[X] Close

இனி எல்லாம் நலமே 03: மறைக்க வேண்டியதல்ல மாதவிடாய்


03

  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 11:09 am
  • அ+ அ-

-அமுதா ஹரி

பெண் குழந்தை பிறக்கும்போதே சினைப்பைக்குள் ஏராளமான கருமுட்டைகள் இருக்கும். பருவமடைதலின்போது ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை முழு வளர்ச்சிபெற்று கருவுறத் தயாராக இருக்கும். முட்டை கருவுறுகிறபோது அதைப் பதமாகத் தாங்கி வளர்க்கக் கருப்பை தயாராகிவிடும்.

இதற்காகக் கருப்பையின் சுவர், படுக்கை போன்ற அமைப்பை உருவாக்கிக் காத்திருக்கும். முட்டை கருவுறாதபோது முட்டையோடு சேர்ந்து கருப்பையின் படுக்கை போன்ற அமைப்பு சிதைந்து வெளியேறும். இதைத்தான் மாதவிடாய் என்கிறோம்.

மாதவிடாய் நேரத்தில் வெளியேறும் ரத்தம் அசுத்தமானது எனப் பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் மாதவிடாய் நேரத்தில் வெளியேறுவது ரத்தம் மட்டுமல்ல. நுண்ணிய திசுக்களும் ரத்தத்துடன் சேர்ந்தே வெளியேறும். கருவைத் தாங்க வேண்டிய திசுக்கள் வேலையில்லாததால் ரத்தத்தோடு சேர்ந்து வெளியேறுகின்றன.

இதில் அசுத்தம் எங்கே வருகிறது? தினமும் சிறுநீரையும் மலத்தையும் நம் உடலிலிருந்து வெளியேற்றுகிறோம். அவற்றை வெளிப் படையாகச் சொல்வதில் நமக்கு எந்த மனத்தடையும் இல்லை. ஆனால்,  பெண்கள் அனைவருக்கும் மாதம் ஒரு முறை நிகழும் மாதவிடாயை வெளியே சொல்வதில் என்ன தயக்கம்? அதை ஏன் பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைத்துப் பேச வேண்டும்? ஆணுக்கும் அடுத்தவருக்கும் தெரிந்தால் என்னவாகிவிடும்? இயற்கையாக நடக்கும் ஒன்றை மறைப்பதில் என்ன பெருமை?

கட்டுப்பாடு தேவையில்லை

ஏற்கெனவே பாடம் மூலமும் தோழிகளின் உதவியாலும் மாதவிடாய் குறித்து இன்று பெரும்பாலான குழந்தைகள் அறிந்துவைத்திருந்தாலும், முதன் முறையாக மாதவிடாய் ஏற்படுகிறபோது சில குழந்தைகள் பயப்படுவார்கள். என்னமோ ஏதோவெனப் பதறிவிடுவார்கள். அதுபோன்ற நேரத்தில் பெற்றோர்தான் குழந்தைக்கு ஆதரவாகத் துணைநிற்க வேண்டும். ஆனால், நம் வீடுகளில் என்ன நடக்கிறது? “நீ வீட்டுக்கு விலக்கு ஆகிவிட்டாய். வீட்டில் உள்ள பொருட்களைத் தொடாதே. ஆண்களைப் பார்க்கக் கூடாது.

அடக்கமாக ஓரிடத்தில் உட்கார வேண்டும். ஓடியாடி விளையாடக் கூடாது” எனப் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பார்கள். உடல்ரீதியான மாற்றத்தால் குழம்பியிருக்கும் குழந்தை, இதுபோன்ற கட்டுப் பாடுகளால் மேலும் குழம்பித் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ என நினைக்கக்கூடும். மாதவிடாய் நாட்களில் குழந்தைகளுக்கு ஓய்வு தேவைதான். அதற்காகக் குழந்தைகளுக்குத் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது தவறு. அதில் அறிவியல்பூர்வமாக எந்த உண்மையும் இல்லை.

தவிர, மாதவிடாய் நாட்களில் செடிகளைத் தொட்டால் கருகிவிடும், என்பது ஊறுகாயைத் தொட்டால் கெட்டுப்போகும் என்பது போன்றவையும் கற்பிதங்களே. பெண் குழந்தை பருவமடைந்ததுமே இப்படிச் சொல்லி வளர்ப்பது அவர்களின் ஆளுமையைச் சுருக்குவதைப் போன்றது. பருவமடைவது என்பது இயற்கை நிகழ்வுதானே தவிர அவர்களைக் கட்டிப்போடுவதற்கான உரிமம் அல்ல. குழந்தைகளை அவர்களின் இயல்போடு இருக்கவிடுங்கள்.

கையாளக் கற்றுத்தருவோம்

இப்போது நிறையக் குழந்தைகள் இளம் வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு  12, 13 வயதில் முதல் மாதவிடாய் வருவது வழக்கமாக இருந்தது.  ஆனால், முன்பு ஒன்பது வயதில் தொடங்கிய பருவ வளர்ச்சி மாற்றம் இப்போது சில குழந்தைகளுக்கு ஏழு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. அதனால், அவர்களுக்கு ஒன்பது முதல் பத்து வயதுக்குள்ளேயே முதல் மாததாந்திர உதிரப்போக்கு வந்து விடுகிறது.

சிறிய குழந்தைகள் என்பதால் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது பற்றி நாம்தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாப்கினோ துணியோ எதுவாக இருந்தாலும், அவை தூய்மையாக இருக்க வேண்டும். பருத்தித் துணியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இப்போதெல்லாம் பருத்தித் துணியால் தைக்கப்பட்ட நாப்கின்கள் கிடைக்கின்றன.

இவற்றைத் துவைத்துப் பயன்படுத்தலாம். இவற்றைச் சரியான முறையில் கையாளக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலையில் வைத்துச் செல்லும் நாப்கினை மாலை வீடு திரும்பும்வரை மாற்றுவதே இல்லை. இது ஆரோக்கிய கேடு மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட. நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் நாப்கினை மாற்றுவதே ஆரோக்கியமானது.

பொதுவாக மாதவிடாய்ச் சுழற்சி 28 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் என்றாலும் ஒரு வாரம் முன்பாகவோ கழித்தோ ஏற்படலாம். அதனால், அந்தத் தேதியைக் கணக்கிட்டு அதற்கேற்பக் குழந்தைகளை முன்கூட்டியே நாப்கினைப் பள்ளிக்கு எடுத்துச் செல்லும்படி சொன்னால் தேவையில்லாத பதற்றம் இருக்காது. 

அவமானப்பட எதுவுமில்லை

மாதவிடாய் நாட்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல் ஆடையில் கறைபடிவது. அதுவும் வெள்ளைச் சீருடை அணிந்துசெல்லும் நாட்களில் மாதவிடாய் வந்துவிட்டால் பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. மாதவிடாய் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுப்பு எடுக்க முடியாதல்லவா? கறை குறித்து அவர்கள் மனத்தில் நாம் எழுப்பியிருக்கும் அவமான உணர்வுதான் குழந்தைகளை இப்படி முடக்கிப்போடுகிறது. மாதவிடாய் நாட்களில் நம்மையும் அறியாமல் ஆடையில் கறைபடிவது இயல்புதான்.

இதில் அவமானப்படவோ குற்றவுணர்வுக்கு ஆளாகவோ எதுவுமில்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டால்தான் அதைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். சில வீடுகளில் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருப்பது வீட்டில் இருக்கும் ஆண்களுக்குக்கூடத் தெரியக் கூடாது என நினைப்பார்கள். நாப்கினைக்கூடத் தாங்களே கடைக்குச் சென்று தயங்கித் தயங்கி வாங்குவார்கள். இவர்கள் தங்கள் குழந்தையையும் அப்படியேதான் பழக்குவார்கள். மாதவிடாய் குறித்துப் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; தேவைப்பட்டால் ஆண் குழந்தைகளுக்கும் புரியும்படி எளிமையாகச் சொல்லிவைக்கலாம்.

பின்பற்ற வேண்டியவை

மாதவிடாயின்போது உடலிலிருந்து வெளியேறும் ரத்தப் போக்கில் வெளிக்காற்று படும்போது ஒருவித நாற்றம் உண்டாகும். எனவே, மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால் மலம் கழிப்பதில் பிரச்சினைகள் இருக்காது.

ஏற்கெனவே உதிரப்போக்கால் அசௌ கரியமாக உணரும்போது மலச்சிக்கலும் சேர்ந்துகொண்டால் வெறுப்பாக இருக்கும். ஆகவே, மாதவிடாயின்போது மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுத்தமான துணி அல்லது நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். ரத்தப் போக்கு ஏற்படுவதால் துர்நாற்றம் இருக்கும். எனவே, துணியைத் தினமும் மூன்று முறையாவது மாற்ற வேண்டும். ரத்தப் போக்கும் வியர்வையும் அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல்கூடத் துணியை மாற்ற வேண்டும்.

தொடைகள் ஒன்றோடொன்று உராய்வதால் மாதவிடாயின்போது வெளியேறும் ரத்தப் போக்கு தொடைகளில் பட்டு எரிச்சலை உண்டாக்கும். எனவே, தொடைப்பகுதிகளைச் சுத்தமான துணியால் ஈரம் போகத் துடைத்து, உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். மாதவிடாயின்போது பயன்படுத்திய நாப்கின்களைக் காகிதத்தில் மடித்துக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் துணிகளை மாதவிடாய் முடிந்தவுடன் சோப்புப் போட்டு நன்றாக அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். காய வைத்த துணிகளை மடித்து, துணிப்பையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். துணிப் பைக்குள் வேப்ப இலைகளைப் போட்டு வைக்கலாம். வேப்ப இலை கிருமிநாசினி என்பதால் பூச்சிகள் அண்டாது.

மாதவிடாய் நேரத்தில் வெளியேறும் ரத்தம் அசுத்தமானது எனப் பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் மாதவிடாய் நேரத்தில் வெளியேறுவது ரத்தம் மட்டுமல்ல. நுண்ணிய திசுக்களும் ரத்தத்துடன் சேர்ந்தே வெளியேறும்.

கருவைத் தாங்க வேண்டிய திசுக்கள் வேலையில்லாததால் ரத்தத்தோடு சேர்ந்து வெளியேறுகின்றன.

 

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close