[X] Close

முதுமையும் சுகமே 01: புறந்தள்ளப்படும் குடும்பத் தூண்கள்


01

  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 12:45 pm
  • அ+ அ-

அன்றும் வழக்கம் போல மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளி களைப் பார்த்து நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். முதுமை தந்த தளர்வால் சில பல உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது முதியவரின் கரம்பிடித்து, “எப்படி இருக்கீங்க தாத்தா?” என்றேன்.

“தம்பி, ஏதோ ஒரு வெளிநாட்டில் சுயவிருப்பப்படி கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் ஒத்துக்கொள் கிறதாமே. எனக்கும் அப்படி செய்துகொள்ள ஆசை” என்றார்.

கரங்களை இறுகப் பற்றிக் கண்ணீருடன் அவர் உதிர்த்த அந்த வார்த்தைகள் வேதனை தந்தன. புறக்கணிக்கப்படும் இந்த வயதினரின் உடல்-மன நோய்களைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

நட்டாற்றில் நிற்பவர்கள்

இத்தனைக்கும் அவர் படிப்பிலோ பணத்திலோ சுற்றத்திலோ சற்றும் இளைத்தவர் அல்ல. காலமெல்லாம் உழைத்துக் கட்டாந்தரையாய்க் களைத்துப்போன வயதில், அவரின் உடலும் மனமும் காயப் படாமல், சொல்லடி படாமல் அவர் காப்பாற்றப்பட வேண்டியது அவருடைய குடும்பத்தினருக்கான அக்கறை மட்டுமல்ல; இந்தச் சமூகத்தின் கடமையும்கூட.

நிறவெறியைப் போல இன்று மனிதனுக்குள் வெடித்துக் கிளம்பும் சுயநலம், உறவுகளுக்குள்ளும் சிக்கல்களை ஊதிப் பெரிதாக்கு வதால், குடும்பங்கள் நெல்லி மூட்டையை அவிழ்த்து விட்டதைப் போல் சிதறுண்டு தனிக்குடித்தனமாகிவிட்டன. இதில் இடர்படுபவர் முதியோர்தான்.

அதனால் வயது அறுபதைத் தாண்டியவர் உடல் அளவில் உறுதிபெற, மன அளவில் உரம்பெற, குடும்பத்தில் - சமுதாயத்தில் தன் தனித்தன்மையை, சுயகௌரவத்தை இழக்காமல் மதிப்புக் கூட்டப்பட்டவ ராக வாழ்வதற்கும், அரசு அளித்துள்ள உரிமைகள் பற்றிய தெளிவான புரிதலை அதிகரிக்க வேண்டும்.

அதிகரிக்கும் தொகை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் அனுபிரியா பட்டேல், நம் நாட்டில் 0-14 வயதுவரை உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் 60 வயதைத் தாண்டுபவரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துவருகிறது என்றார்.

இதே கருத்தை ஆமோதித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டிருக் கிறது. 2050-ம் ஆண்டில் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை 34 கோடியைத் தாண்டும். இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம்.

நம் நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் முதியோர்தான். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும் Help Age அமைப்பும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன.

முதியோரின் எண்ணிக்கை நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. 2015-ம் ஆண்டு கிட்டத்தட்ட 90 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டு 200 கோடியாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் ‘Global Health and Aging’ ஆய்வறிக்கை சொல்கிறது.

உலக வரலாற்றில் இந்த அளவுக்கு முதியோரின் எண்ணிக்கை பெருகியிருப்பது இப்போதுதான். அதாவது உலக மக்கள்தொகையில் 15 சதவீதத்தினர் முதியோர்.

சொல்லி மாளாது

அறுபது வயதைச் சர்வசாதாரண மாகக் கடந்து வளர்ந்த நாடுகளைப் போல இன்று நம் நாட்டிலும் தனிமனிதனின் சராசரி ஆயுட்காலம் 75 ஆக அதிகரித்திருப்பதற்குக் காரணம் மருத்துவத் துறையின் அபாரமான வளர்ச்சி, படிப்பறிவு, பொருளாதாரம் போன்றவை.

இன்றைக்கு ஆயுள் அதிகரித்தி ருக்கிறது, ஆனால், வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா? முதியோரின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்கிறது ‘ஹெல்ப்ஏஜ் இந்தியா’ அமைப்பு நாடு முழுவதும் 23 நகரங்களில் 5,014 முதியோரிடம் நடத்திய Elder Abuse in India-2018 என்ற ஆய்வறிக்கை.

இந்திய மூத்தோர் நலக் கூட்டமைப் பின் (AISCCON) தலைவர் எஸ்.பி. கின்ஜவடேகர், “இன்று தனிமனித வாழ்நாள் 70 வயதுக்கு மேல் இருந்தாலும் பாதிக்கும் மேற்பட்ட முதியோர் வீட்டிலும் சமூகத்திலும் அனுபவிக்கும் துயரங்களை சொல்லி மாளாது” என்கிறார்.

நாணயப் பக்கங்கள்

30-40 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுக் குடித்தனங்கள் பெருகியிருந்த காலத்தில், முதியோருக்கு மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளே முதன்மையாக இருந்தன. அப்போது குடும்பத்தினரின் அக்கறையும் நிறைவான கவனிப்பும் அதிகமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழ்!

மருத்துவமனைக்கு வரும் பல முதியோர் தனியாகவே வருகின்றனர். உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை மருத்துவர்களிடம் பேசுவதையும் தாண்டி குடும்ப பிரச்சினைகளையும் தனிமை தரும் தகிப்பைப் பற்றியுமே அதிகம் பேசுகிறார்கள்.

நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது முதுமை. ஒரு பக்கத்தில் வயதின் முதிர்ச்சியும் அனுபவ அறிவும் இருக்கும், மறுபக்கம் தள்ளாமை, நோய்நொடி, வறுமை, தனிமை, மரண பயம் போன்றவை இருக்கும்.

அப்படியென்றால் முதுமை வரமா இல்லை சாபமா? முதுமையிலும் இளமையோடு வாழ, முதுமையை வசந்தமாய் வசப்படுத்தி வசீகரித்துக் கொள்ள செய்ய வேண்டியது என்ன?

- டாக்டர் சி. அசோக்

தொடர்ந்து பேசுவோம்.

கட்டுரையாளர்

தொடர்புக்கு: drashokshpl@gmail.com

டாக்டர் சி. அசோக், சேலத்தைச் சேர்ந்த சித்த மற்றும் அலோபதி மருத்துவர்.குடும்ப நல மற்றும் முதியோர் மருத்துவ சிறப்பு ஆலோசகர், கட்டுரையாளர்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close