருக்குச் சட்டரீதியான தண்டனை வழங்கவும்  இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டம் அளிக்கும் பாதுகாப்பு

# ஏற்கெனவே நடைபெற்ற குழந்தைத் திருமணத்தை செல்லாததாக்கலாம்.

# பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பராமரிப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் வழிவகை செய்யப்படும்.

# குழந்தைத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்குச் சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குதல். மேலும் அவர்களின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் இச்சட்டம் வழிவகுத்துள்ளது.

# குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றுடன் மறுவாழ்வுக்கும் உறுதுணை  புரிகிறது.

 

யார் மீது புகார் தரலாம்?

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ன்

படி குற்றம் செய்தவராகக் கருதப்படுவோர்.

# குழந்தைத் திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன்.

# குழந்தைத் திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர்/பூசாரி.

# குழந்தைத் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள்/ நண்பர்கள் / அண்டை வீட்டார் அனைவரும்.

# குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்தும் சமூதாயத் தலைவர்கள்.

# குழந்தைத் திருமணத்தை நிச்சயித்த நபர்கள் / அமைப்புகள்.

# திருமணத் தரகர்கள்.

# திருமண விழா – சமையல்காரர், பணியாளர்கள் ஆகிய அனைவரும் குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006-ன் படி குற்றம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

 

சட்டம் பரிந்துரைக்கும் தண்டனைகள்18.jpg

# நடைபெற்ற திருமணம் குழந்தைத் திருமணம் இல்லை என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத பட்சத்தில், குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோருக்கும் நடத்திவைப்போருக்கும் ஆதரிப்போருக்கும் மறைப்பவருக்கும் இரண்டு ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

# குழந்தைத் திருமணத்தை நடத்தும், ஊக்குவிக்கும் அல்லது அனுமதிக்கும் அல்லது தடுக்கத் தவறும் பெற்றோர் / பாதுகாவலர் ஆகியோருக்கும் அந்தத் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய்வரை அபராதமும் நீட்டித்து வழங்கப்படும்.

# 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் 18 வயது நிரம்பிய ஆணுக்கு இரண்டு ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அல்லது  ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.

# குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுவது பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய, பிணையில் விடுவிக்க இயலாத  குற்றம்.

# இச்சட்டத்தின்கீழ் பெண்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கலாம். சிறைவாசம் விதிக்க இயலாது.

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர்,

மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்,

தொடர்புக்கு: somurukmani@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close