[X] Close

360: வயநாடு: கேரளத்தின் விதர்பா?


360

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 11:51 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி என்பதால் தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்திருக்கிறது கேரளத்தின் வயநாடு. 1980-ல் மாவட்டமாகவும் 2009-ல் மக்களவைத் தொகுதியாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வயநாடு, மிக நீண்ட காலமாக மக்கள் வசித்துவரும் பகுதி. 7,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பாறை ஓவியங்கள் எடக்கல் என்னும் இடத்தில் கிடைத்திருக்கின்றன.

கேரளத்தில் 11 நதிகள் தோன்றும் மாவட்டம், மிக அதிகமாகப் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டம், அதிகளவில் புலிகள் வசிக்கும் மாவட்டம், தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை எல்லைப் பகுதிகளாகக் கொண்டிருக்கும் மாவட்டம், கேரளத்தின் மிளகுக் கூடை, அம்மாநிலத்தின் 80% காபி விளையும் மாவட்டம் என்றெல்லாம் வயநாட்டுக்கு ஏகப்பட்ட பெருமைகள் இருந்தாலும், கேரளத்தில் மிக அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாவட்டமும் வயநாடுதான்.

நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள மிகவும் பின்தங்கியிருக்கும் 115 மாவட்டங்களில் வயநாடும் ஒன்று. ஏறக்குறைய இந்த மாவட்டத்தில் வசிப்பவர்களில் 90% பேர் விவசாயிகள். 1950-களில் திருவிதாங்கூரிலிருந்து விவசாய வேலைகளுக்காகவே இந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்தவர்கள் நிறைய பேர். ஆனால், 70 ஆண்டுகளில் சாகுபடி முறையே முற்றிலும் மாறிப்போய்விட்டது. 30,000 ஹெக்டேர்களாக இருந்த நெல் சாகுபடி 8,000 ஹெக்டேர்களாகச் சுருங்கிவிட்டது. நெல்லின் இடத்தை மிளகும் காபியும் பிடித்துக்கொண்டன.

கூடவே, விவசாயிகளை வறுமையும்! வேதியுரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் நம்பிய நவீன விவசாயத்தின் சவால்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கடன் தொல்லையால் அல்லல்படுகிறார்கள் வயநாடு விவசாயிகள். பெருவெள்ளத்தின் காரணமாக விவசாயம் பொய்த்துப்போன சோகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டுமே 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ராகுல் புண்ணியத்திலேனும் இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்க வேண்டும் என்கிறார்கள் உள்ளூர் விவசாயிகள்.

 

மூன்றில் ஒரு பங்கில்தான் பாஜக - காங்கிரஸ் போட்டி... மாநிலக் கட்சிகளுடன்தான் நிஜ மோதல்!

நாடாளுமன்றத் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளான காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், மொத்தத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கில் மட்டும்தான் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மற்ற தொகுதிகளில் மாநிலக் கட்சிகளோடுதான் இந்த இரு தேசியக் கட்சிகளும் போட்டியிட்டன.

எனவே, தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் உள்ளூர்ப் பிரச்சினைகள் முக்கியப் பங்கு வகித்தன. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் காங்கிரஸும் 189 தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிட்டன. 166 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸ் வெற்றிபெற்ற 28 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தில் இருந்தது. 147 தொகுதிகளில் மாநிலக் கட்சிகளை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றது பாஜக. பாஜகவை எதிர்த்து 31 தொகுதிகளில் மாநிலக் கட்சிகளும் வெற்றிபெற்றன.

பாஜக வெற்றிபெற்றதும் இரண்டாம் இடத்தில் இருந்ததும் மொத்தம் 336 தொகுதிகள். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் இரண்டாம் இடத்தில் வந்ததும் 268 தொகுதிகள். ஆனால், மாநிலக் கட்சிகள் 354 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கின்றன அல்லது இரண்டாம் இடத்தில் வந்திருக்கின்றன. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தேசியக் கட்சிகள் என்ற நிலையிலிருந்து இறங்கிவந்து மாநிலக் கட்சிகளுடன் கைகோத்துதான் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும்போது, மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு மேலும் கூடியிருக்கலாம்.

 

மூழ்கும் ஜெட் ஏர்வேஸ் மீட்கப்படுமா?

இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் தனித்துவமான சேவையால் அடையாளப்படுத்தப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடனில் மூழ்கியிருப்பதும் விமான சேவைகளைக் குறைத்திருப்பதும் அந்த நிறுவனத்தோடு முடியும் விஷயங்கள் அல்ல. பல நூறு ஊழியர்கள் தொடங்கி இந்திய விமானத் துறையின் எதிர்காலம் வரை சகலமும் இது தொடர்பில் விவாதிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே, ஊழியர்களுக்குச் சம்பள பாக்கி இருக்கும் நிலையில், வங்கிகளிடம் அந்நிறுவனம் கேட்ட ரூ.400 கோடி கடன் கிடைக்கவில்லை. அதையடுத்து, உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டு 20,000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டவில்லை, மாதாந்திரக் கடன் தவணைகளைக் கட்டவில்லை என்று தத்தளிக்கிறார்கள் ஊழியர்கள்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு ஊழியரின் 17 வயது மகள் சங்ஜனா சிங், ‘என் தந்தையின் வேலையைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோரிக்கை இயக்கத்தை இணையத்தில் தொடங்கியிருக்கிறார். பிரதமர், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அவர் விடுத்திருக்கும் கோரிக்கையை இதுவரை 50,000-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு ஆதரித்திருக்கிறார்கள்.

‘என் தந்தை 20 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். திடீரென்று வேலையைவிட்டு நிறுத்தினால் எங்கள் குடும்பமே திண்டாடிப்போகும், என் படிப்பு கனவாகவே போய்விடும். நாங்கள் இந்தியாவின் குடிமக்கள், எனவே அவரிடம் உதவி கேட்பது எங்களது உரிமை’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் 12-ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close