[X] Close

நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க உதவுவேன்!- சரத் பவார் பேட்டி


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 09:23 am
  • அ+ அ-

மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி, மகாராஷ்டிர பாஜகவின் செல்வாக்கு மிக்கத் தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் என்று பாஜக தரப்பில் பிரச்சாரக்களத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தப்பட, எதிரணியில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் யுத்தத்தை நடத்துவதில் முன்னிற்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் 48 இடங்களில் 41 இடங்களை பாஜக கூட்டணி வென்றிருக்கும் பின்னணியில் இப்போது மாநிலம் முழுக்கப் பறந்து ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் சரத் பவார். அலோக் தேஷ்பாண்டே, விகாஸ் தூத் இருவருடன் மகாராஷ்டிரத் தேர்தல் களத்தைப் பற்றிப் பேசினார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு நீங்கள் மட்டுமே பிரதான பிரச்சாரகர். மாநில எதிர்க்கட்சி வரிசையில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. தேர்தலில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தாத காலத்திலேயே மாநிலம் முழுக்கச் சென்று நான் பிரச்சாரம் செய்திருக்கிறேன். இப்படிப் பிரச்சாரம் செய்வதையே விரும்புகிறேன். மாநில நலன்களைக் காப்பதற்காகப் புதிய தலைமையை உருவாக்குவது என்னுடைய கடமை. இங்கே என்னுடைய குடும்பத்தைத் தாக்கிப் பேசுகிறார்கள் பாஜகவினர். இது தேசியப் பிரச்சினையா அல்லது தேர்தல் பிரச்சினையா? மிகவும் விரக்தியுற்றுவிட்ட நிலையிலேயே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். மோடி தன்னம்பிக்கை இழந்துவிட்டார் என்பது வெளிப்படை.

மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கற்ற பாடம் என்ன?

எதிர்க்கட்சிகளாக இருந்து எதையும் கற்கவில்லை; ஆளுங்கட்சியாக வந்தால் அரசு இயந்திரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதைத்தான் கற்றிருக்கிறோம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சிலருடைய பேச்சுகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் ஆணையம், ராணுவத்தைக் குறிப்பிட்டுப் பிரதமர் பேசியது குறித்து ஒன்றுமே செய்யவில்லையே? அது மட்டுமில்லை. குஜராத்தில் வாக்களித்த பிறகு சாலையில் ஊர்வலம்போலச் சென்றிருக்கிறார். எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதா, இல்லையா என்று கருத்து கூற மாட்டேன். ஆனால், எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மோடி என்ன செய்தாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாது என்றே தோன்றுகிறது.

இதுவரை பதினான்குக்கும் மேற்பட்ட பொதுத் தேர்தல்களைப் பார்த்துவிட்டீர்கள்; பிரச்சாரக்களம் எப்படி இருக்கிறது?

அரசியல் கட்சிகள் தங்களுடைய திட்டங்கள், செயல்முறைகள் போன்றவற்றைச் சொல்லித்தான் மக்களை அணுகுவார்கள். மோடி இன்று எல்லாவற்றையும் மாற்றிவிட்டார். பிரதமர் பதவியில் அமர்ந்த எவரும் மோடியைப் போலப் பேசி நான் பார்த்ததே இல்லை. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் சிலருடைய அரசியல் பிரச்சாரங்களை நிறைய கேட்டிருக்கிறேன். பிரதமர் பதவிக்குரிய அந்தஸ்தையும் கண்ணியத்தையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள். அரசியல் லாபத்துக்காக எந்த நிலைக்கும் இறங்கிப் பேசுகிறார் மோடி. 2014-ல் வளர்ச்சி-முன்னேற்றம் என்று பேசியதால், ‘இவருக்கு ஒரு வாய்ப்பு தருவோமே’ என்று மக்கள் நினைத்தார்கள். ஐந்தாண்டுகளில் அவருடைய சாதனைகள் என்ன? வேளாண் துறையில் வீழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை, பணமதிப்புநீக்கம், தொழில் துறையில் வளர்ச்சியே இல்லை. எனவே, எதைச் சொல்லியும் மக்களுடைய ஆதரவைக் கேட்க முடியாது. அதனால்தான், இப்படி இறங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

பயங்கரவாதி என்று குற்றஞ்சாட்டப்பட்ட பிராக்யா சிங் தாக்கூரை பாஜக வேட்பாளராக நியமித்திருப்பது எதைக் காட்டுகிறது?

வகுப்புவாத உணர்வைப் பயன்படுத்த மோடி விரும்புகிறார். அவர் நினைக்கும் அளவுக்கு இது கைகொடுக்குமா என்பது சந்தேகமே.

மூன்றுகட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது, தேர்தல் குறித்த உங்களுடைய கணிப்பு என்ன?

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு பாஜக கூட்டணிக்குக் கிடைக்காது. அவர்கள் ஆட்சியமைக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் 2004-ல் நிலையான அரசை அமைத்ததைப் போல மீண்டும் அமைக்க ஒன்றுபட வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் ஒன்றாவோம் என்று 100% நம்பிக்கை இருக்கிறது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் உங்கள் பெயரும் இருக்கிறதா?

இல்லை. 25 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்துவிட்டேன். அதுவே போதும். அதைப் போன்ற பதவிகளை இனி ஏற்க மாட்டேன். நல்லதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவுவேன். 27 வயதே நிரம்பிய எனக்கு 1967-ல் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பைத் தந்தார் யஷ்வந்த்ராவ் சவாண். சிலர் அதை ஆட்சேபித்தபோது, கட்சிக்கு எதிர்காலத் தலைமையை உருவாக்குவது நம்முடைய கடமை என்றார் சவாண். அதே நிலைதான் இப்போதும் நிலவுகிறது. இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டியது எங்களுடைய கடமை.

பிற கட்சிகளிடையே உங்களுக்கு இருக்கும் மரியாதைக்கு எதிர்க்கட்சிகளை இணைக்கும் பசையாக நீங்கள்தான் இருக்க முடியும் அல்லவா?

அனைத்துக் கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டுசேர்க்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்; அது தொடர்பாகப் பணியைத் தொடங்கிவிட்டோம்.

இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி ஓடிவிட்டீர்கள் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் கூறியிருக்கிறாரே?

தேர்தலில் போட்டியிடுவதை 2014 முதலே நிறுத்திவிட்டேன். அவருடைய பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும். அதற்குப் பிறகும் இப்படிப் பேசுகிறார் என்றால் அவருடைய தராதரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசின் தவறுகளை அம்பலப்படுத்தி எம்என்எஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசிவருகிறார்; அவருடைய கூட்டங்கள் உங்களுக்குச் சாதகமாக இருக்கின்றனவா?

ராஜ் தாக்கரே ‘இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, பிரச்சாரம் மட்டுமே செய்வேன், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்தான் என்னுடைய லட்சியம்; மோடி - ஷா கூட்டால் நாட்டுக்குப் பெரிய ஆபத்து’ என்று நினைக்கிறார். அதையே கூட்டங்களில் பேசுகிறார். அது எங்களுக்குச் சாதகமாகவும் இருக்கிறது.

குடியரசுக் கட்சியின் பிரகாஷ் அம்பேத்கர் தனி கூட்டணி அமைத்திருக்கிறார்; எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை அவர் குறைப்பாரா?

இதைப் போல சிலர் போட்டியிடுவது புதியதல்ல; கடந்த காலத்திலும் இப்படி நடந்திருக்கிறது. அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

இல்லை. நாங்கள் தனித்தனி அடையாளங்கள், இப்படி இருப்பதிலேயே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழில்: சாரி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close