[X] Close

உலகப் புத்தக நாள் ஏப்ரல். 23- மருத்துவத்தின் இருண்ட பக்கங்கள்


23

  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 12:47 pm
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

மருத்துவர்களைக் கடவுளுக்கு நிகராகப் போற்றிய நாடு இந்தியா. ஆனால், கடவுளுக்கு நிகராகக் கொண்டாடப்பட்ட மருத்துவர்கள் இன்று சமூகத்தால் தூற்றப்படுகிறார்கள். மருத்துவத்தில் நிரவியிருக்கும் ஊழலால் மருத்துவத்தை உயர்வாகக் கருதிய சமூகப் பொதுப்புத்தி இன்று நீர்த்துப் போய்விட்டது.

மருத்துவர்கள் இன்று சந்தேகக் கண்களுடன் அணுகப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இன்று பணம் பறிக்கும் இடமாகக் கருதப்படுகின்றன. மருத்துவத்தின் மீதான நம்பிக்கை அவநம்பிக்கையாக எப்போது மாறியது, எதனால் அது நிகழ்ந்தது, இதற்கு யார் காரணம்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம்தான் ‘Healers or Predators?’

பொய்யாகும் பிம்பங்கள்

மருத்துவத்தின் மீதான பொதுப் பிம்பங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் பொய்யாக்கி விடுகிறது. 43 அத்தியாயங்கள் கொண்ட இந்த 600 பக்கப் புத்தகம் 50-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், சமூக சேவகர்கள், பொதுச் சுகாதார நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் இந்தப் புத்தகத்தின் மூலம் எழுத்தாளர்கள் ஆகியுள்ளனர். இந்தப் புத்தகத்தின் முன்னுரையை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் எழுதியுள்ளார். மருத்துவத்தின் இருண்ட பக்கங்களில் ஒளியைப் பாய்ச்சும் இந்தப் புத்தகத்தை அவர் ‘அற்புதம்’ எனச் சிலாகிக்கிறார்.

‘குணப்படுத்துபவரா, வேட்டையாடுபவரா?’ என்பதே இதன் தலைப்பின் அர்த்தம். மருத்துவ உலகில் நிலவும் அந்த இரண்டு சாத்தியங்களை மட்டும் இந்தப் புத்தகம் பேசவில்லை; இது முக்கியமாக அந்த இரண்டு சாத்தியங்களுக்கு இடையில் நிரம்பி இருக்கும் அனைத்து அவலங்களையும்  புள்ளிவிவரத்துடன், உண்மைக்கு வெகு அருகிலிருந்து நேர்மையுடன் பேசுகிறது.

 ‘எப்படி எல்லா மருத்துவர்களும் குணப்படுத்துபவர்கள் இல்லையோ அதே போன்று எல்லா மருத்துவர்களும் வேட்டையாடுபவர்கள் இல்லை’ என்று சொல்வதன் மூலம், நமது சமூகத்தில் இன்றும் மீந்திருக்கும் நேர்மையான மருத்துவர்களை, அக்கறையுடன் பாதுகாக்கிறது.

book.jpg 

ஊழலுக்கான தொடக்கப் புள்ளி

இந்தப் புத்தகத்திலிருக்கும் பின்புலம் (Background) எனும் பகுதி தனித்துவமானது. அந்தப் பகுதியிலிருக்கும் அத்தியாயங்கள், இந்திய மருத்துவத்துறையில் நிலவும் புதுவகையான ஊழலை அலசி ஆராய்கிறது. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக அதில் நிலவும் ஊழலைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்தப் பகுதி மிகுந்த அதிர்ச்சியளிக்கும். சிலருக்குத் தடம் மாறும் வழியை அது காட்டலாம்.

உதாரணமாக, முதல் அத்தியாயம், மருத்துவத்துறை ஊழலுக்கு ஆட்பட்டதற்கான வரலாற்றுக் காரணிகளை எளிதில் புரியும் விதமாகப் பட்டியலிடுகிறது. ‘1940-களில் நாட்டில் மருத்துவர்களின் தேவை அபரிமிதமாக இருந்தது. அரசாங்கம் மருத்துவமனையில் ஒரு மணிநேரம் மட்டும் வெளி நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவரைக் காண்பதற்கு

75-க்கும் மேற்பட்ட நோயாளிகள் முண்டி மோதுவது அப்போதைய வழக்கம். மருத்துவத்தில் ஊழல் எப்படி நுழைந்தது என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? லஞ்சம் கொடுப்பதன் மூலம் மருத்துவரின் தனிக் கவனத்தைப் பெற அன்று சிலர் முயன்றனர். இன்று அது பல வடிவங்களில் பல்கிப் பெருகி ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் புதைகுழிக்குள் தள்ளி உள்ளது’ என ஊழலுக்கான தொடக்கப் புள்ளியை அது விவரிக்கிறது.

லாபமே பிரதானமா?

“நாம் தனியாக இல்லை (we are not alone)’ எனும் அத்தியாயம், ‘மருத்துவ ஊழல் என்பது இந்தியாவின் பிரச்சினை மட்டும் இல்லை, அது உலகின் பிரச்சினை என்று தெளிவாக உணர்த்துகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் சுகாதாரத்துறையில் நிலவும் பல விதமான ஊழலை அது விரிவாக அலசுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவைப் போன்றே அங்கும் தனியாருக்கு லாபம் ஈட்டித் தரும் நோக்கில் அரசியல்வாதிகள் அரசு இயந்திரத்துடன் கைகோத்து உள்ளனர்.

‘இங்கே போன்று அங்கும் தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளின் நலனைப் பின்னுக்குத் தள்ளி, லாபத்தை முன்னிறுத்திச் செயல்படுகின்றன. இந்தியாவைப் போன்றே அங்கும் மருத்துவத்துறைக்கு எதிரான கொந்தளிப்பு நிலவுகிறது. அங்கும் மக்களின் நம்பிக்கையை மருத்துவத்துறை இழந்துள்ளது. மருத்துவத்துறையில் சீர்திருத்தம் வேண்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக அங்கேயும் போராட்டங்கள் நடக்கின்றன’ எனத் தரவுகள் உதவியுடன் தெரிவிக்கிறது.

தரம் தாழ்கிறதா சமூகம்?

இந்தப் புத்தகம் மருத்துவத்துறையில் நிகழும் ஊழலைத் தனித்துப் பார்க்கவில்லை; மற்ற துறைகளின் ஊழலோடு சேர்த்தே மருத்துவத்துறையின் ஊழலை  அணுகுகிறது. இதற்குச் சரியான உதாரணம், இந்தப் புத்தகத்தில் அலசி ஆராயப்படும் வியாபம் ஊழல். அந்த ஊழலின் அனைத்துப் பரிமாணங்களையும்  வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நோக்கில் அது விவரிக்கும் தகவல்கள்  மலைப்பை ஏற்படுத்துகின்றன.

சொல்லப்போனால் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நமது சமூகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து உள்ளது என்பதற்கு, மருத்துவத்துறையும் மற்றத் துறைகளும் கைகோத்து நிகழ்த்தியுள்ள இந்த மாபெரும் ஊழலே சான்று என அது ஆதங்கப்படுகிறது. மருத்துவத்தால் கிடைக்கும் பெருமை, புகழ், வளம் போன்றவற்றுக்காக இந்தச் சமூகம் எத்தகைய கீழ்மையான நிலைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக இது முகத்தில் அறைந்து சொல்கிறது.

மறுமலர்ச்சிக்கான விதை

மருத்துவத்தைப் புனிதமாகக் கருதிய காலம் ஒன்று இருந்தது. அதில் மருத்துவர்கள் தேவதூதர்களாக இருந்தனர். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது, புனிதம் என்பது பெயருக்குக்கூட மருத்துவத்தில் இல்லாமல் போய்விட்டது. அசிங்கம் என்றோ இகழ்வு என்றோ எதையும் சமூகத்தின் நன்னடத்தை விதிகளின் அடியில் மறைத்து வைக்க முயலாமல், மருத்துவத்தில் நிகழும் அனைத்து அவலங்களையும் எந்தத் தயக்கமும் இன்றிப் பொதுவெளியில் இந்தப் புத்தகம் துணிவுடன் பேசுகிறது. தவறைச் சுட்டிக்காட்டுவது மட்டும் இந்தப் புத்தகத்தின் நோக்கம் அல்ல.

அது அந்தத் தவறுகளின் காரணிகளைக் குறித்து நம்முடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுகிறது. அந்தக் கலந்துரையாடலின் மூலம், மருத்துவத்துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைகிறது. மறுமலர்ச்சி வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையைப் படிப்பவரின் மனங்களில் இந்தப் புத்தகம் ஆழமாக விதைக்கிறது. இதைப் படித்த அனைவருக்கும் தாம் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என்ற புரிதல் கண்டிப்பாக ஏற்படும். அந்தப் புரிதலே இந்தப் புத்தகத்தின் வெற்றி. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close